அலோபதி மருந்து முட்டாள்தனமானது என கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் கூறிய அவதூறான கருத்துக்கள் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், அவர் பேசிய மற்றொரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
“அவர்கள் சத்தம் போடுகிறார்கள். அவர்கள் #ThugRamdev, #MahathugRamdev, #GiraftarRamdev டிரெண்டிங் உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள்” எனப் பேசிய அவர், சமூக ஊடகங்களில் #ArrestRamdev என டிரெண்ட் செய்யப்படுவது குறித்து “அவங்க அப்பனால்கூட என்னை கைது செய்யமுடியாது” என சவாலாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டேராடூனைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், “ராம்தேவின் பேச்சு ஆணவம் நிறைந்தது. அவர் தன்னை சட்டத்திற்கு மேலே இருப்பதாக கருதுகிறார் என்பதை இது காட்டுகிறது” என பதிலளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்த தவறான தகவலை பரப்பியதற்காக ராம்தேவ் மீது உடனடியாக தேசத்துரோக குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.
அலோபதி மற்றும் அலோபதி மருத்துவர்களுக்கு எதிரான அவதூறான கருத்துக்களுக்காக ராம்தேவுக்கு நவீன மருத்துவர்களைக் கொண்ட மருத்துவ அமைப்பு அவமரியாதை வழக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. 15 நாட்களுக்குள் அவரிடம் மன்னிப்பு கேட்கவில்லை எனில் ரூ. 1000 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.