ஏவின் மனோ
#நீலம் பண்பாட்டு மையத்திற்கும், கவிஞர் பச்சோந்திக்கும் சில கேள்விகள்…
மதிப்பிற்குரிய ஐயா,
வணக்கம்.
என் பெயர் ஏவின் மனோ. நான்,
5-10,நம்பியான் குளம்,
நாவல்காடு,
ஈசாந்தி மங்கலம் (Post)
கன்னியாகுமரி(Dist).
Pin-629852.
என்ற முகவரியில் வசித்து வருகிறேன். மேலும் நான் இன்று காலை கவிஞர் பச்சோந்தி எழுதி, தாங்கள் வெளியிட்ட “பீஃப்” கவிதைகள் எனும் கவிதை தொகுப்பின் கீழ்க்காணும் கவிதையை படித்தேன்.
அதிலிருந்து எனக்கு சில கேள்விகளும், சந்தேகங்களும் முன்னெழுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட தாங்கள் அதற்கான விளக்கம் தந்து உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இதோ கவிதை…
“மேலத் தெரு பெண் தூக்கில் தொங்கியதாக
செய்திவந்தது.
அவளைக் காதலித்த
பறையடிக்கும் பெருமாளின் தலையைத் தண்டவாளத்தில்
சேரியே தேடியலைந்தது அன்று.
ஆளுக்கொரு பறையைத் தூக்கிக்கொண்டு
அவசரமாய் ஓடுகிறோம்.
பறையைக் காய்ச்ச தீப்பெட்டி கேட்டு நின்றேன்
உதட்டைப் பிதுக்கிச் செல்கிறாள்
மேலத் தெருக்காரி
பின்பு
அடித்துக்களைத்த பறை
அவள் வீட்டுத் திண்ணையில் இளைப்பாறியது.
நீர் தெளித்த அவ்விடத்தை
விளக்கமாற்றால் அடித்து அடித்துக் கழுவினாள்
பறையடிக்கும் அதிர்வில் விம்மிவிம்மிப் புடைக்கும்
என் மார்பை
எலும்புச் சாற்றை உறிஞ்சுவது போலே
வெச்ச கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கிறாள்.”
-பீஃப் கவிதைகள். பக்கம்: 64.
அதாவது ஐயா,
– மேலத் தெரு பெண்ணை காதலித்த பெருமாள் என்பவர் ஆணவக்கொலை செய்யப்படுகிறார்.இதையறிந்த மேலத்தெரு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள்.
– மேலத் தெரு பெண் பெருமாளை காதலிப்பது பொறுக்காத அவரது உறவினர்கள் அப்பெண்ணை கொன்று தூக்கில் தொங்க விட்டுள்ளனர். மனம் பொறுக்காத பெருமாள் தண்டவாளத்தில் விழுந்து உயிரை மாய்த்துள்ளார்.
என்னுடைய புரிதலில் குறைபாடு இருந்தாலும் எப்படியாயினும் இது ஒரு ஆணவக்கொலை என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. காதலுக்கு சாதி இல்லை என்பது போலவே காதலர்களும் சாதி பார்த்து காதலிப்பதில்லை சரிதானே ஐயா?
இப்போது கவிதையின் பின்பகுதிக்கு வருவோம்.
தீப்பெட்டி கேட்டால் உதட்டை சுழித்து கொடுக்காமல் செல்லும் மேலத் தெருக்காரி, பறையடிப்பவன் அமர்ந்த இடத்தை தண்ணீர் விட்டு கழுவும் மேலத் தெருக்காரி “பறையடிக்கும் அதிர்வில் விம்மிவிம்மிப் புடைக்கும் என்மார்பை எலும்புச்சாற்றை உறுஞ்சுவது போல வெச்சக் கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கிறாளே ஏன்?
– மேலத் தெரு ஆண்களுக்கு விம்மிப் புடைக்கும் மார்புகள் இல்லையா? இல்லை மார்புகள் என்ன பறையடிப்பவர்களின் குல சொத்தா?
– மேலத் தெருக்காரி எலும்புச்சாற்றை உறுஞ்சுவது போல பார்க்கிறாள் என்பதன் மூலம்,கவிஞர்.பச்சோந்தியும்,நீலம் பண்பாட்டு மையமும் சொல்ல வருவது என்ன?.
– மேலத் தெருக்காரிகள் அப்படித்தான் பார்ப்பார்கள். பறையடிக்கும் நாம்தான் அதிலிருந்து தப்பித்து வீடு வந்து சேர வேண்டும். இல்லையெனில் நமது தலை தண்டவாளத்தில் கிடக்கும். என்பதாக புரிந்து கொள்ளவா?.
– மேலத் தெருக்காரிகள், வெறும் உடம்பை மட்டுமே பார்ப்பார்களென எந்த ஆய்வுகளின் அடிப்படையில் முடிவுக்கு வந்தீர்கள்?.
– ஜீன்சும், டீ-சர்ட்டும் அணிந்து எங்கள் பெண்களை நாடகக் காதல் செய்து ஏமாற்றுகிறார்கள் என குற்றம் சாட்டுபவர்களிடம் ‘அதெல்லாம் போடாமலே கூட உடல் பசிக்காக ஏங்கும் உங்கள் பெண்கள் அப்படித்தான்’ என்பதாக இது அமையவில்லையா?.
– அது ஏன் ஐயா எல்லா பழிதீர்ப்பும் பெண்களின் கற்பையும், நல்லொழுக்கத்தையும் கேள்வி கேட்பதாகவே இருக்கிறது? இதுதான் ‘நீலம் பண்பாட்டு மையம்’ வளர்க்கும் பண்பாட்டு அரசியலா?.
– மேலத் தெருக்காரி பறையடிப்பவனை காமத்தோடு பார்க்ககூடாதென சொல்வதற்கு நீங்கள் யார்? இது பண்பாட்டு அரசியலா? இல்லை மனுநீதியா?
– எல்லாவற்றிக்கும் மேலாக சேரியே பெருமாளின் தலையைத் தேடி தண்டவாளத்தில் அலைந்துக் கொண்டிருக்கும் போது இவர்கள் மேலத் தெருக்காரி மரணத்திற்கு பறையடித்தே ஆக வேண்டிய அவசியமென்ன?.
– எனது புரிதல் சரியென்றால் இவர்கள் அங்கு சென்றால் தானே மேலத் தெருக்காரி ‘காமப் பார்வை’ பார்க்க முடியும். இவர்களும் தண்டவாளத்தில் தலையைத் தேடி அலைந்துக் கொண்டிருந்தால் அவள் யாரைப் பார்ப்பது?
இந்தக் கேள்விகளை முன்வைத்து கவிஞர். பச்சோந்தியின் பக்கத்தில் விளக்கம் கேட்கலாமென சென்றிருந்த போது அங்கு வேறொரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருந்தது. அதற்கு நானொரு பின்னூட்டமிட்ட மறுநொடி கவிஞர். பஞ்சோந்தி “தம்பி நீங்க யார்?”-எனக் கேட்டார். நான் எனது பெயர், வயது, பாலினம், முகவரி அனைத்தும் கொடுத்தேன். இறுதியாக ஒருவேளை “நீங்கள் யார்?” என்ற கேள்வியின் பின்னால் “மேலத் தெருவா?, கீழத் தெருவா?”-என்ற அடிப்படையில் கேட்கிறாரோ என நினைத்து “சாதிச் சான்றிதழ் வேண்டுமா ஐயா?” எனக் கேட்டதும் என்னை பிளாக் செய்து விட்டார்.
அவர் என்னை பிளாக் செய்ததும், என் கேள்விகளுக்கு பதில் கூற மறுப்பதும் எனக்குள் மேலும் பல கேள்விகளையும், சந்தேகங்களையும் உண்டாக்குகிறது. ஆகவே, இந்த எளியவனின் கேள்விகளையும் கருத்தில் கொண்டு பதில் தந்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு.
ஏவின் மனோ.