சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ருமேனிய மேயர் மிஹாய் ஏஞ்சலுடன் வாக்குவாதம் செய்த வீடியோ சமீபத்தில் வைரலானது. வீடியோவில், ரஷ்யா-உக்ரைன் போரால் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதற்காக ருமேனியாவுக்குச் சென்ற சிந்தியா மாணர்வர்களிடையே பேசுகிறார். அப்போது ஸ்னாகோவ் நகர மேயர் தடுத்து நிறுத்தி, “அவர்கள் வீட்டிற்குச் செல்வது பற்றி அவர்களிடம் விளக்குங்கள். நான் தங்குமிடம் தந்தேன், உணவு தந்தேன் அவர்களுக்குத் தேவையான உதவி செய்தேன் எனக்கூறி நீங்கள் இதைச் செய்யவில்லை என காட்டமாகக் கூறுகிறார். அப்போது மாணவர்கள் கை தட்டுகின்றனர்.
இந்திய ஊடகம் ஒன்றிடம் இதுகுறித்து பேசிய, ருமேனியா மேயர், அரசியல் முறைகேடு ஒன்றைத் தேடவில்லை என்றும் இந்திய மாணவர்கள் எப்போது வீட்டுக்குத் திரும்புவார்கள் என்பதை மட்டுமே தெரிந்துகொள்ள விரும்பியதாகவும் கூறியுள்ளார்.
ரோமானியா 157 இந்திய மாணவர்களுக்கு தஞ்சமளித்ததாகவும், ஸ்னாகோவ் பிராந்தியத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு உணவு மற்றும் தேவையான பொருட்களை மக்கள் வழங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அமைச்சர் சிந்தியா, இந்தியர்கள் தாயகம் திரும்பும் விமானத்தின் விவரங்களை வழங்குவதற்குப் பதிலாக, கேமராக்களுடன் வந்து, அவர்கள் நாய்களை எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதைப் பற்றியும் மேலும் சில விஷயங்களைப் பற்றியும் பேசியதைக் கண்டு தான் கோபமடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
“அவர் ஒரு தற்புகழ்ச்சி பேச்சை பேசவிருந்தார், அது போர் சூழலிலிருந்து வெளியேறி வீட்டிற்குச் செல்ல விரும்பிய மாணவர்களுக்கு ஆறுதல் அளிக்கவில்லை” எனவும் ஊடகத்திடம் மேயர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், மத்திய அமைச்சரை இடை மறித்த காரணத்துக்காக பலர் ட்ரோல் செய்வதாக ருமேனிய மேயர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
தான் ஒரு அரசியல்வாதிதான் என்றாலும் தனது சொந்த மக்களிடமிருந்து அல்லாமல், வெளிநாட்டு மக்களிடமிருந்து வெறுப்பூட்டும் செய்தியைப் பெறுவது இதுவே முதல் முறை எனவும் இந்திய மாணவர்களிடம் கருணை காட்டியதற்காக இந்த மிரட்டல்களை எதிர்பார்க்கவில்லை எனவும் மனம் நொந்து பேசியுள்ளார்.
ருமேனிய மேயரின் உதவியுடன் இந்தியா திரும்பிய மாணவர்கள் அவருக்கு நன்றி தெரிவித்த நிலையில், சிந்தியா அடித்த பி. ஆர் ஸ்டண்டுகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.