கல்லூரி வளாகங்களில் ஹிஜாப் தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகிய மாணவிகளை பாஜக மூத்த தலைவரும், உடுப்பி அரசுப் பல்கலைக் கழக மேம்பாட்டுக் குழுவின் துணைத் தலைவருமான யஷ்பால் சுவர்ணா, “தேச விரோதிகள்” என்று கூறினார்.
பியூ கல்லூரி மாணவிகள் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. ஹிஜாப் இஸ்லாத்தின் இன்றியமையாத மதப் பழக்கம் அல்ல என்றும் எல்லோருக்குமான ஒரே சீருடை என்பது ஒரு நியாயமான கட்டுப்பாடு என்றும் அப்போது நீதிமன்றம் கூறியது.
இந்த நிலையில் பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தேசிய பொதுச்செயலாளர் யஷ்பால், இவர்கள் மாணவிகள் அல்ல, தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அறிக்கை கொடுப்பதன் மூலம், கற்றறிந்த நீதிபதிகளை புறக்கணிக்கிறார்கள். அவர்களின் ஊடக அறிக்கை நீதிமன்ற அவமதிப்புக்கு சமம் என்றார்.
மேலும். கற்றறிந்த நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும், சட்டத்திற்கு எதிரானதாகவும் இந்த மாணவர்கள் கூறும்போது, அவர்களிடமிருந்து நாட்டுக்காக நாம் என்ன எதிர்பார்க்க வேண்டும்? அவர்கள் தேசவிரோதிகள் என்பதை மட்டும் நிரூபித்துள்ளனர் எனக் கூறியுள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், முழு நாட்டுக்கும் நல்லது என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கும் என்றும் ய்ஷ்பால் கூறியுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்த கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, முஸ்லீம்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.