பாலியல் சுரண்டலில் கௌரவமானது, கௌரவமற்றது என இரண்டு இல்லை |தமிழ்நதி

தமிழ்நதி

‘விரும்பித் தொடப்படுகிற தொடுதல்களைக்கூட ஒரு பெண் மறந்துபோகக்கூடும். ஆனால், தன்னுடல் விருப்பமின்றி ஒரு பொருளைப்போல கையாளப்பட்ட அவமானத்தையும் அருவருப்பையும் அவளால் ஒருபோதும் மறக்கவியலாது. முதுமை கூடி, நினைவு தடம்மாறிப் பிறழும்வரை மனதில் ஊர்ந்து திரியும் புழு அது’

பாலியல் ஒழுக்கம் (அதுவும் சமூகத்தால் வரையறுக்கப்பட்டதே. வர்க்கங்களுக்கேற்றபடி பாரபட்சமானதே) என்பது வேறு; தன்னுடைய கடமையைச் செய்ய பாலியல் லஞ்சம் கேட்பது, எதிர்ப்புக் காட்டவியலாத நிலையில் நிராதரவான நிலையில் உள்ளவர்களிடம் பாலியல் சுரண்டல் செய்வது, பாலியல் சார்ந்து உளவியல்ரீதியான தொந்தரவுகளைக் கொடுப்பது ஆகியனவெல்லாம் வேறு. இவையிரண்டுக்கும் இடையில் வித்தியாசம் தெரியாது(அல்லது, தெரியாதது போல நடிப்பது)குழப்பியடிக்கும் பதிவுகளைக் காணமுடிந்தது.

சமூகத்தால், ‘பிறழ் உறவு’என வரையறை செய்யப்பட்டதை மீறி, பரஸ்பரம் ஈர்ப்புக் கொண்ட இருவர் விரும்பி உடன்போவதை பாலியல் ஒழுங்கீனம் என்று பொது சமூகம் கூறுகிறது. அதனால் யாருக்கும் பாதிப்பில்லை. ஆனால், தனக்குக் கீழ் வேலை செய்யும் ஒரு பெண்ணை (அரிதான சமயங்களில் ஆண்களையும்)அவளது/அவனது விருப்பமின்றியே தனது தினவுக்குப் பலியாக்குவது பாலியல் சுரண்டலுள்தான் வரும். அதுவே குழந்தைகளின்மீது நிகழ்த்தப்படும்போது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகிறது. அவ்விடத்தில், இவ்வுலகின் மீதான குழந்தைகளது பார்வையே தலைகீழாகிவிடுகிறது. எதன்மீதும். யார்மீதும் நம்பிக்கையற்றவர்களாக அவர்களை மாற்றிவிடுகிறது. பொம்மைகளை வைத்து விளையாடும் பருவத்திலுள்ள குழந்தைகளின் முன் தங்கள் ‘உறுப்பு’களைக் காட்டுகிற வக்கிர புத்திக்காரர்களுக்கு இது புரியாது.

‘இங்கு எழுதிக்கொண்டிருப்பவர்களெல்லோரும் யோக்கியமானவர்களா? அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவில்லையா?’என அதிபுத்திசாலித்தனமாகக் கேள்வி எழுப்புகிறார்கள். முதலில், கவிஞர் வைரமுத்து மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டு பாலியல் ஒழுக்கம் சார்ந்தது இல்லை; பாலியல் சுரண்டல் அல்லது லஞ்சம் சார்ந்தது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அவர் தனக்கு இருந்த, அதிகாரத்தைப் பயன்படுத்தி, பாலியல் லஞ்சத்தைக் கோரியதை, குறிப்பிட்ட பெண் மீது அவரால் இழைக்கப்பட்ட அநீதியெனக் கொள்ளவேண்டுமேயன்றி, ஒழுக்கமீறல் எனக் குறுக்கலாகாது.

இந்த சமூகம்… பாலியல் வறட்சி… இன்னபிற சப்பைக்கட்டுக்களைத் தூக்கிக்கொண்டு யாரும் வரவேண்டாம். என்னளவில், தெருவில், யாருமற்ற மதியப்பொழுதில் தனித்துச் செல்லும் பெண்களை எதிர்பார்த்து சாறத்தைத் (லுங்கியை)தூக்கித் தன் சாமானைக் காட்ட நிற்கிற ‘ஆம்பிளை’களுக்கும், கலை… உன்னதம்… காவியம் என ஒருபுறம் பேசிக்கொண்டு, மறுபுறம் இன்னொரு உயிரின் பதகளிப்புக்குக் காரணமாக அமையும் ‘பெரிய மனிதர்’களுக்குமிடையில் அதிக வேறுபாடுகளில்லை.

பாலியல் சுரண்டலில் கௌரவமானது, கௌரவமற்றது என இரண்டு இல்லை. எல்லாமே சுரண்டல்தான்!

தமிழ்நதி, எழுத்தாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.