நவீன அறிவியல் மருத்துவ முறைகளால் லட்சக் கணக்கான நோயாளிகள் இறந்துவிட்டதாக தவறான கருத்துக்களை பரப்பும் கார்ப்பரேட் சாமியார் பாபா ராம் தேவை கைது செய்ய வேண்டும் எனவும்
அறிவியலுக்குப் புறம்பான அவரது நிரூபணமாகாத மருந்துகளுக்கும் மருத்துவ முறைகளுக்கும் மத்திய அரசு தடை விதித்திட வேண்டும் எனவும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:
கோவிட் 19 என்ற கொடிய ,வேகமாக பரவும் தொற்று நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது. இது சார்ஸ் கோவி 2 என்ற வைரஸ் நுண்ணுயிரியால் பரவுகிறது. இது மனிதர்களிடம் நுரையீரல் மற்றும் பல்வேறு உறுப்புகளின் செயல் இழப்பை உருவாக்கி இறப்புகளை உருவாக்குகிறது என்பதை மனித குலத்திற்கு அறிவித்தது நவீன அறிவியல் மருத்துவம்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நபர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் என்ன,அத்தொற்று எவ்வாறு பரவுகிறது? அத்தொற்றிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது உட்பட, இந்நோய் குறித்த அறிவியல் ரீதியான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது நவீன அறிவியல் மருத்துவமாகும்.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களிடம் உள்ள தொற்றை எவ்வாறு உறுதி செய்வது? அதற்கு எத்தகைய பரிசோதனைகளைச் செய்திட வேண்டும் ? எத்தகைய சிகிச்சைகளை வழங்கிட வேண்டும்? சிகிச்சை வழங்கும் மருத்துவக் குழு எத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் நிரூபணமான முறைகளின் அடிப்படையில் வழங்கி வருவது நவீன அறிவியல் மருத்துவமாகும்.
இன்றைக்கு எந்த அறிவியல் துறையும் தனித்து இயங்கிவிட முடியாது. பல்வேறு அறிவியல் தொழில் நுட்பத் துறைகள் ஒன்றிணைந்தே செயல்பட முடியும். அதைக் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் நிரூபணம் செய்துள்ளன.
நவீன அறிவியல் மருத்துவம் என்பது பல்வேறு அறிவியல் தொழில் நுட்பத் துறைகளோடு இணைந்து, அவற்றில் உள்ள பல்வேறு நவீன கண்டுபிடிப்புகளையும் உள்வாங்கியே செயல்படுகிறது.
நவீன அறிவியல் மருத்துவம் உலகம் முழுவதும் , அனைத்து மனித குலம் இதுவரை உருவாக்கி வளர்த்திருந்த மருத்துவ முறைகளில் பயன்படத்தக்கவற்றை , அறிவியல் ரீதியாக ஏற்கத்தக்கவைகளை ஏற்று வளர்ந்துள்ளது. இன்றைக்கு அனைத்து அறிவியல் தொழில் நுட்பத் துறைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் உடனடியாக உள்வாங்கி, உலகளாவிய , ஒட்டு மொத்த மனித குலத்தின் பொதுவான மருத்துவ முறையாக பிரமிக்கத்தக்க வகையில் பரிணமித்துள்ளது.
பாபா ராம்தேவ் கூறுவது போல் 200 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று தோன்றிய மருத்துவ முறையல்ல நவீன அறிவியல் மருத்துவம். எந்த அறிவியலும் திடீரென்று வானத்திலிருந்து குதித்து வந்திட முடியாது.
நவீன அறிவியல் மருத்துவ முறையின் வளர்ச்சியாலும், உலக நல நிறுவனம் நவீன அறிவியல் மருத்துவ முறைகளின் அடிப்படையில் உலக நாடுகள் அனைத்திற்கும் ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்கி வருகிறது. நாடுகளிடையே ஒருங்கிணைந்த செயல்பாட்டை உருவாக்கி வருகிறது.
இதனால் இன்று கொரோனாவை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்துள்ளது.
குறுகிய காலத்தில், கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகளை மனிதகுலம் கண்டு பிடித்ததின் விளைவாக இன்று பல நாடுகள் கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து விடுபட தொடங்கியுள்ளன. மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
உலக நாடுகளின் அரசுகள் இன்னும் கூடுதல் ஒத்துழைப்புடன், அதிக அக்கறையுடன்,பொறுப்புணர்வுடன் செயல்பட்டிருந்தால் பாதிப்புகளை பல மடங்கு குறைத்திருக்க முடியும்.
தனிநபர் இடை வெளியை பரமாரிக்க வேண்டும்,கைகளை அவ்வப் பொழுது நன்றாக சோப்புப் போட்டு கழுவ வேண்டும், கைகளை கிருமிநாசினி கொண்டு தூய்மை படுத்திக் கொள்ள வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும்.இவற்றை எல்லாம் செய்தால், கொரோனா தொற்றை தடுக்கலாம் என்ற எளிய அறிவியல் சார்ந்த வழிகாட்டல்கள் கூட நவீன அறிவியல் மருத்துவத்தின் சாதனையாகும்.
முகக் கவசம் பயன்பாட்டிற்கு வர காரணமாக இருந்தவர் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜோகன் மிக்குலிக்ஸ் ஆவார்.
இவர் 1897 ல் முகக்கவசத்தை தொற்றை தடுத்திட பயன்படுத்தத் தொடங்கினார்.
பாபா ராம்தேவ் போன்றோர் முகக்கவசத்தை அணியாவிட்டாலும், அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் அதை அணிவதால்தான் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதை அறிய வேண்டும்.
உலகமே இன்று அறிவியலை நம்புகிறது. அறிவியல் சார்ந்து செயல்படுகிறது. இதற்கு முன்பு இத்தகைய நிலை உலக வரலாற்றில் இருந்ததில்லை.
நவீன அறிவியல் மருத்துவத்தின் வழிகாட்டல் அடிப்படையில் உலகம் செயல்படாமல் இருந்திருந்தால், கொரோனாவால் உலகில் பல கோடி மக்கள் மடிந்திருப்பார்கள்.
கொரோனா ஒரு பெரும் சவாலாக இருந்த போதிலும் அதை மனித குலம் வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவியதும், லட்சக்கணக்கான மக்கள் உயிர் பிழைத்திட உதவியதும் நவீன அறிவியல் மருத்துவம் தான்.
கொரோனா மனித உடலில் எத்தகைய மாற்றங்களை உருவாக்குகிறது.அதை எவ்வாறு தடுப்பது என்பதை நவீன அறிவியல் மருத்துவ உலகம் குறுகிய காலத்திற்குள்ளாகவே கண்டறிந்துவிட்டது. அது மாபெரும் சாதனையாகும்.
இச்சாதனையின் மூலம் ,சரியான நேரத்தில் சரியான சிகிச்சைகளை ஸ்டீராய்டு, எனாக்சபெரின், ரெம்டிசிவிர், நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்ட மருந்துகள் மூலம் சிகிச்சைகள் வழங்கிட முடிகிறது. நோயாளிகளை காப்பாற்ற முடிகிறது.
இத்தகைய சிகிச்சை முறையின் காரணமாகவே இறப்பு விகிதம் 1.5 விழுக்காடு அளவிற்கு உள்ளது. அறிவியல் ரீதியாக சிறந்த மருத்துவக் கட்டமைப்போடு செயல்படும் கேரளத்தில் 0.4 விழுக்காடாக உள்ளது. இத்தகைய மருத்துவ முறை இல்லை எனில் இறப்பு விகிதம் பல மடங்கு அதிகரித்திருக்கும்.
இன்னும் சொல்லப்போனால், நமது மருத்துவக் கட்டமைப்பு ,பொதுசுகாதாரத்துறை மோசமாக இருப்பதாலும், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு மத்திய மாநில அரசுகள் நீண்ட காலமாக குறைவான நிதி ஒதுக்குவதும், மருத்துவம் தனியார் மயமானதும்,கார்ப்பரேட் மயமானதும் அனைவருக்கும் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் செய்துவிட்டன.இல்லை எனில் இன்னும் கூட இறப்புகளை குறைத்திருக்க முடியும்.
தடுப்பூசிகளை அதிக அளவில் உற்பத்தி செய்து, இந்திய மக்களுக்கு அளித்திருந்தால், இரண்டாவது அலையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையுடன் எடுத்திருந்தால் இன்று ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் தடுத்திருக்க முடியும். இதை நமது அரசுகள் செய்யத் தவறிவிட்டன.
கொரோனா நோயாளிகள் அதிகம் இறப்பதற்கு நமது மருத்துவக் கட்டமைப்பு குறைபாடும், போலி அறிவியலும், மக்கள் மத்தியில் பாபா ராம்தேவ் போன்றோர் பரப்பும் தவறான கருத்துக்களும், மூட நம்பிக்கைகளும், “கோரோனில்’’ போன்ற நிரூபணமாகாத மருந்துகளும் ,மருத்துவ முறைகளும் தான் மிக முக்கியக் காரணம்.
இவற்றை எல்லாம் மூடி மறைத்து விட்டு, “ தற்போது கடைபிடிக்கப்படும் அலோபதி மருத்துவமுறை ( நவீன அறிவியல் மருத்துவம் ) முற்றிலும் முட்டாள்தனமானது. ரெம்டிசிவிர் போன்ற அலோபதி மருந்துகள் மக்களின் உயிரை காப்பதில் தோல்வி அடைந்து விட்டன. அலோபதி மருந்துகளாலும், மருத்துவத்தாலும் லட்சக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம்.இந்த முறையை முற்றிலும் நீக்கிவிட்டு ஆயுர்வேதா முறையை அமல்படுத்த வேண்டும்’’ என பாபா ராம்தேவ் குற்றம் சாட்டியுள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியதாகும்.
குளோரோகுவின், ஐவர்மெக்டின், ஸ்டீராய்டு, பேபிஃபுளு, ரெம்டிசிவிர் போன்ற மருந்துகளை மத்திய அரசு பரிந்துரையின் அடிப்படையில் தான் நவீன அறிவியல் மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாபா ராம் தேவின் தாக்குதல் என்பது, நவீன அறிவியல் மருத்துவர்களுக்கும், நவீன அறிவியல் மருத்துவத்திற்கும் எதிரானது மட்டுமல்ல. அவரது தாக்குதல் ஒட்டு மொத்த அறிவியலுக்கும் எதிரானது. பிற்போக்கானது. அறிவியல் மீது மக்களுக்கு நம்பிக்கை இழக்கச் செய்வது. தனது பதஞ்சலி நிறுவனத்தின் மருந்துகளை ,பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்து , லாபத்தை பல மடங்கு பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கம் கொண்டது.
“ஒரே தேசம் ஒரே மருத்துவமுறை’’ என்ற அடிப்படையில், இந்தியாவில் ஆயுர்வேதா மருத்துவ முறை என்ற “ஒற்றை மருத்துவ முறையை’’ திணிக்க வேண்டும் என்ற இந்துத்துவா சக்திகளின் ,மத்திய அரசின் நோக்கம் இதில் அடங்கியுள்ளது.
பாபா ராம்தேவின் விஷமத்தனமான உள்நோக்கம் கொண்ட கருத்துக்கள், நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிரானது. கொரோனாவை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசின் மீதான மக்களின் கோபத்தை, அலோபதி மருத்துவர்கள் மற்றும் மருத்துவ முறையின் மீது திசை திருப்பும் நோக்கம் கொண்டது.
பாபா ராம்தேவ் போன்ற “கார்ப்பரேட் சாமியார்களின்’’ , அறிவியலுக்கு எதிரான பரப்புரைகளை நம்பி, மக்கள் நவீன அறிவியல் மருத்துவத்தின் மீது நம்பிக்கையை இழந்து, கொரோனாவிற்கு சிகிச்சை பெற நவீன அறிவியல் மருத்துவ முறைகளை உடனடியாக நாடாவிட்டால் பாதிப்புகள் அதிகரிக்கும்.
பொறுப்பற்ற முறையில், பெருந்தொற்று காலக்கட்டத்தில் அறிவியலுக்கு எதிரான பிற்போக்குக் கருத்துக்களை பரப்பி வரும் , பாபா ராம் தேவை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
நிரூபணமாகாத மருந்துகளையும், மருத்துவப் பொருட்களையும் விற்பனை செய்துவரும் பதஞ்சலி நிறுவனத்தை தடை செய்ய வேண்டும். முறைகேடாக அவர் சேர்த்த சொத்துக்களை நாட்டுடைமையாக்க வேண்டும் என மத்திய அரசை சமூக சமத்துத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்
கொள்கிறது.