2008 ஆம் ஆண்டு அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளை விரைந்து விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் 49 குற்றவாளிகளில் 38 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மற்ற 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இந்தியாவின் சட்ட வரலாற்றில் ஒரே வழக்கில் இத்தனை பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை!
2008, ஜூலை 26 அன்று குஜராத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அகமதாபாத்தில் அரசு மருத்துவமனை, அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் நடத்தும் மருத்துவமனை, வெவ்வேறு பகுதிகளில் ஓடிக்கொண்டிருந்த பேருந்துகள், நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள்கள், கார்கள் மற்றும் பிற இடங்களில் என 22 இடங்களில் குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதில் 56 பேர் கொல்லப்பட்டனர். 200 பேர் காயமடைந்தனர். மொத்தம் வைக்கப்பட்ட 24 குண்டுகளில் அகமதாபாத்தின் கலோல் மற்றும் நரோடாவில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடிக்கவில்லை.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 78 பேரில் 49 பேர் குற்றவாளிகள் என பிப்ரவரி 8ஆம் தேதி சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. மேலும் 28 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும் குற்றம்சாட்டப்பட்ட அயாஸ் சையத் 2019 ஆம் ஆண்டில் இந்த வழக்கில் அப்ரூவராக மாறி சாட்சியம் அளித்தார் இப்போது மன்னிக்கப்பட்டு அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (யுஏபிஏ) பிரிவு 10 மற்றும் 16 (1) (ஏ) (பி) ஆகியவற்றின் கீழ் 38 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. மேலும், மூன்று குற்றங்களுக்கும் தலா 38 பேருக்கு தலா 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மற்ற 11 பேரும் இந்திய தண்டனை சட்ட பிரிவு 302 மற்றும் ஊபா பிரிவுகளின் கீழ் ஆயுள் சிறை தண்டனை அளிக்கப்பட்டனர்.. அவர்களுக்கு தலா 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மேற்கூறிய விதிகளைத் தவிர, சட்டத்தின் ஊபா பிரிவு 20, வெடிக்கும் பொருள்கள் சட்டம் பிரிவு, தேச துரோகம் மற்றும் அரசுக்கு எதிராக போர் தொடுத்தல் ஆகிய நான்கு விதிகளின் கீழ் குற்றவாளிகள் 49 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகளில் ஒருவரான வதோதராவைச் சேர்ந்த முகமது உஸ்மான் அகர்பத்திவாலா என்பவருக்கு மட்டும் ஆயுதச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் 49 பேருக்கும் தண்டனை விதித்தது தவிர, குற்றவாளிகளிடமிருந்து வசூலிக்கப்படும் அபராதத் தொகையில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. உயிரிழந்த 56 பேருக்கு ரூ. 1 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், சிறிய அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்க சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.படேல் உத்தரவிட்டார்.
குஜராத்தில் 2002 முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலை தாக்குதலில் 2000க்கும் அதிகமான முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள். நரோடா பாட்டியா என்கிற குடியிருப்பு பகுதியே உயிரோடு கொளுத்தப்பட்டு சவக்கிடங்கு ஆனது. கர்ப்பிணியின் வயிற்றை அறுத்து தாயும், சேயும் கறுவறுக்கப்பட்டதும், பெஸ்ட் பேக்கரியின் 17 பேரை உயிரோடு எரித்ததும் இந்திய வரலாற்றில் என்றும் அழிக்க முடியாத சுவடுகளாக இருக்கும். குஜராத் படுகொலை வழக்கில் ஒருவருக்குக்கூட தூக்கு தண்டனை விதிக்கப்படவில்லை என்பதோடு பலர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்த படுகொலைக்கு பழிவாங்குவதற்காக தடை செய்யப்பட்ட அமைப்பான சிமி அமைப்பு தொடர்புடைய இந்தியன் முஜாஹிதீன்களால் நடத்தப்பட்ட அகமதாபாத் தாக்குதல் வழக்கில் 38 மரண தண்டனை விதித்திருப்பது அரிதினும் அரிதானது என்கிறார் நீதிபதி. இவர்கள் செய்தது தண்டனைக்குரிய குற்றம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை; ஆனால், உலக ஜனநாயக நாடுகள் மரண தண்டனையை ஒழிக்க குரல் கொடுக்கும் இந்த வேளையில், முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிப்பதாக பெயர்பெற்ற அரசின் ஆட்சியில் பெரிய எண்ணிக்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது ஜனநாயக சூழலுக்கு நல்லதல்ல என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.