விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இலங்கையில் உச்சக்கட்ட போர் நடைபெற்ற சமயத்தில் ஆமைக்கறி சாப்பிட்டதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் சொன்னது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் காட்டு மானை சுட்டு தனக்கு தலைவர் பிரபாகரன் விருந்து வைத்ததாக சீமான் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு வீடியோவில், “மானை சுடக்கூடாதுன்னு தடை பண்ணிட்டாரு. ஆனா, என் தம்பி வந்திருக்கான் மானை சுடுங்கன்னு சொல்றாரு. உடனே, துப்பாக்கி எடுத்துக்கிட்டு ஒருத்தர், என்ன… அண்ணன் சட்டம் போடுவாரு தம்பிக்காக சட்டத்தை மீறுவாரான்னு கேட்டார்’ என லக லக வென சிரிக்கிறார் சீமான். இது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது. சீமான் கூறுவது பொய்யா, உண்மையா என மீண்டும் பலர் விவாதித்து வருகின்றனர்.
இலங்கை அரசு ஈழத்தமிழர் மீது இறுதிக்கட்ட போர் தொடுத்த 2009–ஆம் ஆண்டு, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் 28 கிலோ ஆமை கறி சாப்பிட்டதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் 2018-ஆம் ஆண்டு தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறினார்.
இறுதிக்கட்ட போரில் பல ஈழத் தமிழர் குழந்தைகளும் பெண்களும் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டு, ஈழப்படைகள் கடும் பின்னடைவை சந்தித்தபோது, புலிகள் தலைவர் விருந்து உண்டாரா என பலர் கேள்வி எழுப்பினர்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மாண்பை குறைப்பதற்காக அவர் ஆடம்பரத்தோடு வாழ்வதாக சித்தரித்து கதைகள் கிளப்பி விடுகிறார்கள்; அதில் சீமானும் அடக்கம் என சிலர் கூறினர்.
இது பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், விடுதலை புலிகளுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் விடுதலை ராசேந்திரனும் சீமான் கூறியது கட்டுக்கதை என விளக்கினர்.
சீமான் பிரபாகரனை 2 நிமிஷம்கூட சந்திக்கவில்லை.. எல்லாம் பொய்.. ஆமைக்கறி சாப்பிட்டேன், மாட்டுக்கறி சாப்பிட்டேன், ஆட்டுக்கறி சாப்பிட்டேன் என்பதெல்லாம் சுத்த பொய், முன்னாள் விடுதலை புலிகள் பலரும் சீமான் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என வைகோ தெளிவுபடுத்தினார்.
இதுபோல, விடுதலை ராசேந்திரன் சீமான் சொன்ன ஆமைக்கறி விருந்து குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
அதில் சினிமா எடுக்க நல்ல இயக்குனர் தேவை என்று பிரபாகரன் கேட்டு கொண்டதன் பேரில் கொளத்தூர் மணி தான் சீமானை தேர்வு செய்து ஈழத்திற்கு அனுப்பி வைத்தார் எனவும் பிரபாகரனை சந்திக்க சீமானுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் பத்து நிமிடம் மட்டும் தான் எனவும் அவர் கூறியிருந்தார்.