கேரள சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை பாவனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
நடிகர் திலிப் தூண்டுதலின்பேரில் குண்டர்கள் சிலர் பாவனாவை 2017-ஆம் ஆண்டு துன்புறுத்தலுக்கு ஆளாக்கினர். கேரள மாநிலத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பாவனா, ஐந்தாண்டுகளுக்கு மேலாக நடிக்காமல் இருந்தார். சமீபத்தில்தான் மலையாளப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் தொடங்கிய 26-வது கேரள சர்வதேச திரைப்பட விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்க பாவனா அழைக்கப்பட்டார். அவரை மேடைக்கு அழைத்த, கேரள மாநில சலாசித்ர அகாடமியின் தலைவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ரஞ்சித், ’எதிர்த்து போராடுவதின் சின்னம்’ என பாவனாவை வர்ணித்தார்.
பாவனா விழா மேடைக்குச் சென்ற போது அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் எழுந்து நின்று அவரை வரவேற்றனர். அவர்களுக்கு கைக்கூப்பியபடியே மேடைக்குச் சென்றார் பாவனா.
குத்துவிளக்கு ஏற்றிப் பேசிய பாவனா, திரைப்படவிழாவின் அங்கமாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி எனக் கூறினார். நல்ல படங்களை உருவாக்குபவர்களும் நல்ல படங்களைப் பார்ப்பவர்களுக்கும் அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராக போராடும் லிசா போன்றவர்களுக்கும் தனது வாழ்த்தை தெரிவிப்பதாகக் கூறினார்.
பாவனாவின் விழா வருகைப் பற்றி ட்விட்டரிலும் பலத்த வரவேற்பு கிடைத்தது. பாதிக்கப்பட்ட பெண் இப்படி விழா மேடைகளுக்கு வருவது உறுதியான செய்தியை சமூகத்துக்குச் சொல்வதாக சிலர் எழுதினர். திரைப்பட விழா மேடையில் பாவனாவைப் பார்த்தது ‘சிலிர்ப்பூட்டியதாகவும் சிலர் பகிர்ந்துகொண்டனர்.
கடந்த வாரம், பாவனா சமூக ஊடகங்களில் ஓர் உணர்ச்சி மிக்க குறிப்பை எழுதியிருந்தார். அதில், “பாதிக்கப்பட்டவர் என்ற நிலையில் இருந்து, உயிர் பிழைத்தவராக மாறிய தனது பயணத்தைப் பற்றி எழுதியிருந்த அவர், அது ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல எனவும் இப்போது பல குரல்கள் தனக்காக பேசுவதைக் கேட்கும்போது இந்த நீதிக்கான போராட்டத்தில் தான் தனியாக இல்லை என்பதை மட்டும் தான் அறிவேன் எனவும் உணர்ச்சி ததும்ப எழுதியிருந்தார்.