சுரேஷ் கண்ணன்
‘இந்த வழக்கை தொடர்ந்து விடுவாயா?’ என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அச்சமூட்டுவதுதான் இதன் நோக்கம்.
இது போன்ற பாலியல் வன்முறை விவகாரங்களை ‘அரசியல்சரித்தன்மையுடன்’ கறாராக எழுதுகிறோம் என்கிற அசட்டுத்தனத்துடன் கிளம்பியிருக்கும் சிலர், மேற்கண்ட வில்லன்களை விடவும் கொடூரமாக யோசித்து எழுதுகிறார்கள்.
அத்தனை கேவலமான சிந்தனையாக, தரவுகளாக அவை இருக்கின்றன. பாதகம் செய்த ஆசாமிகளே ‘பேஷ்.. பேஷ்’ என்று மகிழும்படி ஓவர்டைம் வக்கீல்களாக இவர்கள் மாறி விடுகிறார்கள்.
*
தகுந்த ஆதாரமோ, சாட்சியமோ இன்றி ஓர் ஆணின் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் அதை சமூகம் எளிதில் நம்பி விட வேண்டுமா என்கிற கேள்வி முக்கியமானது. மாற்றுக்கருத்தில்லை.
ஆண்களை எளிதில் பழிவாங்குவதற்காக சில பெண்கள் எடுக்கும் நாடக ஆயுதமாக கூட இதில் சிலது கலந்து இருக்கலாம். சமூகம் இதற்கு உடனே பொங்கி விடும். பாலியல் குற்றச்சாட்டுக்கு அத்தகைய வலிமை உண்டு.
ஆனால் குறிப்பிட்ட ஒரு நபரின் மீது பல்வேறு தரப்புகளில் இருந்து அடுக்கடுக்காக புகார்கள் தொடர்ந்து கிளம்பி வருகிறது என்றால், சந்தேகத்தின் பலனை, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிறிதாவது தருவதுதானே நேர்மையான சிந்தனையாக இருக்க முடியும்?
அப்போதும் கூட ஆதாரம் இருக்கிறதா, சாட்சி இருக்கிறதா என்று நாமே கொடூரமான காவலர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் நீதிபதிகளாகவும் மாறலாமா?
சிலந்தி தன் இரையைப் பிடிப்பது போல திட்டமிட்டு அதற்கான சூழலை உருவாக்கி பாதகம் செய்யப்படும் போது பெண்கள் எவ்வாறு அதற்கான சாட்சியங்களை அளிக்க முடியும் என்பதைக் கூடவா நாம் யோசிக்க முடியாது?
*
நன்றாக கவனியுங்கள். ஒரு பெண் தன் மீது நிகழ்ந்த பாலியல் வன்முறையை அத்தனை எளிதில் புகாராக பொதுவில் அளித்து விட முடியாது. அது குறித்த பல்வேறு மனத்தடைகள், சமூக அச்சங்கள் போன்றவை அவர்களுக்கு இருக்கும்.
ஏனெனில் இங்கு பாதிக்கப்பட்ட பெண்ணை விடவும் ‘ஊசி இடம் தராம நூல் எப்படி நுழையும்?’ என்று அவதூறு பேசும் கீழ்மைவாதிகள் அதிகம். எனவே அவர்கள் குறித்த அச்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும். இந்த மனத்தடைகளை மீறித்தான் ஒரு கட்டத்தில் அவர்கள் பொதுவில் புகார் வைக்கத் துணிகிறார்கள்.
இது கூட ஏதோ உடனே நிகழ்ந்து விடும் சமாச்சாரமல்ல. பாதகம் செய்தவர் செல்வாக்குள்ள ஆசாமி என்றால் அமைதியாகவே இருந்து விடலாம் என்று அச்சத்துடன் பலர் முடங்கி விடுவார்கள். அல்லது அதற்கான காலம் கனியும் போது வெளியே வருவார்கள்.
இந்த துணிச்சலை ஒரு கட்டத்தில் யாராவது ஒரு பாதிக்கப்பட்ட பெண் துவக்கி வைப்பார். எனவே அதன் மூலம் உத்வேகம் கொள்ளும் மற்றவர்களும் அதனுடன் இணைவார்கள்.
*
மீடூ இயக்கமே ஏறத்தாழ இப்படித்தான் உருவானது. ஆதாரம், சாட்சியம் போன்றவை இல்லாத சூழலிலும் பாதிப்பை ஏற்படுத்திய ஆசாமியை பொதுவில் அம்பலப்படுத்துவோம் என்கிற ஆவேசத்தில் உருவான இயக்கம் அது. அதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களும் அதன் ஆதரவாளர்களும் ஓர் இயக்கமாக இணைந்து ஒரு சக்தியாக மாறலாம் என்பதே காரணம்.
இப்படியொரு இயக்கம் ஒரு சக்தியாக மாறும் போது வருங்காலத்திலாவது பாலியல் சீண்டல்களை செய்பவர்களுக்கு அச்சம் ஏற்படும்.
இதை ஏதோ ஒரு பிரபலமான பாடலாசிரியர் x பிரபலமான பாடகி என்கிற அளவில் சுருக்கிப் பார்த்து யோசிப்பதை விடவும் அபத்தம் வேறு இருக்க முடியாது. பாடகி எந்த சமூகத்தைச் சேர்ந்தவரோ, அதன் மீதான வெறுப்பரசியலைக் கொண்டு இந்த விவகாரத்தை குறுக்கி அணுகுவது இன்னமும் அயோக்கியத்தனம்.
இது உலகளாவிய பிரச்சினை. இதன் பின்னே ஏராளமான அப்பாவிப்பெண்களின் கண்ணீரும் வேதனையும் துயரமும் சொல்லப்படாத கதைகளும் உறைந்து இருக்கும். மனிதாபிமான அடிப்படையில் இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டாமா?
மறுபடியும் அதேதான். முதல்பத்தியில் சொல்லப்பட்ட சினிமா வில்லன்களை விடவும் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்தரப்பில் நின்று எழுதும் சில நியாயஸ்தர்கள் கொடூரமான வழக்கறிஞர்களாக மாறி இருப்பது கேவலமான விஷயம்.
இதன் மூலம் பாலியல் சீண்டல்களின் மீதான எதிர்ப்பை தணிக்கும், மழுப்பும் கீழ்த்தரமான வேலையையே இவர்கள் செய்கிறார்கள்.