ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் அடிப்படை நடைமுறை இல்லை என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் அம் மாநில அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து, உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ. கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். எனினும் அவர்கள் பள்ளி வளாகத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
பின்னர், கர்நாடகாவின் பிற பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே, ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவியரில் சிலர் காவி துண்டு அணிந்து வரத் தொடங்கியதால் பதற்றம் அதிகரித்தது. இந்நிலையில், ஹிஜாப் தடையை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜேஎம் காஜி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்நிலையில், ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, தீர்ப்பை வாசித்தார். அப்போது, ஹிஜாப் அணிவது இஸ்லாமிய நம்பிக்கையின் முக்கிய மத நடைமுறை அல்ல என்று தெரிவித்த தலைமை நீதிபதி, ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பிரிவு 19(2) இன் கீழ் நியாயமான கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக இருக்கும் சீருடைகளை வழங்குவதற்கான தகுதி, அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது எனவும் கர்நாடக உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
கர்நாடகத்தில் ஆளும் பாஜக அரசு, திட்டமிட்டு இஸ்லாமிய சமூகத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக விமர்சனம் எழுந்த நிலையில், இப்போது உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு, அவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை என்ற தீர்ப்பை பயன்படுத்தில் பொது இடங்களில் ஹிஜாப் அணிந்துவரவதை சில கும்பல் தடுக்கப்பார்க்கும் எனவும் பலர் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் எடுத்துச் செல்ல உள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை தொடுத்த இஸ்லாமிய பெண்கள் தரப்பின் வழக்கறிஞர், ஹிஜாப் அணிவதற்கான உரிமையைப் பயன்படுத்திக் கொண்டே இந்தப் பெண்கள் கல்வியைத் தொடர்வார்கள் எனவும் இந்த பெண்கள் நீதிமன்றங்கள் மற்றும் அரசியலமைப்பு மீது நம்பிக்கை இழக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.