கீழத் தஞ்சையின் சாதிய வன்கொடுமைகள் | ஒரு பண்ணையடிமையின் விடுதலை போராட்டம்

எழுத்தாளர் யுகபாரதி

தோழர் என்.ராமகிருஷ்ணனின் `ஒரு பண்ணையடிமையின் விடுதலை போராட்டம்’ நூலை மீண்டும் ஒருமுறை வாசிக்கத் தோன்றிற்று.

1993இல் `பண்ணையடிமைத் தனத்திற்கு எதிரான போராட்டத்தில் பி.எஸ்.தனுஷ்கோடி’ என்னும் தலைப்பில் வெளிவந்த அதே நூல், 2010இல் மேற்கூறிய தலைப்புடன் வந்தது.

ஒன்றிணைந்த அன்றைய தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக, கீழத் தஞ்சையில் நடந்த சாதிய வன்கொடுமைகளை எழுதியும் சொல்லியும் மாளாது.

இன்றுவரை கம்யூனிஸ்ட்டுக் கட்சி அங்கே உயிர்ப்புடன் இருப்பதற்குத் தோழர் சீனிவாசராவ் போன்றோரின் அர்ப்பணிப்பும் ஆவேசமும்மிக்க போராட்டங்களே காரணம்.

தோழர்களை ஒன்றிணைத்துப் போராடுவதில் அவர் மேற்கொண்ட உத்திகள் வித்யாசமானவை. இன்றோ கூலியாளுக்கும் பண்ணையாளுக்கும் வேறுபாடு தெரியாத அறிவுஜீவிகள், எடுத்தேன் கவிழ்த்தேன் என எதையெதையோ எழுதி வருகிறார்கள்.

நிலபுரத்துவத்தின் அட்டூழியத்தையும் அராஜகத்தை எதிர்த்துப் போராடிய தோழர் பி.எஸ்.தனுஷ்கோடி என்னும் தனிக்கொடியின் வாழ்க்கை சரிதமே இந்நூல்.

முதலில் `மகாத்மா காந்திக்கு ஜே’ என கதர் கூட்டத்தில் கலந்துகொண்டவரை, பார்ப்பனவாதிகளும் ராமு படையாச்சிகளும் எப்படி நடத்தினார்கள் என்பதெல்லாம் நூலில் வருகிறது.

அக்கரைக்கு இக்கரை பச்சையெனக் கருஞ்சட்டையை நோக்கிப்போனால், அங்கேயும் சன்னாவூர் பக்கிரிசாமிகள், டீக்கடையில் கட்டிவைத்துத் தோலை உரித்திருக்கிறார்கள்.

கொள்கைகளைக் கட்டமைக்கும் தலைவர்களுக்குத் தம்முடைய கட்சியில் யார் யார் சாதியவாதிகள் எனப் பார்க்கவோ, களையெடுக்கவோ முடிவதில்லை. அதன் தொடர்ச்சியில் தனிநபர்களின் கேடுகள் தத்துவ வீழ்ச்சியாகப் பார்க்கப்பட்டு, கறைபூசும் காரியங்கள் நடந்தேறுகின்றன.

ஓடுகிற ஓட்டத்தில் எப்படியோ எல்லாக் கட்சியிலும் தர்மசங்கடமும் சனாதனமும் ஊடுருவிவிடுகின்றன.
சுயசாதி பெருமிதங்களில் அறிவுச் சமூகமே ஆட்பட்டுக்கிடக்கையில் உண்மையைக் கெள்ளியெடுப்பது அத்தனை எளிதல்ல.

நூலின் பல பகுதிகள் கண்ணீரை வரவழைப்பவை. சாணிப்பாலும் சவுக்கடியும் தண்டனையாக வழங்கப்பட்டக் கொடூரக்காட்சிகளை வாசிக்கவே இயலவில்லை.

பண்ணையில் வேலை செய்யும் ஆண்களும் பெண்களும் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென எழுதாத சட்டங்களை நடைமுறைப்படுத்திய நிலபிரபுக்கள், புளிய விளாரில் எளியவர்களைப் புண்ணாக்கிய வரலாறு இரத்த ஓட்டத்தை நிர்மூலப்படுத்துகிறது.

வாய்திறந்து பேசவும் வக்கற்று நின்ற சூழலில், எல்லாவற்றுக்கும் முடிவுகட்ட பி.எஸ். தனுஷ்கோடி தேர்ந்தெடுத்தது பொதுவுடமைப் பாதையையே என்பதுதான் நூலின் சாரம்.

சவுத் ஏசின் பதிப்பகத்துடன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து இந்நூலை வெளியிட்டிருக்கிறது.
வீரம் செறிந்த தனுஷ்கோடியின் போராட்ட வாழ்வை இன்றைய என் திரைப்படத் தம்பிகளுக்குப் பரிந்துரைக்கிறேன்.

ஏனெனில், சினிமாவிலும் கற்பனையிலும் சிந்திக்கமுடியாத வன்மங்களும் வக்கிரங்களும் நிலபிரபுக்களின் அன்றாட நடவடிக்கைகளாக இருந்திருக்கின்றன.

ஒரு தலித்தாகவும் கம்யூனிஸ்டாகவும் தோழர் தனுஷ்கோடி எதிர்கொண்ட போராட்ட வாழ்வைப் புரிந்துகொள்வது காலத்தின் அவசியம். சருகுகளாகச் சத்தமிடாமல் விதையாக விழுவதே விவேகம்.

நட்பு, பகை என்றெல்லாம் முரண்களுக்குப் பெயரிட வேண்டியதில்லை. மொத்த முரண்களையும் துடைத்தெறிய, வாழ்ந்து மடிந்த போராளிகளின் வாழ்வைப் படிப்பதே வியாகூலம்.

`அசுரன்’ திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் தனுஷ், தன் மகன் சிதம்பரத்தைப் பார்த்து, “ஒரே மண்ணுல பொறக்குறோம், ஒரே மொழி பேசுதோம் இது போதாதா நாம சேர்ந்து வாழறத்துக்கு!” என்பார். வாழ்வதற்கும் போராடுவதற்கும் இணைந்தே செயல்புரிய வேண்டும்.

கேள்வி எழுப்புவதற்கு முன்னே கொஞ்சமாவது களத்தையும் நிஜத்தையும் புரிந்துகொள்ளவது முக்கியம். தம்பிகளையும் தோழர்களாகப் பார்ப்பதே என் பழக்கம்.

யுகபாரதி, எழுத்தாளர்; திரை பாடலாசிரியர்.

முகப்பு படம்: வினவு

வினவில் வெளியான நூல் அறிமுகம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.