மரு. அரவிந்தன் சிவக்குமார்
பெருந்தொற்று நெருக்கடி மிகுந்த சூழல் என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், அதற்கு முன்னரே பொது சுகாதாரத்துறையில் தனியார் பங்களிப்பை முதன்மைப்படுத்தி பல்வேறு விசயங்கள் நடந்து கொண்டு தான் இருந்தன.
கார்பொரெட் சமூகப் பங்களிப்பின் மூலம் My hospital My pride என்ற திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தும் திட்டம் ஜூலை 2019ல் தொடங்கப்பட்டுள்ளதை நாம் கவனமாய் பார்க்கவேண்டியுள்ளது.
மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளின் துறைவாரியாக இருக்கும் செலவுகளுக்கான நிதித்தேவையை சமாளிக்க முதலமைச்சர் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் வரும் வருவாயின் மூலம் நடந்துகொண்டிருக்கின்றது. அந்த துறைக்கு தேவையான தற்காலிக ஊழியர்களை நியமினம் செய்து அவர்களின் ஊதியத்தை காப்பீட்டுத்திட்ட வருவாயின் மூலம் வழங்கப்பட்டும் வருவதை நாம் காணமுடிகிறது.
துறைகளுக்கு தேவையான கட்டுமான வேலைகள் அதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கார்பொரெட் சமூக பங்களிப்பின் மூலம் கொடையாக பெறப்பட்டு நடத்தப்பட்டும் வருகின்றது.
மருத்துவத்துறையின் மிக முக்கியப் பணியான தூய்மைப்பணி செய்யும் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் outsourcing ஒப்பந்த முறையில் கடந்த 2013லிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று மருத்துவமனை காவலர்களும் ( security) தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த வேலை , தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்படுதல் , ஊதிய சிக்கல் என்று பல்வேறு விஷயங்கள் ஒருபுறம் இருக்க, மருத்துவமனை தூய்மைபணிக்கு தேவையான கிருமி நாசினிமுதல் தூய்மை எந்திரங்கள் வரை அந்த தனியார் நிறுவனம் தீர்மானிக்கும் நிலையே உள்ளது.
மேலும் ஒரு மருத்துவத்துறையில் நோயர்களின் சிகிச்சையை தனியாரிடம் ஒப்படைக்க முடியுமா என்றால் ? நேரடியாக தனியார் துறையை உள்ளே விடமுடியுமா என்றால் அது மனநலத்துறை தான். தனியார் என் ஜி ஓக்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு மாவட்ட அளவிலான மனநோயர் அவசர சிகிச்சை மற்றும் மீள்சிகிச்சை மையங்களை தனியார்மயமாக்கப்பட்டுள்ளது.
எந்த துறையும் இல்லாததை மனநலத்துறையில் செய்யப்பட்டுள்ளது.
இந்த பெருந்தொற்றைப்பொருத்த வரையில் உலக நாடுகளின் அனுபவங்கள் நமக்கு ஒரு பாடத்தை மட்டுமே கற்றுக்கொடுத்துள்ளது.
நவதாராளமயமாக்கல் சந்தை சக்திகளே தீர்மானகரமான சக்திகளாகவும் அரசாங்கத்தை விட , அந்த சக்திகளே அதிகாரம் பலமிக்கதாகவும் , தனியார்மயமாக்கல் என்ற பெயரில் பொதுசுகாதாரத்துறை நிதிகுறைப்பு, தனியார் முதலீடு பங்களிப்பு என்று சுகாதாரத்துறை தூள்தூள் ஆக்கப்பட்ட நாடுகள் திணறின, சாமானிய மக்கள் இறந்தனர். அது அமெரிக்கா இங்கிலாந்து அய்ரோப்பிய நாடுகளாக இருந்தாலும் சரி.
எனவே, சர்வதேச நிதியம், உலக வங்கி 1984 1985 ல் கொண்டு வந்த வாஷிங்கட் ஒப்ந்தத்தில் அரசு மருத்துவமனைகளை தனியார்மயமாக்கப்படுவதும் , மக்கள் சேவைக்கு பணம் செலுத்தி பார்க்க ஏதுவான மாற்றங்கள் கொண்டுவருவது பற்றியும் அடிக்கல் நாட்டப்பட்டது. அதைத்தொடர்ந்தே உலக வங்கயின் நேரடி கண்காணிப்பில் அதன் ஆய்வரங்கமாக வளர்ந்துவரும் நாடுகளின் சுகாதாரத்துறையை படிப்படியாக தனியார்மயமாக்கும் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
ஒரு பக்கம் நிதி ஆயோக் மாவட்ட தலைமை மருத்துவமனைகளை தனியாருக்கு 30 ஆண்டு குத்தகை விடும் திட்டம், இன்னொரு புறம் நேரடியாக உலக வங்கியின் structural health reforms என்று நெருக்கடி கொடுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
நாட்டின் சுகாதாரக் கொள்கை ( எந்த நோய் முதன்மையானது , எதற்கு நிதி ஒதுக்கவேண்டும் என்ன செயல் திட்டம்) என்பனவற்றை சர்வதேச நிறுவனங்கள் மற்றும global health தீர்மானித்துவருகின்றன.
இந்த கொரோனா காலத்தில் தனியார்மயம், என்ஜிஓ-மயம், கார்பொரெட் சமூகப் பங்களிப்பு மயமாக்கலை வெளிப்படையாகவும் நேரடியாகவும் வேகமாகவும் சுகாதாரத்துறையில் நடைமுறைப்படுத்தியுள்ளனர்..
உங்கள் பகுதி அரசு மருத்துவமனை தேவைகளை யார் பூர்த்திசெய்யவேண்டும்? உங்கள் பகுதி மருத்துவமனை மேம்படுத்தவேண்டி யாரிடம் கேட்கவேண்டும். யார் அதற்கு பொறுப்பு, யாருக்கு கடமை உள்ளது? இந்நேரத்தில் இந்த கேள்விகளை நாம் முன்வைக்கவேண்டியுள்ளது.
மேலும், நாட்டில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் தாக்கப்படும் சம்பவத்தை வெறும் சட்ட ஒழுங்கு Frameworkல் சுருக்கிப்பார்க்காமல் துறை சார்ந்த போதாமைகளின் பின்புலத்தில் பார்க்கவேண்டும்..
பொது சுகாதாரத்துறையை காக்க வேண்டிய பொறுப்பு மக்களோடு நிற்க வேண்டிய கடமை மேற்கூறிய தனியார்மயமாக்கலை எதிர்க்கவேண்டிய பொறுப்பு மருத்துவர்களுக்கு நிச்சயம் உண்டு…
மரு. அரவிந்தன் சிவக்குமார், அரசு மனநல மருத்துவர்.