மரு. கு. சிவராமன்
கோவிட் இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடிவருகிறது. ஒருபக்கம் ஊரடங்கு, வாக்சின் என பல முனைப்புகளை அரசும் எடுத்து வருகின்றது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெடம்சவிர் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என பயமுறுத்தும் விஷயங்களும் கூடவே..மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு முன்களத்தில் நிற்கும் அத்தனை மருத்துவ கார்பரேஷன் காவல் பணியாளர்களுக்கு உள்ள கடும் பணிச்சுமை நெருக்கடி…
நம்மளவில் நாம் அக்கறையோடு இருக்க வேண்டிய சூழல் இது. நாம் அக்கறையாக இருந்தால் மட்டுமே அவர்களின் சுமை குறையும். முக உறை, கைகளை சுத்தம் செய்தல், சமூக இடைவெளி இவற்றை துளியும் அவமதிக்காமல் பின்பற்றுவது நம்மை மட்டுமல்ல, பெயர் தெரியாத எல்லோரையும் காப்பாற்ற நாம் எடுக்க வேண்டிய முக்கிய கடமை.
அடுத்ததாய் அக்கறையான உணவு. “சாப்பாட்டில் அக்கறை கரோனாவை கொன்றழிக்குமா என்ன? ” என விஷமத்தனமான கேள்விகளை ஒரு கூட்டம் கேட்டுக்கொண்டே இருக்கின்றது. நம் உணவுகள் நம் உடலின் innate immune system சிறப்புடன் செயல்பட நிச்சயம் பயனளிக்கின்றது. அது கோவிட் நோயிலும் என்கிற கருத்து அறிவியலாளரிடம் வலுப்பெற்றுக் கொண்டே வருகின்றது. அவை கொடுக்கும் பாதுகாப்பு குறித்து உலகளவில் பல ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. அதன் முடிவுகளெல்லாம் வரும்போது வரட்டும். நாம் இப்போதைக்குச் செய்ய வேண்டியது இவைதான்…
காலை பானம் 6.30
இஞ்சி
எலுமிச்சை
சாறும்
தேனும் கலந்த வெந்நீர் பானம்
(Fresh இஞ்சிக்கு பிற நுரையீரல் பாதை தொற்றை தடுக்கும் ஆற்றல் உள்ளது; எலுமிச்சைக்கும் கூட)
காலைச் சிற்றுண்டி 8.30
கொய்யா பழ/ வாழைப்பழ துண்டுகள்
இட்டிலி காரமில்லா சட்டினி/இடியாப்பம் -தேங்காய்ப்பால்
சிகப்பரிசி அவல்(மாப்பிள்ளை சம்பா)
4-5 பாதாம் வாய்ப்பிருந்தால்
அல்லது வேகவைத்த நிலக்கடலை ( zinc நிறைந்தது)
தினைப்பொங்கல்-4 அல்லது 5 முந்திரியுடன்
அல்லது தானியங்களும் பயறும் நிறைந்த சத்துமாவுக் கஞ்சி
( பாதாம், முந்திரி, பயறுகளில் – கரோனா நோய் மேலாண்மைக்கு அவசியமான zinc சத்து உள்ளது)
இட்டிலி (அ)தோசை – கறிவேப்பிலை சட்டினி, வெங்காய்ச் சட்டினி
உணவுக்குப் பின்- 15 நிமிடம் கழித்து கபசுரக் குடினீர் 60மிலி -14 நாட்கள் மட்டும் ( மூலம், வயிற்றுப்புண்கள் இருப்பவர்கள் தவிர்க்கலாம். அதற்கு பதிலாக அதிமதுரம் மாத்திரை தினசரி 2 எடுக்கலாம்)
11.30 மணிக்கு
நெல்லிக்காய்ச் சாறு அல்லது
இளனீர் அல்லது
மோர்
(நெல்லிக்காய் விட்டமின்-சி யில் ஆரம்பித்து பல நோய் எதிர்ப்பாற்றல் சத்து உள்ள சித்த காய கற்ப மூலிகை; மோர் ஒரு probiotic)
மதிய உணவு 1.30 மணிக்கு
கீரை பொரியலாகவோ/கடைந்தோ/ சூப்பாகவோ
காய்கறிகளில்- வெண்டை, அவரை, பீர்க்கு முதலான குறைந்த பட்சம் இருகாய்
கண்டிப்பாககூட ஏதேனும் பயறு சேர்ந்த தானியம்,
புலால் உண்போர் முட்டை அல்லது மீன்,
கைக்குத்தல் அரிசி அல்லது பழுப்பு அரிசி
; எல்லா உணவிலும் மஞ்சளும் மிளகும் தாராளமாய் சேர்ப்பது நன்று. இக்கோடையில் மோர் அவசியம்;
(பல கீரைகளில் ஃபோலிக் அமிலம், zinc சத்து உள்ளது; சித்த மருத்துவம் தாதுபலம் கூட கீரையை பலமாய்ப் பரிந்துரைக்கின்றது.; பயறும் மீனும் முட்டையும் நோய் எதிர்ப்பாற்றலுக்கான essential amino acid நிறைய கண்டிப்பாக உள்ளன. மிளகு bio availability ஐ உயர்த்தும்.
மாலை 4.30க்கு
நிலக்கடலை சுண்டல் அல்லது கருப்பு அல்லது சிகப்பு கொண்டைக்கடலை சுண்டல்
நிலக்கடலை zinc சத்தும் புரதச்சத்தும் உள்ள சுவையான நொறுவல்) மற்றும்
மூலிகைத் தேநீர் தயாரிப்பு
சுக்கு, மல்லிவிதை, மிளகு அன்னாசிப்பூ, கடுக்காய்த்தோல், இலவங்கப்பட்டை, சித்தரத்தை, துளசி, மஞ்சள் தூள், திப்பிலி சம அளவில் சேர்த்து அரைத்த பொடியைக் கொண்டு மூலிகை டீ தயாரித்து வாரம் 3 நாள் போல மாலையில் அருந்தவும். இனிப்புக்கு கருப்பட்டி அல்லது தேன் மட்டும் பயன்படுத்தவும்
7மணி அளவில்
சிகப்பரிசி இட்டிலி, கேழ்வரகு தோசை அல்லது கூழ் அல்லது முழு கோதுமை சப்பாத்தி(பொதுவாய் கோடையில் இரவில் சப்பாத்தி தமிழ் நாட்டுக்கு ஆகாது); பாசிப்பருப்பும் கருப்பு உளுந்தும் சேர்த்த கறி அல்லது தனி பழ உணவு
பால் வேண்டும் என்ற பழக்கமுள்ளோர், பால் அவசியப்படும் குழந்தைகள் கர்ப்பிணிகள், பாலூட்டுவோர், முதியோர் பாலில் மஞ்சள்தூள் மிளகுதூள் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட வேண்டும். பிறர் பாலை மோராகச் சாப்பிடுவது நன்று.
இரவு படுக்கும் முன்னர் ஆடாதோடை மணப்பாகு 10மிலி – 30மிலி வெந்நீரில் கலந்து சாப்பிடவும் ( சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க) இதுகுறித்த என் காணொளியைப் பார்க்க கீழே உள்ள தொடர்பு இணைப்பைச் சொடுக்கவும்.