அருண் நெடுஞ்செழியன்
இந்த மீம்ஸ் சிரிக்க வைத்தது போல உண்மையான காரணம் குறித்தும் சிந்திக்க வைப்பதாக உள்ளது..
இருநூறு தொகுதிக்கு மேலே வென்று திமுக கூட்டணி கிளீன் ஸ்வீப் செய்யும் என எதிர்ப்பார்ப்பு நிலவிய நிலையிலே சுமார் 160 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றிருப்பதும் சுமார் 75 தொகுதிகளில் அஇஅதிமுக முன்னிலை பெற்றுள்ளதும் எடப்பாடி ஆட்சிக்கு ஒரு வெற்றிகரமான தோல்வியாக அமைகிறது.
அதிமுகவில் ஜெயலலிதா இல்லாமல், பத்தாண்டு கால ஆளும்கட்சி எதிர்ப்புணர்வை எதிர்கொண்டும், பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியடைந்தும் பாஜகவை கூட்டணியில் வைத்துக் கொண்டு இவ்வளவு தொகுதியில் அஇஅதிமுக முன்னிலை பெறுவது எப்படி என்ற கேள்விக்கு ஒட்டு வங்கி அரசியலில் செல்வாக்கு செலுத்துகிற சமூகப் பொறியமைப்பு உக்தியை எடப்பாடி கையாண்ட விதமே காரணமாக இருக்கும் என தெரிகிறது.
சமூக பொறியமைப்பு (social engineering) உக்தி தேர்தல் அரசியலுக்கு புதிதல்ல. ஆனால் தீர்மானகரமான சக்தியாக இதுவரை உருவாகவில்லை. ஆனால் தற்போது இந்த உக்திதான் அஇஅதிமுக படுதோல்வியடையாமல் காத்துள்ளதாக தெரிகிறது.
சாதி அணிதிரட்டலை ஒட்டுவங்கியாக மாற்றுகிற கட்சிகளுடன் கூட்டணிகள்,சாதி ரீதியான சலுகைகள் ஆகியவற்றை பாமக மூலமாக எடப்பாடி சாதித்ததன் விளைவை இத்தேர்தல் முடிவு காட்டுகிறது. வன்னியர்களுக்கான 10.5 %உள் ஒதுக்கீடு நாடகம் சாதிரீதியான ஒட்டு வங்கியை அதிகப்படுத்தியுள்ளாதாகவே தெரிகிறது. அதிமுகவின் வெற்றி பரவலாக இல்லாமல் கொங்கு மண்டலம், தருமபுரி மாவட்டம், சேலம் மாவட்டம் என கொங்கு வேளாளர்கள் மற்றும் வன்னியர்கள் பெரும்பான்மையுள்ள சாதிய இறுக்க பிராந்தியங்களில் கிடைத்துள்ளது கவனிக்கத்தக்கது. சென்னை திருவள்ளூர், திருச்சி, மதுரை என நகரங்கள் துணை நகரங்கள் மற்றும் காவிரி டெல்ட்டா திமுகவிற்கு கை கொடுத்துள்ளது.
காலையில் தொலைக்காட்சி விவாதத்தில் திமுக கிளீன் ஸ்வீப் செய்யமுடியாத காரணம் குறித்த தோழர் ஜெயரஞ்சன் பேசும்போது, இதற்கு என்ன காரணம் என தெரியவில்லை, நாம் ஏதோ ஆய்வுசெய்து பேசுகிறோம்,மக்கள் வேறு ஏதோ ஒன்று நினைக்கிறார்கள். மக்களிடம் நாம் அன்னியப்பட்டுள்ளோம் என்று மட்டும் தெரிகிறது என்றார். முகநூல் அரசியல் கணக்கு வேறு, நடைமறையில் மக்கள் கணக்கு வேறு என்பதை இத்தேர்தல் முடிவு கோடிட்டு காட்டுகிறது.
உலகமயப் பொருளாதாரம் கிராமப்புறத்தை திவால் ஆக்குகிற நிலையில்,பின்தங்கிய சாதிகள் சமூக பொருளாதார முரண்பாடுகளை சாதி முரண்பாடுகளில் தீர்க்கிற ஆபத்து முன் எழுந்துள்ளது.உலகமயம் சாதிய அணிதிரட்டலை கூர்மையாக்கியுள்ளது. சாதிரீதியான பிற்போக்கு அரசியல் அணிதிரட்டலுக்கு இரையாகாமல் பொருளாதாரம், பண்பாடு, கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளின் பாற்பட்ட ஒரு ஜனநாயக வேலைத்திட்டத்தில் வேலை பார்க்கவில்லை. இல்லைஎனில் சாதி ரீதியான சமூக முரண்பாடுகள் தேர்தல் அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக உருப்பெறும்.
தமிழகத்தை சாதி ரீதியாக மூன்றாக பிரிக்கவேண்டும் என பாமக முன்வைக்கிற கோரிக்கை வரும்காலத்தில் முக்கிய அரசியல் கோரிக்கையாக மாறுகிற ஆபத்தும் உள்ளது..
அருண் நெடுஞ்செழியன், அரசியல் விமர்சகர்; எழுத்தாளர்.