ஸ்ரீதரன் சுப்ரமணியன்
பத்மா சேஷாத்ரி கல்வி நிறுவனத்தில் பள்ளி மாணவிகள் சிலர் ஒரு ஆசிரியரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அந்த விஷயத்தில் நம் ஒவ்வொருவரின் நிலைப்பாட்டுக்கு ஏற்றபடி நமது அணுகுமுறை வித்தியாசமாக வெளிப்படுகிறது. பிரச்சினை அந்தக் குற்றம் கூட அல்ல. அந்தப் பள்ளியில் இப்படி ஒரு குற்றம் அரங்கேறிக்கொண்டு இருந்தது என்பது அதிர்ச்சியாக இருக்கவில்லை. அப்படிப்பட்ட குற்றங்கள் தேசமெங்கும் பெண்கள் படித்துக் கொண்டிருக்கும் பல்வேறு பள்ளிகளில் நடந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் பற்பல வருடங்களுக்கு முன்பே இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன என்றும் அவற்றை பள்ளி நிர்வாகம் பெரிய அளவில் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை எனும் குற்றச்சாட்டுதான் அதிர்ச்சியாக இருந்தது. அது உண்மை எனில் அப்படிப்பட்ட விஷயங்களை ஒன்று சகஜமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லது அவை வெளியே வந்தால் பள்ளியின் பெயர் கெட்டுப் போய் விடுமோ என்ற பயத்தில் பிரச்சினையை முற்ற விட்டிருக்கிறார்கள். இரண்டில் எது உண்மை என்பது இப்போதைக்கு தெரியவில்லை. பள்ளியின் மேலாண்மைக் குழுவுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு காரணமாக உண்மை முழுமையாக வெளிவருமா என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது. விசாரணை நடத்தப்பட்டு அதில், பாலியல் தொந்தரவு என்று ஒன்று நடக்கவே இல்லை. ஆசிரியரின் அப்பாவித்தனமான அணுகுமுறையை மாணவிகள்தான் தவறாகப் புரிந்து கொண்டு விட்டனர் என்று கூட சொல்லப்பட்டு வழக்கு மூடப்படலாம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
ஆனால், ஒரு நல்ல விளைவு உருவாகி இருக்கிறது. இந்தக் குற்றம் குறித்த செய்தி பரவியதில் அது மாநிலமெங்கும் ஒரு புதிய #MeToo இயக்கத்தை துவக்கி இருக்கிறது. பள்ளிப் பாலியல் தொந்தரவுக் குற்றங்களுக்கு என காவல்துறை சிறப்பு அழைப்பு எண் ஒன்றை நிறுவி விட்டிருக்கிறது. முந்தாநேற்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகி இருக்கின்றன. வரும் தினங்களில் மேலும் புகார்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்தியாவைப் பொருத்த வரை முந்தைய MeToo இயக்கத்துக்கும் இப்போதைய மாணவிகள் MeTooவுக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை. அதே தயக்கம், அதே கேள்விகள், அதே சால்ஜாப்புகள் ஆண்கள் தரப்பில் இருந்தும், குறிப்பாக குற்றம் சாட்டப் பெறும் தரப்பில் இருந்தும் வருகின்றன. சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் பாதிக்கப்பட்ட பெண்களையே குறை சொல்லும் அளவுக்குப் போகிறார்கள். Blaming the Victim என்பது உலகில் பல்வேறு குற்றங்களில் வழக்கமாக இருக்கிறது. ஆனால் இந்தியாவில் பாலியல் குற்றங்களில் மட்டும்தான் அது நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது முறை நடக்கிறது. வன்புணர்வுக்கு ஆளாகும் பெண் குட்டை பாவாடை அணிந்திருந்தாள், அவள் இரவு ஒன்பது மணிக்கு மேல் தெருவில் நடமாடிக் கொண்டு இருந்தாள், அவள் இரண்டு ஆண் தோழர்களுடன் சுற்றிக் கொண்டிருந்தாள், அவள் தாலி அணிந்திருக்கவில்லை, அவள் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தாள், இத்யாதி, இத்யாதி.
இப்படிப்பட்ட குற்றங்கள் தொடர்ந்து நடக்க, இப்படி குற்றங்களின் பழி பெண்கள் மீதே படிவது மிக முக்கிய காரணம். நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவனே கூட பிபிஸிக்கு அளித்திருந்த பேட்டியில் அந்தப் பெண் மீது அப்படி ஒரு குற்றத்தை சுமத்தி இருந்தான். ‘நிர்பயா இரவு 10 மணிக்கு ஒரு ஆண் நண்பனுடன் சுற்றிக் கொண்டிருந்தாள். ஒழுக்கமுள்ள குடும்பப் பெண்கள் அப்படி எல்லாம் செய்வார்களா என்ன?’ என்று கேட்டிருந்தான். அதாவது என்ன அர்த்தம்? தவறு எங்கள் மீது அல்ல. ராத்திரி ஊர் சுற்றிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம்தான்.
அந்தக் கேள்வி நிறைய இந்திய ஆண்களுக்கு நியாயமான கேள்வியாகத் தெரியலாம். சரிதானே? ‘குடும்பக் குத்துவிளக்குகள் அப்படி பாய் ஃப்ரெண்ட்டுடன் ராத்திரி ஊர் சுற்றுவார்களா என்ன?’ அடுத்ததாக அவளுக்கு நேரும் குற்றம் அவள் குடும்பத்தின் மீதும் ஏவப்படுகிறது. ‘நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள் பெண்களை அப்படி எல்லாம் வளர்ப்பார்களா என்ன?’ சில பகுதிகளில் அவளது உறவினர், சாதி சனத்துக்கும் அது சேர்கிறது. ஒரு சாதியை சேர்ந்த பெண்ணுக்கு நிகழும் அவமானம் அந்த சாதிக்கே நடப்பதாக கற்பிக்கப்படுகிறது. உத்திரப் பிரதேசத்தில் இரண்டு தலித் சிறுமிகள் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்ட பொழுது அந்த கிராமத்தின் தலித் சமூகத்துக்கே விடப்பட்ட சேதியாக பார்க்கப்பட்டது. (பாலிவுட் படம் Article-15 இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்.)
ஆயிரம்தான் 21ம் நூற்றாண்டு, டிஜிட்டல் இண்டியா என்றெல்லாம் ஒரு புறம் சொன்னாலும் பெண்கள் விஷயத்தில் மட்டும் நாம் 17ம் நூற்றாண்டில்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். கற்பு எனும் கற்பனை வஸ்துவை இன்று வரை பிடித்து வைத்துக் கொண்டு சுற்றுகிறோம். இங்கே நடத்தப்பட்ட பல்வேறு சர்வேக்களில் தெரிய வந்தது: ‘ஒரு வர்ஜின் பெண்ணைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்,’ என்று இன்றும் பெரும்பாலான இந்திய இளைஞர்கள் இருக்கிறார்கள். ‘துப்பட்டா போடுங்கள் தோழி,’ கலாச்சாரக் கும்பல் இன்றும் சமூக ஊடகங்களில் அலைந்து கொண்டிருக்கிறது.
இவை எல்லாவற்றின் விளைவாக தங்களைப் பற்றியும், தங்கள் உடல் பற்றியும் பெருத்த தாழ்வு மனப்பான்மையை பெண்களிடத்தில் வெற்றிகரமாக விதைத்து விட்டோம். பள்ளி என்றல்ல, பணியிடங்களில் பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள். முகநூலில் பெண்களின் இன்பாக்ஸ் என்பது இம்சை பாக்ஸ் ஆக மாற்றப்படுகிறது. கலையுலகில் சின்மயிகள் கேரியரை இழக்கிறார்கள். வைரமுத்துகள் விருதுகள் குவிக்கிறார்கள்.
எனது முதல் புத்தகத்தின் முதல் கட்டுரையின் தலைப்பு ‘கற்பழிப்போம் வாருங்கள்’. கற்பு எனும் கற்பனைப் பொருள் நமது வாழ்வியலில் நடத்தும் தாக்கம் குறித்த கட்டுரை அது. கற்பு என்பது இந்திய சமூகத்தின் மேல் நடத்தும் பாதிப்பு விவரணைகளுக்கு எல்லாம் அப்பாற்ப்பட்டது. குறிப்பாக இந்தியப் பெண்கள் மேல் அது தொடுக்கும் தாக்குதல் அதீதமானது. கலாச்சார-, சமூக-, உளவியல்-ரீதியாக, கடைசியில் உடல்-ரீதியாகவும் நமது பெண்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார்கள். பள்ளி மாணவிகளின் புகார்கள் அழுத்தப்படுகின்றன. குடும்ப மானத்தைக் காப்பாற்ற வேண்டி பெண்கள் படிப்பு நிறுத்தப் படுகிறது. இளவயதில் திருமணத்துக்கு உள்ளாகி தலைமுறை தலைமுறையாக கேரியர் எதுவும் இன்றி வாழ்வைக் கழிக்கிறார்கள். வன்புணர்வுக்கு ஆளான பெண்கள் சமூகத்தில் இருந்து விலக்கப்படுகிறார்கள். மணமுறிவு ஆன பெண்கள் பரத்தைகள் போல அணுகப்படுகிறார்கள். அதற்கு பயந்து மணவாழ்வில் தொடரும் பெண்கள் தொடர் குடும்ப வன்முறைக்கு ஆளாகிறார்கள். ஒடுக்குமுறை சரித்திரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இதற்கெல்லாம் அடிப்படை அந்தக் கற்பு. அது நமது சமூகத்தில் இருந்து அழிபடும் நாள் நம் பெண்களின் நிலை சிறிதளவேனும் முன்னேற வாய்ப்பு இருக்கிறது. கற்பு எனும் கேவலத்தை நமது சமூகத்தில் இருந்து ஒழிப்போம். கற்பழிப்போம் வாருங்கள்.
ஸ்ரீதரன் சுப்ரமணியன், எழுத்தாளர்.