நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது. முதலமைச்சராக பொறுப்பேற்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் தன்னைப் பற்றிய குறிப்பில் தி திரவிடியன் ஸ்டாக் என்ற குறிப்பை சேர்த்தார். இது சர்ச்சையான நிலையில், தி திரவிடியன் ஸ்டாக் என்ற தலைப்பில் முரசொலியில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் கட்டுரை எழுதியிருந்தார்.
இதுகுறித்து தோழர் தியாகு ஆற்றியுள்ள எதிர்வினை:
தோழர் சுபவீ அவர்களுக்குத் திறந்த மடல்
திராவிடம் மொழி?
திராவிடம் இனம்?
திராவிடம் நாடு?
திராவிட வல்லுநர் மன்றம் சென்ற மே 18ஆம் நாள் இரவு ‘The DRAVIDIAN STOCK’ என்ற தலைப்பில் ஒழுங்கு செய்திருந்த இணையக் கருத்தரங்கில் உங்கள் உரை கேட்டேன். அதே உரை மே 21ஆம் நாள் முரசொலி நாளேட்டிலும் வெளியிடப்பட்டிருக்கக் கண்டேன்.
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் தம்மைப் பற்றி Dravidian Stock என்று அறிமுகம் செய்து கொண்டிருப்பதை ஒட்டி எழுந்துள்ள விவாதத்தில் உங்கள் பங்களிப்பாக இந்த உரை அமைந்துள்ளது.
திராவிடம் என்ற சொல் அரசியல் அரங்கில் புழங்கத் தொடங்கிய வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைத்து விட்டுச் சொல்கின்றீர்கள்:
”எல்லாம் தெரிந்திருந்தும், கற்றறிந்த சிலரே இதில் உள்நுழைந்து குறுக்குச்சால் ஓட்டுகின்றனர்.”
உங்கள் நெடுக்குச் சாலின் ஊடே குறுக்குச் சால் ஓட்டும் அந்தக் கற்றறிந்த சிலரில் யாரெல்லாம் உண்டோ இல்லையோ – நான் உண்டு என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது. சில நாள் முன்னதாக ஆதன் வலைக்காட்சிக்கு நான் இதே பொருள் குறித்து வழங்கி விரிவாகக் காணப்பெற்ற செவ்வியையே ”ஒருவர் ஒரு நேர்காணலில்” கூறியவை என்று சொல்லி மறுத்துரைக்க முற்பட்டுள்ளீர்கள் என்பது தெளிவு.
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில் திமுக நண்பர்களுக்கு அரசியல் கல்வி புகட்டும் உங்கள் பாராட்டத்தக்க முயற்சி இந்த உரையிலும் வெளிப்படுகிறது.
நீங்கள் சொல்கின்றீர்கள்: ‘தமிழ்’ என்பது நம் மொழியின் பெயர், ’தமிழர்’ என்பது நம் இனத்தின் பெயர், ‘தமிழ்நாடு’ என்பது நம் நிலத்தின் பெயர். நூற்றுக்கு நூறு உண்மை. அப்படியானால் திராவிட மொழி, திராவிட இனம், திராவிட நாடு என்பன எங்கிருந்து வந்தன என்ற கேள்வி சரியானதுதான்.”
நம் மொழி தமிழ். இனம் தமிழர் நிலம் தமிழ்நாடு இது நூற்றுக்கு நூற்றுக்கு உண்மை என்று அறுதியிட்டுரைக்கின்றீர்கள். அதாவது திராவிட மொழி என்றோ திராவிடர் இனம் என்றோ திராவிட நாடு என்றோ எதுவும் இருக்க முடியாது என்பதை அனைவர்க்கும் அறைந்து சொல்கின்றீர்கள். இது மாறா உண்மை. நேற்றும் இன்றும் நாளையும் உண்மை. இடைக்கால உண்மையன்று. முக்கால உண்மை. யார் எப்போது சொன்னாலும் திராவிடம் மொழியோ இனமோ நாடோ ஆகாது என்று பொருள்.
அப்படியானால் திராவிடம் என்ற சொல் ஒருபோதும் மொழியையோ இனத்தையோ நாட்டையோ குறித்திருக்க முடியாது.
ஆனால், ”’திராவிடம்’ என்னும் சொல், மொழியை, இனத்தை, நாட்டைக் குறித்ததிலிருந்து ஒரு கருத்தியலை, ஒரு சித்தாந்தத்தைக் குறிக்கும் சொல்லாக மாற்றம் பெற்றுள்ளது” என்று அறிவிக்கவும் செய்கின்றீர்கள். இந்த மாற்றம் எப்போது எப்படி நிகழ்ந்தது? இது இயற்கையாக நிகழ்ந்த மாற்றமா? நீங்கள் வலிந்து இட்டுக்கட்டிய மாற்றமா?
”இனம் என்று எடுத்துக் கொண்டால் உலகம் முழுவதும், தொடக்கத்தில் மரபினங்கள் (Ethnic Race) இருந்தன. தேசிய இனங்களாகப் (National Race) பரிணாம வளர்ச்சி பெற்றன. நம் பழைய மரபினத்தின் பெயர் ’திராவிடர்’ என்பது.”
சுபவீ அவர்களே! நம் பழைய மரபினத்தின் பெயர் திராவிடம் என்று எங்கே படித்தீர்கள்? இதற்கு இலக்கியச் சான்று உண்டா? வரலாற்றுச் சான்று உண்டா? தொல்காப்பியம் “தமிழ்கூறும் நல்லுலகம்” என்ற போதே நாம் தேசிய இனம் ஆகி விட்டோம். தமிழ்த் தேசிய இனமாக இருந்தோம், தமிழ்த் தேசமாக வளர்ந்து நிற்கிறோம். இப்போது போய் திராவிடம் என்று செயற்கையாக ஒரு வடமொழிப் பெயரை சூட்ட வேண்டிய தேவை என்ன?
அறிஞர் கால்டுவெல்லின் தமிழ்த் தொண்டினை அறிந்தேற்றுப் போற்றிய பாவாணரே திராவிட மொழிக் குடும்பம் என்ற அன்னாரின் விளக்கத்தை ஏற்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியாத செய்தியா? தமிழ், தெலுங்கு, துளு, கன்னடம், மலையாளம் பேசியோரைத் திராவிட இனம் என்று சேர்த்தடைத்ததும், அதே போல் சென்னை மாகாணத்தைத் திராவிட நாடெனக் குறித்ததும் வரலாற்றுப் பிழைகள் என்பதை உணர்ந்தாலும் ஒப்புக் கொள்ள உங்களுக்கு மனம் வரவில்லையோ?
எப்படியானாலும், திராவிடம் மொழியோ இனமோ நாடோ அல்ல என்ற தெளிவு உங்களுக்கு இருப்பது நன்று. திமுக நண்பர்களுக்கும் உங்கள் தெளிவு தொற்றிக் கொள்ளட்டும்.
ஆனால் திராவிடர் என்பதற்கு நீங்கள் தரும் புத்தம்புது இலக்கணம் அந்த சொல் மீது நீங்கள் கொண்டிருக்கும் மையலையே காட்டுவது போல் தெரிகிறது. நாளை பார்ப்போம்.
(தொடரும்)
27/5/2021
அன்புடன்
தோழர் தியாகு பொதுச்செயலாளர்
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்