கொரோனா பணியின்போது, தலித் மருத்துவ அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதோடு, சாதியை சொல்லி இழிபடுத்தியதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் மீது சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்
குற்றம்சாட்டியுள்ளது. இதில் அமைச்சரின் தலையீடு இருப்பதாகவும் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத் புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
”கொரோனா பணி தொடர்பாக, தலித் மருத்துவ அதிகாரிகள் சொல்வதை, தலித் அல்லாத கீழ் மட்ட மருத்துவ அதிகாரிகள் ஏற்காத போக்கும், தலித் அதிகாரிகளை சாதியை குறிப்பிட்டு இழிவாக திட்டும் போக்கும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
இத்தகைய பிரச்சனை ஒன்றில், ஒரு தலித் மருத்துவ அதிகாரியை , ஓர் இளம் வயது மருத்துவ அதிகாரி இழிவாக திட்டியதோடு ,சட்டையை பிடித்து அடித்தும் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அவர் மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய உறவினர் எனக் கூறப்படுகிறது.
கொரோனா பணி தொடர்பாக ஒரு தலித் மருத்துவ அதிகாரிக்கும், மற்றோரு இளம் மருத்துவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில், துறைவாரியாக பேசி உரிய தீர்வை காணாமல், தலித் மருத்துவ அதிகாரியை மட்டும் கைது செய்து விழுப்புரம் சிறையில் அடைத்திருப்பது கண்டனத்திற்குரியது.
அவரது கைதில் மேல்மட்டத் தலையீடு இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் தலையீடு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த கைது நடவடிக்கை, தலித் மருத்துவர்கள், மருத்து அதிகாரிகள் மத்தியில் அச்சத்தையும்,
கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
தலித் மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகள் அச்சத்தோடு ,
பாதுகாப்பற்ற சூழலில் பணி புரிய வேண்டிய சூழலை உருவாக்கி இருக்கிறது. இது குறித்து தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கைது செய்யப்பட்ட தலித் மருத்துவரை உடனடியாக விழுப்புரம் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்.அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும்.
இந் நிகழ்வு குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் மனித உரிமை ஆணையம் உடனடி விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக சுகாதாரத்துறை இந்நிகழ்வு குறித்து நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.”