வனப்பகுதிக்குள் மேய்ச்சல் தடை செய்யப்பட்டதால் எலும்பும் தோலுமாக காட்சி அளிக்கும் தேனி மலை மாடுகளின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த மாடுகளுக்காக விலங்குகள் நல அமைப்பான பீடா குரல் கொடுக்காதது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ப்பு மாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்குள் நுழைய தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேனி மாவட்டம், மேகமலை வனவிலங்கு சரணாலயத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு வனத்துறை அனுமதி வழங்குவதைத் தடுக்கக் கோரி ஜி.திருமுருகன் தாக்கல் செய்த பொதுநல வழக்கின் அடிப்படையில் நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சதீஷ்குமார் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கால்நடை மேய்ச்சல் மனிதகுலத்தின் பழமையான தொழில்களில் ஒன்றாக உள்ளது. மேலும் விவசாய நடைமுறைகள், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இது கணிசமாகக் குறைந்துள்ளது. ஆனால், மலைப்பகுதிகளில் பாரம்பரியமாக காடுகளை நம்பியிருக்கும் பழங்குடி மக்களுக்கும் பிற மக்களுக்கும் கால்நடை மேய்ச்சல் ஒரு முக்கிய வாழ்வாதாரமாக தொடர்கிறது.
மலைப்பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகள் வனப்பகுதிக்குள் சென்று மேய்ச்சலுக்குப் பிறகு இயற்கையாகவே கொட்டகைகளுக்குத் திரும்பும். பழங்குடியினர் மட்டுமல்ல, வன கால்நடைகளை நம்பியிருக்கும் மக்களும் இந்த மாடுகளை நம்பி உள்ளனர். உழவுக்காகவும் இந்த மாடுகளை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய பின்னணியில் வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு தடை விதித்திருப்பது மக்களுக்கு பெரும் அடியாக மாறியுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் இத்தனை ஆண்டுகளாக கால்நடைகளும் வனவிலங்குகளும் இணைந்து வாழ்ந்து வரும் சூழலில் இது தேவையற்ற தடை என பழங்குடி மக்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வன உரிமைச் சட்டம் 2006, பழங்குடியின மக்கள் மற்றும் வனவாசிகளின் பாரம்பரிய வன உரிமைகளை அங்கீகரிப்பதோடு, மேய்ச்சல் அவர்களின் சமூக வன உரிமைகளாக சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில் மேய்ச்சல் தடை செய்யப்பட்டதால் பட்டியில் அடைக்கப்பட்ட தேனி மலைமாடுகள் மெலிந்துபோய் எலும்பும் தோலாகி சாவை எதிர்பார்த்து நிற்பதாக வருத்தத்துடன் தெரிவித்தனர்.
முட்டை சாப்பிடுவது பெண் கோழிகளை துன்புறுத்துவதாகும் என பெண்கள் தினத்தில் போஸ்டர் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த பீடா அமைப்பு, எலும்பும் தோலுமாக சாவை எதிர்நோக்கி காத்திருக்கும் தேனி மலை மாடுகளுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை என சமூக ஊடகங்களில் பலர் கேட்டு வருகின்றனர்.