தெருவுக்கு நாலு பேர் எழுதினால் என்ன தப்பு? மு. அகமது இக்பால்

எழுத்தும் எழுத்து ஜனநாயகமும்

1982, 83இல் இருந்து சென்னை புத்தக கண்காட்சியை பார்த்து வருகின்றேன், நூல்களை வாங்கி வருகின்றேன். அப்போது அண்ணா சாலை காயிதே மில்லத் பெண்கள் கல்லூரி மைதானத்தில் நடந்தது.

40 அல்லது 50 பதிப்பாளர்கள் மட்டுமே அரங்கு அமைப்பார்கள். அன்னம், அகரம், வானதி, தமிழ்ப்புத்தகாலயம், நர்மதா, காவ்யா, அலைகள், என் சி பி எச், சவ்த் விஷன், க்ரியா, தென்னிந்திய சைவ சித்தாந்த கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், நேஷனல் புக் ட்ரஸ்ட், சாகித்ய அகாடமி, சாளரம் ஆகிய தமிழ்ப்பதிப்பாளர்கள், தி ஹிந்து, ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ், ஹிக்கின்போதாம் போன்ற ஆங்கில நிறுவனங்களின் ஸ்டால்கள், வழக்கம்போல வெளியே பிளாட்பாரத்தில் பழைய நூல்கள் என அன்றைய மதிப்பில் 400, 500 ரூபாய்க்கு வாங்கினால் பெரிய விசயம்.

குறிப்பிட வேண்டியது இன்னொன்று. 70, 80, ஏன், 90களின் தொடக்கம் வரையும் கூட தமிழில் எழுத்தாளர்கள் என்றால் மீண்டும் மீண்டும் அசோகமித்திரன், தி ஜா, லா ச ரா, சாண்டில்யன், நாபா, பாலகுமாரன், கோவி மணிசேகரன், அமுதா கணேசன், பி டி சாமி, சுஜாதா, புஷ்பா தங்கதுரை, தமிழ் வாணன், ராஜேந்திர குமார், ரா கி ரங்கராஜன், ஜ ரா சுந்தரேசன், மகரிஷி, சு சமுத்திரம், பிரபஞ்சன், வண்ண நிலவன், லட்சுமி, சிவசங்கரி, இந்துமதி, தமிழின் முன்னோடி எழுத்துக்காரர்கள் ஆன பாரதி, பாரதிதாசன், புதுமைப்பித்தன், கு அ, கி ரா, சி சு செ, அகிலன் … இவர்கள் இல்லாமல் வேறு தமிழ் எழுத்தாளர்கள் இன்னும் பலர் அல்லது சிலர், அவ்வளவே.

ஆங்கில நூல்கள் எனில் மவுண்ட்ரோட்டில் இருந்த ஹிக்கின்போதாம் மட்டுமே, எனக்கு தெரிந்து. அன்றைய (இப்போதும்) தி ஹிந்து நாளிதழில் ஞாயிறு வெளியாகும் ஆங்கில நூல்களின் விமர்சனம், மதிப்புரை ஆகியவற்றை வாசித்து விட்டு பெருமூச்சு விட முடியுமே தவிர வாங்குவது என்பது கனவுக்கும் அப்பாற்பட்ட பெருங்கனவு. சமூக அமைப்பில் அடித்தட்டு குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். என் போன்றோருக்கு ஆங்கில நூல்களை வாசிப்பதில் ஆர்வம் இருக்கும், நூல்களை வாங்கும் வசதி இருக்காது.
காலம் மாறும். மாறியது. காலம் எழுத்தாளர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்லவே! 90களுக்கு பின் எழுத்திலும் வாசிப்பிலும் மாற்றம் நிகழ்ந்தது. மேலே நான் குறிப்பிட்டுள்ள மூத்த எழுத்தாளர்கள் மீது இப்போதும் எனக்கு மரியாதை மரியாதை உள்ளது, மாற்றமில்லை.

ஆனால் இவர்களில் பலரது எழுத்துக்களை இப்போது வாசிக்கும்போது சலிப்பு ஏற்படுவதை நான் மறைக்க விரும்பவில்லை. ஓரளவுக்கு மேல் பக்கங்கள் நகர்வதில்லை. இதுதான் கால வெள்ளம் என்பது. காலநதி ஓடுகின்றது, ஓடிக்கொண்டே இருக்கின்றது, வெள்ளத்தில் பல அடித்து செல்லப்படுவதும், பல கரை ஒதுங்குவதும், பல நீரின் அடியில் மூழ்கி ஜலசமாதி அடைவதும், பல வெள்ளத்தை எதிர்கொண்டு நிற்பதும்…. இதுதான் ஓட்டம், உயிரோட்டம். இது வெறும் எழுத்தோடு தொடர்புடையது மட்டுமே அல்ல. சமூக, அரசியல் தளத்தில் ஏற்படும் நிகழ்வுகளும் மாற்றங்களும் அறிவுசார் தளத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும், விதிவிலக்கல்ல.

புதிய எழுத்துகளும் புதிய எழுத்தாளர்களும் புதிய வடிவங்களும் தமிழ் இலக்கிய உலகில் 90களில் காண நேர்ந்தவை. 20, 30 எழுத்தாளர்கள், 40, 50 பதிப்பாளர்கள் என்ற நிலை மாறத்தொடங்கியது. இப்போது 40 வருடங்களுக்கு பிறகு 600க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள்! எழுத்திலும் பல வகை! பல்வேறு புதிய தளங்கள்! 20, 30 பேர் எழுதுவார்கள், 4 கோடி தமிழர்கள் வாசிப்பார்கள் என்ற நிலை மாறி, தெருவுக்கு இரண்டு பேர் எழுதுகின்றார்கள் என்றால் எழுதட்டுமே! வாசிக்கிறவன் வாசித்துவிட்டு போகட்டுமே! தகுதியுள்ளது நிலைக்கும், அல்லவை தள்ளப்படும், அவ்வளவுதான்!

ஒரு புகைப்படம் எடுக்க ஸ்டுடியோ செல்வதே அப்போது திருவிழாதானே! படம் ‘கழுவப்பட்டு’ பிரிண்ட் போடப்பட்டு கைக்கு வர 10 நாள் ஆகும்! இப்போது எல்லோரும் புகைப்படக் கலைஞர்தானே?!

ஒரே ஒரு கதையோ கட்டுரையோ எழுதி தபாலில் ரிட்டர்ன் ஆவதற்கான அஞ்சல் தலையோடு அனுப்பிவிட்டு, இரண்டு மாசம் தூங்காமல் இருந்தால் வருந்துகின்றோம், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்று ஒரு நாள் தபால் வரும்! முகநூலும் ப்ளாக் எனப்படும் வலைப்பூவும் இந்த தடையை உடைக்கவில்லையா? கருத்து ஜனநாயகம் என்பது எவருடைய அங்கீகாரத்திற்காகவும் காத்திருப்பது அல்லவே? கருத்தை வெளிப்படுத்துவதில் இந்த மின்னணு யுகம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருப்பது உண்மைதானே? ஒருவரின் கருத்தை இன்னொருவர் ஏற்பதும் தள்ளுவதும் ஜனநாயகம் என்பதை ஒப்புக்கொள்கின்றேன்.

ஆனால் எவரோ ஓரு பத்திரிகை ஆசிரியர் அல்லது பதிப்பாளரின் கருணை வேண்டி காத்திருக்கும் சர்வாதிகார அணுகுமுறையில் இந்த மின்னணு யுகம் உடைப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மைதானே?
புத்தக விற்பனையும் அவ்வாறே. அமேஸானும் பிளிப்கார்ட்டும் சோப்பும் சீப்பும் மட்டுமே விற்கவில்லை, உலகின் எந்த மூலையிலும் எவர் எழுதுவதையும் என்னால் வாங்கிவிட முடியும். இதற்கு முன் இது பெருங்கனவு மட்டுமேதானே, நான் தொடக்கத்தில் சொன்னதைப்போல? எனக்கு இது மடை திறந்த அல்ல, மடை உடைத்த வெள்ளம்! அறிவுப்பரவல் என்றுதான் இதை நான் மதிப்பிடுவேன். கொள்வது கொள்க, தள்ளுவது தள்ளுக, அவ்வளவுதான்.

அச்சிலும் அவ்வாறே! சுய பதிப்பு எனப்படும் self publishing முறை இன்றைக்கு பல்லாயிரம் எழுத்தாளர்களை உருவாக்கி உள்ளது. மீண்டும் சொல்கின்றேன், எழுதுவது என்பது ஒருவரின் உரிமை மட்டுமே அல்லவே? ஜனநாயகம் இல்லையா? இங்கே யார் எதில் monopoly என்ற உரிமையை தக்க வைத்துக்கொள்ள முடியும்? அல்லது யாருடைய உத்தரவுக்கு யார் காத்திருப்பது? எழுதுவோம்! வாசிப்போம்! எழுத்து, வாசிப்பு, இரண்டிலும் ஜனநாயகம் வேண்டும். காலம் சரியானவற்றை ஏற்கும்.

மு. இக்பால் அகமது, எழுத்தாளர். இவருடைய சமூபத்திய நூல், வள்ளியப்பன் மெஸ்ஸும் மார்கரீட்டா பிஸ்ஸாவும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.