அய்யனார் விஸ்வநாத்
‘கள’ தமிழர்களை இழிவுபடுத்தும் இன்னொரு படம் என்பதாக விமர்சனங்களை வாசித்துவிட்டு, அபூர்வமாக இருக்கும் நல்ல மனநிலையை எதற்காகாக் கெடுத்துக் கொள்வானேன் என்று பார்ப்பதைத் தள்ளிப் போட்டேன். ஆனால் ’ஒன்’ ’ஆர்க்கரியாம்?’ நிழல், ’ஓப்ரேஷன் ஜாவா’ என வரிசையாக மலையாளப் படங்களைப் பார்த்துத் தள்ளியதால் உருவாகியிருந்த அடிக்ஷன் மனநிலையை ஒன்றும் செய்யமுடியவில்லை. கை நடுக்கத்தோடு பார்த்தே விட்டேன்.
ஆம், கள திரைப்படம் இனத்துவேஷம் பேசுகிறதுதான். மல்லுகளின் வழக்கமான ’சீப் லேபர்’ வசனங்களை சொல்கிறதுதான். அதிலும் உச்சமாக ஒரு காட்சியையும் வைத்திருக்கிறார்கள். குளித்துவிட்டு தன் உள்ளாடைகளை தோட்டத்துக் கயிற்றுக் கொடியில் உலர்த்தும் திவ்யா, அங்கு வேலை செய்யும் தமிழ் வேலையாட்களைப் பார்த்து முகம் சுளித்து மீண்டும் ஆடைகளை வீட்டுக்கு உள்ளே கொண்டு போகிறார். இந்தக் காட்சி எரிச்சலை வரவழைத்ததுதான் ஆனால் அட்டப்பாடியைச் சேர்ந்த தமிழ் பழங்குடி இளைஞனான சுமேஷின் அறிமுகத்திற்குப் பிறகு படம் பேசும் அரசியல் தலைகீழாக மாறுகிறது.
கள திரைப்படம் தமிழர்களும் தலித்துகளும் கேரள ஆண்டைகளிடம் தங்களின் நிலங்களையும் வாழ்வையும் பறிகொடுத்த வரலாறை ஆவேசத்துடன் பேசுகிறது. அதுவரை ஹீரோவாக இருந்த டொவினோ தாமஸ் வில்லனாக மாறுகிறான். சுமேஷ் ஆக்ரோஷமான கதாநாயகனாகிறான். கொல்லப்பட்ட அவனது நாய் அவன் நிலத்தின்/ வாழ்வாதாரத்தின் குறியீடாகிறது.
லாலின் பரம்புக்கு தமிழ் வேலையாட்களுடன் பணியெடுக்க வரும் சுஜி இந்த நிலம் எங்களுக்கு சொந்தமானது என்றும் எங்கள் முன்னோர்களிடம் இவர்கள் அடித்துப் பிடுங்கினார்கள் என்றும் அந்த மோதல்களின் சாட்சியாக இருப்பதுதான் லாலின் முகத்திலிருக்கும் தழும்பு என்றும் படம் பேசும் அரசியலுக்கு நேரடியாக வலுசேர்க்கிறார்.

ஆண்டை அப்பாவுக்கு இருக்கும் பணம் சேர்க்கும் திறமை மகனுக்கு இல்லை. அவர் அதை குத்திக் காட்டிக் கொண்டே இருக்கிறார். இவன் அதை நிவர்த்தி செய்ய தன் உடலை வலுப்படுத்துகிறான். தன் மனைவியிடம் ஆண்மையைச் செலுத்துகிறான். மகனிடம் ஹீரோவாக காட்டிக் கொள்கிறான். அவனைப் போலவே உயர்சாதி நாயை வளர்க்கிறான். நண்பர்களோடு குடித்து கும்மாளமிடுகிறான். ஆனாலும் அவன் அப்பாவுக்கு இவன் சோப்ளாங்கிதான். டொவினோ இந்த தடுமாற்றமான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். ஒரே ரத்தக் களறியாக உடலைப் பிய்த்துப் போட்டு இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறார். உள்ளாடையோடு கழிவறையில் ஒடுங்கிக் கொண்டு உயிர்ப்பிச்சை கேட்டு தன் ஆணவத்தைக் கைவிடுகிறார்.
அசல் ஹீரோவான சுமேஷ் மிகக் கொண்டாட்டமாக தன் வரலாற்றுப் பழிவாங்கலை சோ கால்டு ஹீரோவின் மீது நிகழ்த்துகிறார். ஹீரோ தன் மகன், மனைவி மற்றும் நாய் வழியாக உருவாக்கிக் கொண்ட ஆண்மையை அவர்களின் கண் முன்பாகவே நிர்மூலமாக்குகிறார். சுமேஷின் வெறியும் வன்மமும் பரவசமும் படுபயங்கரமாக வெளிப்பட்டிருக்கிறது.
ஆனால் ஹாலிவுட் படங்களில் படம் நெடுக இரண்டு ரோபோக்கள் சண்டையிட்டுக் கொள்ளுமே அதற்கு நிகராக இவர்கள் இருவரும் அடித்துக் கொள்கிறார்கள். இந்த ரத்தக் களறியைப் பார்த்துக் கொண்டே இருக்க அலுப்பாகத்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் அடித்துக் கொள்கிறார்கள். படம் மிகப்பெரிய சோர்வையும் நமக்குக் கடத்துகிறது.
இதையெல்லாவற்றையும் தாண்டி ஒன்றை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். மல்லுகள் மேக்கிங்கில் மிரட்டுகிறார்கள். அசாத்தியமான காமிராக் கோணங்கள், உயிரைத் தரும் நடிப்பு, வலுவான அரசியல் நோக்கு என இந்தியச் சினிமாவின் பலபடிகளை முன்னுக்கு நகர்த்துகிறார்கள். தமிழ் சினிமா எவ்வளவு காலம்தான் வெறும் வாய்நோக்கியாகவே இருக்கும் என்றுதான் தெரியவில்லை.
அய்யனார் விஸ்வநாத், எழுத்தாளர்.