பெருந்தொற்று இளம் இந்தியாவின் மனநல மூலதனத்தை எப்படி சிதைக்கிறது?

கட்டுரையாளர் : பலோமி ராய்

 

தமிழில் : கை.அறிவழகன்

மனநல மூலதனம் (மனவூக்கம்) உலகின் சமூக, பொருளாதார மேம்பாட்டில் ஒரு மிக முக்கியமான காரணி, வலுவான அறிவாற்றல் திறன்கள், ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் மேம்பட்ட செயல்திறன் போன்ற மானுட மேம்பாடுகள் சிறந்து விளங்க மனநல மூலதனம் மிக முக்கியமானது. உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் மனவூக்கம், நல்ல மனநல செயல்பாடு தேவைப்படுகிறது. இந்தியா ஒரு குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடு, இங்கே மனநல பராமரிப்பு ஒரு இரண்டாம் தர குடிமகனாகவே இருந்து வருகிறது.

பெருந்தொற்றின் போது நிகழ்ந்து வருகிற பொருளாதார சரிவு மற்றும் பல்வேறு நெருக்கடிகள் தனிமனிதர்களின் உளவியல் செயல்பாடுகளில் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கி உள்ளது. இந்த பெருந்தொற்று கொண்டுவந்திருக்கும் உளவியல் நெருக்கடிக்கு இந்தியா தயாராக இல்லை, இந்தியக் கல்வி முறையும் சரி, வாழ்க்கை முறையும் சரி இத்தகைய உளவியல் நெருக்கடிகளை அல்லது மனநலம் குறித்த விஷயங்களைக் கையாள்வது குறித்த எந்த ஒரு பழக்கத்திலும் ஈடுபட்டதில்லை.

இந்தப் புள்ளியில், ஒரு மிக முக்கியமான கேள்வி எழுகிறது, பெருந்தொற்றால் நிகழ்ந்திருக்கும் இந்த உளவியல் சிதைவு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, செயல்பாட்டை எப்படி பாதிக்கப்போகிறது?

2020 ஆம் ஆண்டில், 32 % வயதுக்கு வந்த அமெரிக்கர்கள் மனஅழுத்தம் மற்றும் கவலை தோய்ந்த மனநிலை பாதிப்புக்கு ஆளானார்கள், இந்த விகிதமானது 2019 ஆம் ஆண்டில் 11 % ஆக இருந்தது, ஜனவரி 2021 இல் அதிர்ச்சியளிக்கும் விதமாக இது 41.1 % ஆக அதிகரித்திருக்கிறது. தோற்று நோயால் உண்டான தனிமை, வேலையின்மை மற்றும் பொருளாதார சிக்கல்கள் ஆகியவை மனநலத்தை சிதைப்பதில் கணிசமாக பங்காற்றி இருக்கிறது. 18 முதல் 24 வயதுடைய இளம் வயதினரின் 56% க்கும் அதிகமானவர்கள் மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்டார்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 29.3% பாதிப்புக்குள்ளானார்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை மகிழ்ச்சிகரமான நாடுகளின் குறியீட்டில் பங்கேற்ற 149 நாடுகளில் 139 ஆவது இடத்தை எட்டியிருக்கிறது, பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளின் படி, பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் நெருங்கிய உறவினர்களை பெருந்தொற்றுக்குப் பலி கொடுத்த கவலையிலும், இனம்புரியாத அச்சத்திலும் இருக்கிறார்கள். கங்கை நதியில் மிதக்கும் பிணங்களின் அச்சமூட்டும் புகைப்படங்கள், எந்த ஆதரவும் இல்லாத மருத்துவப் பணியாளர்கள், நிலைமையின் தீவிரத்தைப் பற்றிய எந்த உணர்வும் இல்லாத செயல்படாத அமைச்சர்கள் எல்லாம் சேர்ந்து மே மாதத்தில் ஒட்டுமொத்த இந்தியாவின் மனநல செயல்பாடுகளை பெரிய அளவில் பாதித்திருக்கிறது.

குறிப்பாக இளைய இந்தியாவின் மனநலம் கவலைக்குரியதாகி இருக்கிறது. 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 65 % பேர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சரியான நேரத்தில் இதற்கான தீர்வுகளை எட்டாவிட்டால், இந்தியாவின் இளைய சமூகம் கவலைக்குரிய நீண்ட கால பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும் என்றும் இது தேசத்தின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறன்களை அழித்து பொருளாதார விளைவுகளுக்கு இட்டுச் செல்லும் என்று பன்னாட்டு தொழிலாளர் நிறுவனம் (The International Labour Organisation) எச்சரிக்கிறது.

இத்தகைய விளைவுகள் இரண்டு பரிமாணங்களை அடையும் வாய்ப்புள்ளது: மூளை வறட்சி மற்றும் கூட்டு சமூக வாழ்க்கையில் உருவாகும் திறனிழப்பு. இந்தியா இப்போது அரசியல் திறமையின்மை, உடல் மற்றும் மன நலத்தின் பாதுகாப்பை எட்டமுடியாத சூழல் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் காலியாகிப் போன ஒரு நிலவியல் சூழலில் வாழ்கிறது. இவை மூளை வறட்சியை ஏற்கனவே உண்டாக்கி விட்டிருக்கிறது. வேலையிழப்பு, ஏழ்மை மற்றும் பின்தங்கிய மனநலம் போன்றவை இந்தியாவின் மக்கள்தொகைப் பங்களிப்பின் ஊக்க விகிதம் தரும் நன்மைகளை அடைய விடாமல் செய்யும்.

பொருளாதார முடக்கத்தின் விளைவான வேலையின்மையும், வறுமையும் மோசமான மனநலத்திற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கலாம், இது குறைந்த பொருளாதார உற்பத்தித் திறனையும், மோசமான செயல் திறனையும் நோக்கி தேசத்தை வழி நடத்துகிறது. இந்த தீய சுழற்சியின் விளைவு இந்தியாவின் மனநல நெருக்கடியை அதிகரிக்கிறது. உடல்நலம் மற்றும் மனநலப் பாதுகாப்பு விஷயங்களில் தேவையான அளவு முதலீடுகள் செய்து இத்தகைய பாதிப்புகளில் இருந்து இளைய இந்தியாவை அரசால் பாதுகாக்க முடியும். பொருளாதாரப் பின்னடைவு இதுவரை 41 லட்சம் வேலைகளை பறித்திருக்கிறது. வேலையில் இருப்பவர்களோ ஒரு பதட்டமான சூழலிலேயே இருக்கிறார்கள், போட்டி மிகுந்த வேலைவாய்ப்புச் சந்தை பலரை வேலை இழந்து விடுவோமோ என்கிற அச்சத்திலேயே வைத்திருக்கிறது. அதிக வேலை வாங்கும் முதலாளிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சம்பளத்தை உயர்த்துவதை நிறுத்திக் கொண்டார்கள்.

ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில் கூட ஒருவரை வேலைக்கு வருமாறு நிறுவனங்கள் வற்புறுத்துவதாக சில செய்திகள் கூறுகின்றன, சிக்கலான சூழலிலும் பணியாற்றுபவர்கள் என்கிற புகழ் மேடைக் கலாச்சாரத்தின் மீது நின்று தனியார் நிறுவனங்களில் இத்தகைய செயல்கள் நடைபெறுகிறது. இதன் பொருள் முதிர்ச்சியற்ற மனநிலை: வேலையின்மை என்கிற சூழலின் பாதுகாப்பின்மையை ஈடுசெய்ய, பலர் தங்கள் வேலையை வழிபடுகிறார்கள். சந்தர்ப்பவாத நிறுவனங்களும் ஊதியமற்ற வேலைவாய்ப்புகளை வழங்கி தங்களை வளர்த்துக் கொள்கின்றன.

குடும்பத்தில் நிலவும் அசாதாரண சூழலிலும் வேலைக்குப் போவது அவர்களை நீர்த்துப் போகச் செய்யும், மென்மேலும் அவர்களது மனநலம் சிதைவடையும், தேசத்தின் தொழிலாளர்கள் முற்றிலுமாக முடங்கிப் போவார்கள்.

பாலின விளைவுகள்

பெருந்தொற்றின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகளால் உருவான மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆண்களையும் பெண்களையும் வெவ்வேறுவிதமாக பாதித்துள்ளது. உலகளாவிய அளவில் முழு முடக்கத்தின் போது, உடல், பொருளாதார, உணர்ச்சி மற்றும் பாலியல் உள்ளடங்கிய தனிமனித உறவுகளில் (குறிப்பாக கணவன் – மனைவி உறவு) வன்முறை கணிசமாக அதிகரித்திருக்கிறது. சுமார் 70% பெண்கள் முன்னணி மருத்துவப் பணியாளர்கள் உளவியல் அழுத்தத்தால் துயரடைந்திருக்கிறார்கள். அமெரிக்காவில், 27% பெண்கள் மன நல வீழ்ச்சியை அடைந்திருக்கிறார்கள், இது ஆண்களில் 10 % ஆக இருந்தது.

இந்த சமமின்மைக்குக் காரணம், ஊதியமற்ற நிலையில் பெண்கள் வீட்டு வேலைகளை செய்வது, மேலும் அவர்கள் குடும்பத்தின் உணவுத் தேவைகளையும், உடல்நலத்தையும் கவனித்துக் கொள்கிறார்கள், மேற்கு வங்கத்தில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் தங்கள் வீடுகளுக்கான அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்த 160 பேரில் 26 பேர் மட்டுமே ஆண்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது வேலை செய்யும் பெண்களிடத்தில் இரட்டிப்பு சுமையாகிறது. வீட்டிலும், பணியிடத்திலும் இவர்கள் மன அழுத்தமடைகிறார்கள்.

கூடுதலாக, 50 % பெண்கள் இந்தப் பெருந்தொற்று காலத்தில் வருமானமிழந்திருக்கிறார்கள், ஒரு ஆணுக்கு மூன்று பெண்கள் என்ற அளவில் இந்த வருமானமிழப்பு நிகழ்ந்திருக்கிறது. பெருந்தொற்றின் கொடையாக பணியிடத்தில் மனஅழுத்தம் மற்றும் நீர்த்துப் போதலில் பெண்களின் விகிதமானது 2019 இல் 34 % ஆக இருந்து 2020 இல் 75 % ஆக உயர்ந்திருக்கிறது, ஆண்களில் இது 59 % ஆக இருந்தது. பெருந்தொற்று காலத்துக்கு முன்னதாகவே 38 % வேலைக்குப் போகும் பெண்கள் உளவியல் நோய்களுக்கு உள்ளாகி இருந்தார்கள், ஒரு உணர்வற்ற நிலைக்கு அவர்களைத் தள்ளி இருக்கிறது.

முன்னோக்கிச் செல்லுதல்

இந்திய மக்கள் தொகையில் சுமார் 71% பேர் இன்னும் மனநோயை மிக இலகுவாகவும், கவனக்குறைவாகவும் அணுகுகின்றனர். கோவிட்-19 பெருந்தொற்று வருவதற்கு முன்பாகவே, மோசமான மனநலம் காரணமாக 2012 முதல் 2030 வரை இந்தியா 75 லட்சம் கோடிகளை இழக்கும் என்று ஒரு பொருளாதார மதிப்பீடு சொல்கிறது, இது பெருந்தொற்றுக்கு முந்தைய கணக்கு, இப்போது அது கணிசமாக அதிகரித்திருக்கும்.

மக்கள் தொகை இந்தியாவின் முக்கியமான நன்மை தரும் ஆற்றல்களில் ஒன்றாக இருப்பதால், ஆரோக்கியமான மற்றும் உற்பத்தித் திறன் கொண்ட தொழிலாளர் சமூக அமைப்பை வளர்ப்பது முக்கியமானது. மனநலத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும், மன நலத்தை மேம்படுத்த இப்போது கிடைத்திருக்கும் காரணியைப் பயன்படுத்தி திட்டமிடுவது காலத்தின் தேவை. ஒரு சமூகப் பேரழிவு அல்லது சிதைவு ஏற்படுவதை இது தடுக்கும்.

துரதிஷ்டவசமாக இந்திய அரசு தொடர்ந்து இந்த விமர்சனங்களை தொடர்ந்து மறைக்க முயற்சி செய்கிறது, “The Lancet” போன்ற மருத்துவ இதழ்களின் தலையங்கத்திற்குப் பிறகு 2020 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 % ஆக இருந்த மருத்துவ நலன்களுக்காக ஒதுக்கீடு 1.26 % என்ற மிகச்சிறிய அளவில் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. வரவு செலவுத் திட்டங்களில் மருத்துவ நலன்களுக்கு ஒதுக்கீடு செய்யும் 189 நாடுகளின் பட்டியலில் இந்தியா 179 ஆவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சிக்கலில் இருந்து இந்தியா விடுபடவேண்டுமென்றால், மனநலம் சார்ந்த செயல்திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும், வேலைவாய்ப்பை உறுதி செய்யும் திட்டங்கள், சமூக மற்றும் குடும்ப ஆதரவுத் திட்டங்கள் மூலமாகத்தான் பொருளாதார மேம்பாட்டை அடைய முடியும். சமூக மற்றும் சிறப்பு மனநல செயல்திட்டங்களை வடிவமைப்பது தொழிலாளர்களின் செயத்திறனை அதிகரிக்கவும், சமூக உணர்வற்ற தன்மையை நீக்கவும் வழிவகை செய்யும்.

உடல் நலமும், மனநலமும் ஒருங்கே அமைந்த பொருளாதாரமே, முதலீடு மற்றும் சேமிப்பை முன்னெடுக்கும் சமூகமாக இருக்கும், குறிப்பாக பெருந்தொற்று போன்ற பேரிடர்க்காலகளை எதிர்த்துப் போராடவும், வளர்ச்சியைக் கட்டமைக்கவும் இளைய சமூகம் தன்னைத் தயார் படுத்திக்கொள்ள அதுவே ஊன்றுகோலாக இருக்கும். ஆனால் நெருக்கடியைக் கடந்து செல்ல நினைப்பது எதிர்காலத்தில் இந்தியாவின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும்.

கட்டுரையாளர் : பலோமி ராய் – தற்போது ஷ்யாமா பிரசாத் கல்லூரியின் பொருளாதார ஆசிரியர், மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஆய்வறிஞர்.

 

நன்றி : science.thewire.in

கை.அறிவழகன், எழுத்தாளர்.

முகப்புப் படம்: The conversation

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.