சிமி மீனா
பூ.கொ.சரவணன் மீதான பாலியல் புகார் அதிர்ச்சியளிக்கிறது. பலருடைய நட்பு தொடர்பற்றுப் போனதைப் போல் அவரோடும் இப்போது தொடர்பில்லை என்றாலும் சில வருடங்களுக்கு முன்பு வரை நல்ல நண்பராக இருந்தவர். அக்கா என்று உறவு சொல்லி அழைத்தவர். கடைசியாக ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்வில் சந்தித்ததை இப்போது எண்ணிப் பார்க்கிறேன். தனது முகநூல் ஸ்டேட்டஸ்களைப் போலவே எவ்வளவு முற்போக்காகப் பேசினார்!!
ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவிற்கு எதிராக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். ஆனால் அவர்கள் தான் நம்மைவிட அதிகமாக உழைக்கிறார்கள் என்று சொன்னார். பேச்சு எப்படியோ எங்கள் இருவரின் திருமணம் குறித்துத் திசைமாறியது. அப்போது நாங்கள் இருவருமே சிங்கிள். இந்த சமூகக் கட்டமைப்பை வீழ்த்திய சில திருமண உறவுகள் குறித்துப் பேசினார். தன் கல்லூரி சீனியர் ஒருவர் தன்னை விட வயதில் மூத்த ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார் என்றும் ஆனால் அவர்களுக்கு இடையில் அவ்வளவு காதல் இருந்தது என்றும் அப்படியான வேறு சில திருமணத் தம்பதிகளைப் பற்றியும் சொன்னார். புத்தக நிகழ்வு தொடங்குவதற்குத் தாமதமானதால் பக்கத்தில் இருந்த ஒரு ரெஸ்டாரண்டுக்குப் போய் காஃபியும் ஸ்நாக்சும் சாப்பிட்டபடி நாங்கள் இருவர் மட்டும் இதை எல்லாம் பேசிக்கொண்டிருந்தோம் என்பதையும் இந்நேரத்தில் நினைத்துக்கொள்கிறேன்.
பூ.கொ.சரவணனைத் தெரிந்த அளவிற்கு அவர் மீது புகார் அளித்த பெண்களைப் பற்றித் தெரியாது. அந்தப் பெண்களில் ஒருவரின் பெயர்கூடத் தெரியாது. ஆனாலும் இந்தப் பிரச்சினையில் அந்தப் பெண்களின் பக்கம் நிற்கிறேன். அதாவது நியாயத்தின் பக்கம் நிற்கிறேன். பாலியல் புகார்கள் என்பவை ஏதோ பொழுது போகாமல் கிளப்பிவிடுகிற Gossip கள் அல்ல. அவை பெண்களின் வாழ்வியலையும் உளவியலையும் பாதிக்கக்கூடிய வன்முறைச் செயல்பாடுகள். ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சேர்ந்து முறையிடும் போது, சம்பந்தப்பட்டவர் அதுகுறித்து ஒரு கள்ளமவுனம் சாதிக்கும் போது அந்தப் புகாரில் உண்மையில்லாமல் போவதற்கு ஒரு துளியும் வாய்ப்பில்லை.
பொதுவாக இப்படியான பாலியல் புகார்களில் பெண்கள் முதன்மையாய்க் கோருவது குற்றமிழைத்தவர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்பது தான். விகடனில் வெளிவந்த கட்டுரையிலும் ஒரு பெண் அதை வலியுறுத்தியுள்ளார். அதை ஏற்றுக்கொண்டு சரவணன் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும். இப்படியான கீழ்த்தரமான செயல்களை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதைவிடுத்துத் தனது பதவி அதிகாரத்தையும் நட்புப் பட்டியலின் பலத்தையும் வைத்துக்கொண்டு இதிலிருந்து நழுவிவிட நினைப்பது அயோக்கியத்தனம்.
இந்தப் புகாரை வெளிக்கொணர்ந்த விகடன் நிருபர் கார்த்திக்கிற்கு நன்றி.. இதன்மூலம் நீதி கிடைக்கிறதோ இல்லையோ குற்றமிழைத்தவர்களின் லட்சணம் அம்பலமாவதும் இதே போன்ற கயமைத்தனங்களில் ஈடுபடுவோருக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்பதுமே ஒரு வகை வெற்றி தான். துணிந்து வெளிப்படுத்திய பெண்களுக்குப் பாராட்டுகள். தன் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் நிருபர் என்றும் பாராமல் இதை வெளியிட்டதற்காக விகடனுக்கு நன்றிகள். வினை விதைத்தவர் அதை அறுவடை செய்துதானே ஆகவேண்டும்.