அருண் நெடுஞ்செழியன்
FAMILY MAN சீசன் -1 பார்த்தபோது அதற்குமுன் அமேசான் பிரைமில் பார்த்த BOSCH சீரியஸ்தான் நியாபகத்திற்கு வந்தது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் போலீஸ் துறையில் கொலைகுற்ற பிரிவில் ஹாரி பாஷ்க் என்ற கதாபாத்திரமாக வருகிற போலீஸ் அதிகாரி தனது துறைசார்ந்த கொலைக் குற்ற துப்பறியும் சாகசங்களையும் தனது குடும்ப சிக்கல்களை கையாள்கிற விதத்தை மையமாக கொண்டு வந்த சீரீஸ் அது.இதுவரை இந்தியாவில் வந்துள்ள ஐந்து சீரியசையும் அடுத்தடுத்த நாட்களில் பார்த்துள்ளேன்.சலிப்பு தட்டாத வகையில் நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம்.இப்படத்தை இந்தியப் பாணியில் எடுக்க முயன்று தோற்ற படமாக FAMILY MAN படம் எனக்குத் தோன்றுகிறது.
நாட்டை தீவிரவாத தாக்குதலில் இருந்து காப்பாற்றுகிற தேசிய புலனாய்வு துறையில் கமுக்க அதிகாரியாக ஸ்ரீகாந்த் திவாரி பாத்திரம்.ஸ்ரீகாந்த் திவாரி தனது துறைசாரந்த துப்பறியும் சவால்களையும் குடும்பத்தில் எழுகிற சிக்கல்களையும் கையாள்வதில் அடுத்தடுத்த எழுகிற பிரச்சனைகள் குறித்ததுதான் FAMILY MAN மொத்த கதை.
Family man season 1:
சாமானிய நடுத்தரவர்க்க குடும்ப பின்னணியை பிரதானப்படுத்துகிற நாயக கதாபாத்திரம். லோன் கட்டுவதற்கும் ஹோட்டல் சாப்பாட்டிற்கும் சிக்கனமாக செலவு செய்கிறவன். சாமானிய நடுத்தர வர்க்க பெற்றோர் போல குழந்தைகளை கண்டித்து பொறுப்புடன் வளர்க்க முயல்கிறவன். தனது காதல் மனைவிக்கு வேறொரு ஆணுடன் நட்புணர்வு கொள்வதில் அதிகம் சந்தேகம் கொள்கிறவன். இதற்கிடையே கேரளாவில் மூளை சலவை செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த மூஸா, அவனுடன் நண்பன் சஜித் (இருவரும் தீவிரவாதிகள் எனக் கூறத் தேவையில்லை!) மற்றும் ஸ்ரீகாந்த் திவாரி ஆகியோர்களுக்கு இடையிலான பூனை எலி விரட்டல் கதைதான் மீதி. பாகிஸ்தான், காஷ்மீர் இல்லாமல் ஒரு தீவிரவாத படமா?ஆகவே காஷ்மீரும் பாகிஸ்தானும் படத்தில் வருகிறது.
இறுதியில் தீவிரவாத தாக்குதலில் இருந்து ஸ்ரீகாந்த் திவாரி எவ்வாறு நாட்டைக் காப்பாற்றுகிறான் என்பதுதான் முடிவு. படம் ஒருதலைபட்சமாக இஸ்லாமோபோபியாகவாக இருந்துவிடக் கூடாது என்ற இயக்குனரின் “மையவாத’ சிந்தனையால் கரீம் என்ற கதாபத்திரம் வருகிறது. இந்துத்துவ அரசியல்வாதிகளின் மதச்சிறுபான்மை விரோத அரசியலுக்கு எதிர்வினையாற்றுகிற விதமாக மாட்டுக்கறி அனுப்பி (இந்துத்துவ அரசியல்வாதியின் வீட்டு நிகழ்சிக்கு) எதிர்ப்பை பதிவு செய்ய முயல்கிற கரீமை தவறுதலாக ஸ்ரீகாந்த் திவாரி டீம் சுட்டுக் கொன்றுவிடுகிறது.கரீம் தீவிரவாதி அல்ல என ஸ்ரீகாந்த் திவாரி குற்றவுணர்வு கொள்கிறான்.
ஆக, நாட்டுப்பற்று ஒரு ஸ்பூன், நடுத்தர வர்க்க சந்தேக ஆண்புத்தி ஒரு ஸ்பூன், தீவிரவாத அச்சுறுத்தல் ஒரு ஸ்பூன் என ஒரு நகர்ப்புற நடுத்தர வர்க்க மசாலா படமாக FAMILY MAN சீசன் 1. வெளிவந்தது.
படம் முழுக்கு ஸ்ரீகாந்த் திவாரி தனது அலுவலக நண்பன் ஜேகே உடன் சிகெரட் பிடித்துக் கொண்டும் குடித்துக் கொண்டு இருக்கிறான். BOSCH சீரியசிலும் பாஸ்கின் அலுவலக நண்பனாக ஜெரி எட்கர் என்ற கதாபாத்திரம் வரும். இருவரும் ஆழமான நட்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.
ஆக மொத்தத்தில் ஃபேமிலி மென் முதல் சீசன் எந்த விதத்திலும் ஒரு அசலான நல்லபடமாக எனக்குத் தோன்றவில்லை. இப்படத்திற்கு அப்போது வெளிவந்த “பாதாள லோக்” சீரியஸ் எவ்வளவு தேவலாம் என்றிருந்தது. இந்த நிலையில் ஃபேமிலி மென் இரண்டாம் சீசனின் கதைக் களம் பாகிஸ்தான் தீவிரவாதிகளிடமிருந்து தற்காலிகமாக விடைபெற்று ஈழப் போராளிகளை வில்லனாக மாற்றியுள்ளதை இரண்டாம் சீசனின் டீசரே வெளிப்படுத்தியது.
Family man season 2:
சீசன் இரண்டில் புலம் பெயர்ந்த ஈழப் போராளியாக ராஜி கதாபத்திரத்தில் வருகிற சமந்தாவின் கருப்பு மேக்கப் என்னவோ ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்திக்கு கருப்பு மேக்கப் போட்ட மாதிரி அன்னியமாக தோன்றுகிறது. தமிழர்கள் என்றால் கன்னங்கரேல் என்றிருப்பார்கள் என்ற வட இந்தியர்களின் பொது புத்தி ராஜி கதாபாத்திர கருப்பு நிற ஒப்பனையில் மட்டுமல்ல,ஈழ விடுதலைப் படையின் தலைவராக வருகிற பாஸ்கரன், சென்னையில் துப்பறியும் அதிகாரியாக வருகிற முத்து,தமிழக கிராம மக்கள் என அனைத்து தமிழ் கதாபாத்திரமும் கறுப்பர்களாக வருகிறார்கள். இதைப் பார்க்கும்போது தென்னிந்திய மக்களுடன் நாங்கள் சேர்ந்து வாழவில்லையா? எங்களைபோய் நிறவெறியர்கள் என்கிறீர்களே என்ற பாஜக தலைவர் தருண் விஜய்யின் பேட்டிதான் நினைவுக்கு வந்தது.
போலவே தமிழ்நாடு என்றால் இட்லி வடைக்கும் பில்டர் காபிக்கும் பிரசித்தம்,இந்தியை கண்மூடித்தனமாக எதிர்ப்பார்கள்,பிரதமருக்கு எதிராக கோ பேக் சொல்வார்கள் என்ற வட இந்தியர்களின் பொது புத்தி பல்வேறு கதாபத்திர உரையாடலில் வசனமாக வருகிறது.பார்க்கும்போதே “முடியல “ரக அபத்தம் !
தென்னிந்திய சமூகத்தின் இனவரைவியல் அறிச்சுவடி அறியாத முட்டாள்கள் படம் எடுத்தால் இப்படித்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டே மேல படம் பார்த்தால் ஒவ்வொரு எபிசோடிலும் அரசியல் குழப்பமும் வக்கிரமும் வெளிப்படுகிறது. புனைவையும் அபுனைவையும் மனம்போல போக்கில் குழப்பியடித்து எடுத்தான் விளைவே இது.
படத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பாஸ்கரனாக வருகிறார், ராஜபக்சே ரணதுங்காவாக வருகிறார். வேதாரண்யம் வேராரண்யம் ஆக வருகிறது, வட இலங்கையில் சீனா துறைமுகம் கட்ட முயற்சிக்கிறது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த, இலங்கையில் சீனாவை நுழையவிடக் கூடாது என இந்திய அரசு முயற்சிக்கிறது. இதில் இந்தியாவுடன் பேரம் பேச (தமிழ் நாட்டிற்குள் தப்பிவந்த) ஈழ போராளிகளை மீண்டும் இலங்கையிடம் ஒப்படைப்பது என்ற ரணதுங்கவின் பேரத்திற்கு இந்திய அரசு ஒப்புகிறது.
படத்தில் பிரதான சிக்கலே இதுதான். அதாவது இடங்களையும் கதாபாத்திரங்களும், கொலை சம்பவங்களையும்,தேசிய இன போராட்ட அரசியலையும் வரலாற்றில் இருந்து அபுனைவாக எடுத்துக் கொள்கிறார்கள். அதே வேளையில் இந்தியப் பிரதமரை பாசு என்ற பெண் கதாபாத்திரமாக மாற்றியும், ராஜி என முன்னால் ஈழப் போராளி மூலமாக இந்தியப் பிரதமரை தற்கொலைபாணி தாக்குதல் நடத்தி கொல்கிற ஒன்லைன் கதையையும், புலம் பெயர்ந்த ஈழ அரசியல் தலைவர் தீபன் விடுதலைப் படையின் தலைவர் பாஸ்கரனை இந்திய அரசுக்கு காட்டிக் கொடுப்பதும், தங்களது நோக்கத்திற்காக (பிரதமரைக் கொல்வதற்கு) தீவிரவாத இயக்கங்களுடன் கை கோர்ப்பது என இந்திய பெருமித கதைக்கு ஏற்ற புனைவாக மாற்றுகிறார்கள்.
இந்த இடத்தில் வரலாற்றையும் புனைவையும் இணைக்கும் போது ஒரு படைப்பாளிக்கு தேவைப்படுகிற வரலாற்று பொறுப்புணர்வு ஃபேமிலி மென் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் அறவே இல்லை என்பதே படத்தின் பிரதானமான பிரச்சனை. தென்னிந்திய மக்கள் மீதான வட இந்தியர்களின் நிறவெறிக் கண்ணோட்டமும் இதோடு சேர்ந்துகொள்கிறது.
படத்தில் ராஜி கதாபத்திரத்தை மனச்சிதைவு கொண்ட ஒரு பெண்ணின் பழிவாங்கல் செயல்பாடாகவும், விடுதலை அமைப்பின் தலைவர், தங்களது நோக்கங்களுக்கு இளைஞர்களை மூளை சலவை செய்துவிட்டதாகவும் வெளிப்படுத்துகிறார்கள். சிங்கள ராணுவத்தால் தான் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதிற்கு எதிராக தனது தந்தையையும் சகோதரனையும் இலங்கை ராணுவம் படுகொலை செய்ததற்கான பழிதீர்த்தலே ஈழ விடுதலைப் போராளிகளின் அரசியலாக இப்படத்தில் காட்டப்படுகிறது.
இந்த இடமானது தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை பின்னுக்கு தள்ளி போராளிகளின் சொந்த வாழ்க்கை மீதான கழிவிரக்கமாக மாற்றப்படுகிறது. இதுவே இப்படம் நெடுக செய்யப்படுகிற அயோக்கியத்தன அரசியல் ஆகும். போலவே புலம் பெயர்ந்த ஈழ அரசியல் தலைவராக வருகிற தீபனுக்கும் அவருடன் முரண்பட்ட போராளிகளின் தலைவர் பாஸ்கரனுக்கும் இடையிலான உரையாடல்கள் விடுதலைப் போராளிகளை போர் வெறி பிடித்தவராக சித்தரிக்கிறது.
The wind that shakes the barely என்ற கென் லோன்சின் படத்தை பேமிலி மென் இயக்குனர் ஒருமுறை பார்க்க வேண்டும். இங்கிலாந்து ஆட்சியாளர்களுக்கு எதிரான அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பக்கங்களை அசலாக பதிவு செய்த படம் அது. அல்லது BATTEL OF ALGIERS ஆவது பார்க்க வேண்டும். இதுபோல எண்ணற்ற வரலாற்றுப் படங்கள் வரலாற்று உண்மைகளை திரிக்காமல் மறைக்காமல் ஒடுக்கப்பட்ட இன மக்களின் நியாங்களை பேசியது.
வரலாற்று அறிவு இல்லாமல் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் போலியான தேசிய பெரிமிதத்திற்கு தீனி போடுகிற படைப்பாக ஈழ தேசிய இன விடுதலைப் போராட்டத்தை திரித்தும் மறைத்தும் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்கிற படைப்பாக பேமிலி மென் சீசன் உள்ளது.
இதனது அடுத்து சீசன் வடகிழக்கு மக்களின் அரசியல் பண்பாடு மொழி இன வேற்றுமைகளை இந்திய பெரியண்ணன் மனோபாவத்தில் வரவுள்ளதை மூன்றாம் சீசனுக்கான டீசரே கூறுகிறது.
அருண் நெடுஞ்செழியன், எழுத்தாளர்; செயல்பாட்டாளர்.