ஹிட்லரை விடவும் இரக்கம் உள்ளவர் வேதாந்தா முதலாளி என்பதில் என்ன சந்தேகம்? மு. அகமது இக்பால்

மு. இக்பால் அகமது

கீழ்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றுக்கு ஒரு பக்கத்துக்கு மிகாமல் கட்டுரை வரைக: 1. பணம் பாதாளத்தை தாண்டியும் பாயும் – உதாரணங்களுடன் நிறுவுக.
2. விச வாயுக்களின் பயனும் அவற்றின் உற்பத்தியாளர்களின் கதையும்
…. … …
மாணவன் எழுதிய கட்டுரை:
(விடைத்தாளை திருத்தும் அய்யா! எனக்கு தெரிந்ததை எழுதியிருக்கின்றேன், அது ஒன்றாவது தலைப்புக்கு உரியதா இரண்டாவதுக்கு உரியதா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்)
1. 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலகப்போரில் நாஜி ஹிட்லர், கார்பன் மோனாக்சைடு, Zyklon B என்று அழைக்கப்பட்ட ஹைட்ரஜன் சயனைடு ஆகிய வாயுக்களை மூடப்பட்ட மிகப்பெரும் அறைகளில் செலுத்தி, அடைத்து வைக்கப்பட்ட 10 லட்சம் யூதர்கள், சுமார் 75000 போலந்தியர்கள், 20000 ஜிப்ஸிகள், சிறை பிடிக்கப்பட்ட 15000 சோவியத் வீரர்கள், 10000-15000 செக்கோஸ்லோவாக்கியர், பைலோரஷ்யன், யுக்கோஸ்லோவியர், பிரெஞ்சு, ஜெர்மானிய, ஆஸ்திரிய மக்களை கொன்றதாக வரலாறு சொல்கின்றது. இதில் ஹைட்ரஜன் சயனைடு பூச்சிக்கொல்லியாக பயன்படுத்த பட்டதாக தெரிகின்றது. போலந்தில் ஆறு இடங்களில் அத்தகைய வாயு அறைகள் இருந்ததாகவும் அங்கு கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை என்றும் வரலாறு சொல்வதை இங்கு குறிப்பிட்டுள்ளேன்:

1. Auschwitz Birkenau 11லட்சம் – Zyklon B
2. Majdanek 80,000 – Zyklon B
3. Treblinka 8 லட்சம், 4.Belzec 6 லட்சம், 5. Sobibor 250000 – டீசல் எஞ்சினை ஓடவிட்டு அதில் இருந்து வரும் கார்பன் மோனாக்சைடு வாயுவை செலுத்தி கொன்றார்கள்
6. Chelmno 320000 – நடமாடும் வேன்களில் வாயுவை நிரப்பி தேவையான இடங்களுக்கு கொண்டு சென்று கொன்றார்கள்.

2. இவ்வாறு செத்தவர்களின் உடல்களில் இருந்து நகைகள், தங்கத்தால் ஆன பற்களை வெட்டி எடுத்துக்கொண்டார்கள். பெண்களின் கூந்தலை வெட்டி எடுத்துக்கொண்டார்கள். பின் அத்தனை உடல்களையும் குவித்து வைத்து எரித்தனர். அவ்வாறு அரைகுறையாக எரிந்த உடல்களை அரைத்து பொடியாக்க ஸ்பெஷல் அரவை எந்திரங்கள் கண்டுபிடிக்கபட்டன. அப்படி கிடைத்த பல்லாயிரம் டன் எலும்பு துகளை Sola, Vistula ஆகிய நதிகளிலும் பிற எரி குளங்களிலும் கரைத்தார்கள். அப்படியும் எஞ்சிய துகளைக்கொண்டு சாலைகளில் பள்ளங்களை நிரப்புவது, வயல்களில் உரமாக்குவது என பயன்படுத்தினார்கள்.

3. Union Carbide என்னும் அமெரிக்க கம்பெனி, மத்திய பிரதேசத்தில் போபாலில் ரசாயன தொழிற்சாலை நிறுவியது. 1984ஆம் ஆண்டு டிசம்பர் 2-3 நள்ளிரவில் அந்த தொழிற்சாலையில் இருந்த Methyl Isocyanide என்ற வாயு கசிந்ததால் தூங்கிக்கொண்டு இருந்த பல்லாயிரம் மக்கள் அவ்வாயுவை சுவாசித்து செத்து மடிந்தார்கள். தொழிற்சாலையின் அமெரிக்க நிர்வாகி ஆன வாரன் ஆண்டர்சனையும் இந்தியர்கள் ஆன சில நிர்வாகிகளையும் மாநில அரசு கைது செய்தது. ஆண்டர்சன் ஆறே மணி நேரத்தில் 25000 ரூபாய் ஜாமீனில் வெளியே வந்தார். அன்று ம.பி. காங்கிரஸ் முதல்வராக இருந்த அர்ஜுன் சிங்கும் ஆண்டர்சனும் நெருங்கிய நண்பர்கள். ஆண்டர்சன் மாநில அரசு ஏற்பாடு செய்த ஒரு விமானத்தில் டெல்லி சென்றார், அங்கிருந்து அமெரிக்கா சென்றார், அதன் பின் அவர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது ஆயினும் அவரை அமெரிக்க அரசும் இந்தியாவுக்கு அனுப்பவில்லை, இந்திய அரசு அல்லது அரசுகளாலும் அவரை இங்கே கொண்டு வர முடியவில்லை. அன்றைய பிரதமர் காங்கிரஸ் கட்சியின் ராஜீவ் காந்தி. ஆண்டர்சன் நிம்மதியாக மரணமுற்றார், விச வாயுவால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட, செத்து மடிந்த இந்திய மக்களின் குடும்பங்கள் நிவாரண தொகைக்காக இப்போதும் அலைந்து கொண்டே இருக்கிறார்கள். வாயுவால் பாதிக்கப்பட்டோருக்கு பிறந்த பல குழந்தைகள் இறந்தன, இப்போதும் உடலும் உள்ளமும் ஊனமுற்ற பல நூறு குழந்தைகள் அல்லது இளைஞர்களை போபாலில் பார்க்கலாம். 9 லட்சம் போபால் மக்களில் சுமார் 20000 பேர் ஒரே நாளில் செத்து மடிந்தனர், 6 லட்சம் பேர் விச வாயுவால் வாழ்நாள் நெடுக பாதிப்புக்கு உள்ளானார்கள்.

4. அதன் பின் நடந்த விசாரணையிலும் பொதுநல அமைப்புகள் மேற்கொண்ட பல்வேறு விசாரணைகளிலும் தெரிய வந்தவை மிக மிக அதிர்ச்சி அளிப்பவை. Carbaryl எனப்படும் பூச்சிக்கொல்லிதான் selvin என்ற பெயரில் அங்கே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இரண்டாம் உலகப்போரில் எதிரிநாட்டு மக்கள் மீது வீசப்பட்ட Phosgene என்ற ரசாயனமும் மீதைல் ஐஸோ சயனைடும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் மிக மிக அதிகமாக அங்கே இருப்பில் வைக்கப்பட்டன என்பது பல முறைகேடுகளில் ஒன்று மட்டுமே. அமெரிக்காவில் இருந்த அதே யூனியன் கார்பைடு கம்பெனியில் கடைபிடிக்க பட்ட மிகப்பல கறாரான பாதுகாப்பு, எச்சரிக்கை அம்சங்கள், அளவீடுகள், பயிற்சிகள், ஆபத்துக்கால நடைமுறைகள், நிவாரணங்கள் எதுவுமே இங்கே போபால் உற்பத்தி சாலையில் கடைப்பிடிக்க படவில்லை என்பதே அந்த உண்மை. குறிப்பாக வாயு கசிந்தால் தானாகவே எச்சரிக்கை அடைந்து தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஆன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவும் அமெரிக்க தொழிற்சாலையில் தானியங்கி முறையில் computerized இயங்கின. இங்கே அப்படி இல்லை. அதாவது மத்திய, மாநில அரசுகள் அமெரிக்க முதலாளிக்கு சாதகமாக, உள்ளூர் மக்களுக்கு விரோதமாக நடந்து கொண்டு இருந்தன.

5. அனில் அகர்வால் என்ற முதலாளி பீகாரில் பிறந்தவர், பழைய இரும்புக்கு பேரீச்சம் பழம் விற்கும் காயலாங்கடை தொழில் செய்தவர் இங்கிலாந்து சென்றார். Vedanta Resources ltd என்கிற கார்பொரேட் நிறுவனத்தை தொடங்கினார். அம்பானி அதானி மிட்டல் போல இவரும் உழைப்பால் உயர்ந்து உத்தமர் ஆனார், எனவே இயற்கையாகவே ஆளும் உத்தமர்களுக்கும் நண்பர் ஆனார். 2017இல் அவர் சொத்து மதிப்பு 330 கோடி டாலர், அதாவது ரூபாய் மதிப்பில் சுமார் 21485 கோடி. 1992 காங்கிரஸ் நரசிம்மராவ் ஆட்சியில் மஹாராஷ்டிராவில் ரத்னகிரியில் 500 ஏக்கர் நிலத்தை வருடத்திற்கு 60000 டன் தாமிரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க அரசு கொடுத்தது. ஸ்டெர்லைட் ஆலை என்று பெயர். ஏற்பட இருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பையும், கடற்கரை, கடல்சார்ந்த தம் வாழ்க்கை அழிய இருப்பதையும் உணர்ந்த உள்ளூர் மக்கள் தொடர்ந்து போராடியதால் 15.7.1993 அன்று கட்டுமான வேலைகளை நிறுத்துமாறு ஸ்டெர்லைட்டுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

6. ஸ்டெர்லைட் முதலாளி தமிழ்நாட்டுக்கு வந்தார். மாநிலத்தில் அதிமுக, மத்தியில் காங்கிரஸ். 1.8.1994 அன்று தமிழ்நாடு சுற்றுச்சூழல் கட்டுப்பாடு வாரியம் TNPCB , தூத்துக்குடியில் தாமிர உற்பத்தி ஆலை அமைந்தால் சாத்தியம் ஆக கூடிய விளைவுகளை ஆய்வு செய்ய தடை இல்லா சான்றிதழ் NOC வழங்கியது. 14.10.1996 அன்று ஆலை தொடங்க மாநில அரசு லைசென்ஸ் வழங்கியது. ஆட்சியில் திமுக, மத்தியில் தேவ கவுடா.

7. 2.3.1999 அன்று தூத்துக்குடி அகில இந்திய வானொலி ஊழியர்கள் வாயுகசிவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலையின் தவறு ஒன்றும் இல்லை என மாநில அரசு சான்று வழங்கியது. மாநிலத்தில் திமுக, மத்தியில் பிஜேபி வாஜ்பேயி. தவிர, உற்பத்தியை ஏறத்தாழ இரண்டு மடங்காக உயர்த்தவும் அனுமதி வழங்கினார்கள். நவம்பர், டிசம்பர் 2000த்தில் பெய்த பெருமழைக்கு பின் ஆலையில் தேங்கி இருந்த விச தன்மை வாய்ந்த கழிவுநீரை நிறுவனம் மழை நீருடன் வெளியேற்றியதாக 2.1.2001 அன்று மக்கள் அரசிடம் புகார் செய்தார்கள். மாநிலத்தில் திமுக, மத்தியில் காங்கிரஸ் அரசு.

8. ஸ்டெர்லைட் ஆலை தன் உற்பத்தியை அதிகரிக்க அனுமதிக்க கூடாது என உச்சநீதிமன்றம் நியமித்த கண்காணிப்பு குழு 21.9.2004 அன்று பரிந்துரைத்தது. தவிர, அரசின் அனுமதி இன்றி உற்பத்தியை அதிகரிக்கும் வண்ணம் ஏற்கனவே ஆலையில் கட்டுமானங்களை ஸ்டெர்லைட் ஏறத்தாழ முடித்து இருந்ததையும் கண்டுபிடித்தனர். இப்போது ஆட்சியில் அதிமுக, மத்தியில் காங்கிரஸ். ஆனால் மறுநாளே மத்திய வனங்கள், சுற்றுசூழல் அமைச்சகம், ஆலையின் விரிவாக்கத்துக்கு அனுமதி சான்று வழங்கியது.

9. 16.11.2004 அன்று TNPCB சமர்ப்பித்த அறிக்கையில், அனுமதி இல்லாத அதிக உற்பத்தி, புதிய உற்பத்தி ஆலைகள் இருப்பதை சொன்னது. ஆனால் 7.4.2005 அன்று மத்திய அமைச்சகம், உயர்த்தப்பட்ட உற்பத்திக்கு அனுமதி வழங்குமாறு மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. 2008இல் (திமுக, காங்கிரஸ் ஆட்சிகள்), மேலும் உற்பத்தியை அதிகரித்தது ஸ்டெர்லைட்.

10. 1996இல் வைகோவும் பிறரும் தொடர்ந்த வழக்கில், 28.9.2010 அன்று ஆலையை மூடுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டது. ஆட்சியில் திமுகவும் காங்கிரசும். 1.10.2010 அன்று உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்ற ஆணைக்கு தடை விதிக்க, லைசென்ஸ் இல்லாத உற்பத்தியை ஸ்டெர்லைட் தொடர்ந்தது! அக்ட்டோபார் 2010-ஏப்ரல் 2013 இடைக்காலத்தில் 3 தொழிலாளர்கள் விபத்தில் இறந்தார்கள், எட்டு விபத்துக்கள் நேர்ந்தன.

11. 23.3.2013 அன்று (அதிமுக, காங்கிரஸ் அரசுகள்) சல்பர் டை ஆக்சைட் பெருமளவு கசிந்து தூத்துக்குடி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். TNPCB வழக்கம்போல அமைதி காத்தது. மக்கள் போராடியதால் 29ஆம் தேதி ஆலையை மூட உத்தரவு இடப்பட்டது. கசிவு தன் ஆலையில் ஏற்பட்டது அல்ல என ஸ்டெர்லைட் வாதிட்டது. ஏப்ரல் 2 2013 அன்று உச்சநீதிமன்றம் இப்படி சொன்னது: ராணுவம், மின்சாரம், வாகன உற்பத்தி என பல தொழில்களுக்கும் தாமிரம் வேண்டும். 1300 பணியாளர்கள் வேறு வேலை செயகின்றார்கள். … எனவே ஸ்டெர்லைட்டுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கின்றோம், ஆனால் ஆலையை மூட அவசியமில்லை.

12. இதன் பின் 22.5.2018, மாநிலத்தில் அதிமுக, மத்தியில் பிஜேபி, அன்று தூத்துக்குடியில் போலீஸ் மக்களை நெஞ்சிலும் தலையிலும் சுட்டதில் 13 பேர் உயிர் இழந்தார்கள். 28ஆம் தேதி ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இப்போது வேதாந்தா முதலாளி இரக்கப்பட்டு ஆக்சிஜன் தயாரித்து மக்களுக்கு தர முன் வந்துள்ளார். அவர் இரக்கத்தை பாராட்டாமல் என்ன செய்வது? ஹிட்லர் கேஸ் அறைகளில் 3150000 பேரை மட்டும்தானே கொன்றான்? அவனை விடவும் இரக்கம் உள்ளவர் வேதாந்தா முதலாளி என்பதில் என்ன சந்தேகம்?

மு. இக்பால் அகமது எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.