கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 85 வயதான ஆர். எஸ். எஸ். அமைப்பைச் சேர்ந்த நாராயண்ராவ் தபாட்கர் என்ற முதியவர், 40 வயதான ஆண் ஒருவருக்கு சிகிச்சைக்காக தன் படுக்கையை விட்டுக்கொடுத்ததாகவும், வீடு திரும்பிய அவர் மூன்று நாட்களில் உயிரிழந்ததாகவும் சமூக ஊடகங்களில் வெகுஜென ஊடகங்களில் செய்தி வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
இந்த செய்தியை முதன்முதலில் அறிக்கையாக வெளியிட்டது ஆர். எஸ். எஸ் அமைப்பு. அந்த அறிக்கையில், “இந்திரா காந்தி ருக்னலே மருத்துவமனையில் நாராயண் படுக்கைகள் நிரம்பிய நிலையில், ஒரு படுக்கையைப் பெற்றார். மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது, அவர் மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் மருத்துவமனையில் சேருவதற்கான அனைத்து நடைமுறைகளும் முடிந்த நிலையில், அப்போது ஒரு பெண் கதறி அழுததைக் கண்டார். தனது 40 வயது கணவரை மருத்துவமனையில் அனுமதித்து ஆக்ஸிஜன் வழங்குமாறு அதிகாரிகளிடம் அவர் கேட்டுக்கொண்டார். அந்தப் பெண்ணின் குழந்தைகளும் அழுது கொண்டிருந்தார்கள். அதைக் கண்ட நாராயண் மருத்துவ ஊழியர்களிடம் தனக்கு 85 வயதாகிவிட்டதாகவும் தனது வாழ்க்கையை வாழ்ந்துவிட்டதாகவும், படுக்கைகள் கிடைக்கவில்லை என்றால், அவருக்காக ஒதுக்கப்பட்ட படுக்கையை அவருக்கு தரவேண்டும் எனக் கூறினார்” என கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து The Indian Express தொடர்புடைய மருத்துவமனையில் விசாரித்து செய்தி வெளியிட்டுள்ளது. நாக்பூர் மாநகராட்சியால் நடத்தப்படும் மருத்துவமனையின் மருத்துவர் பொறுப்பாளர் ஷீலு சிமுர்கர் “ஏப்ரல் 22 ஆம் தேதி மாலை 5.55 மணிக்கு தபட்கர் அனுமதிக்கப்பட்டார், நாங்கள் அவரை விபத்து வார்டில் ஆக்ஸிஜனேற்ற படுக்கையில் வைத்தோம். அவரது உடல்நிலை மோசமடைந்துவிட்டால் அவரை உயர் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டியிருக்கும் என்று அவருடன் வந்த உறவினர்களிடம் நாங்கள் கூறினோம். அவர்கள் சம்மதித்து வெளியேறினர். இரவு 7.55 மணிக்கு அவர்கள் திரும்பி வந்து அவரை அழைத்துச் செல்ல முயன்றனர். காரணம் எங்களுக்குத் தெரியாது, ஆனால் அவரை உயர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தினோம். அவரது மருமகன் அமோல் பச்போர் ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்திட்ட பிறகு, மருத்துவ ஆலோசனையை மீறி அவர்களை அனுப்பி வைத்தோம்” எனக் கூறியுள்ளார்.
ஆனால் இணையத்தில் வெளியான செய்திகள் போல எதுவும் நடந்ததாக தெரியவில்லை. அப்படி நடந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் யாருக்கும் தெரியவும் இல்லை என்கிறார் அவர். இந்த மருத்துவமனையில் 110 கொரோனா படுக்கைகள் உள்ளன. அதில் 18 படுக்கைகள் ஐசியூ படுக்கைகள். மருத்துவமனையில் அன்றைய தினம் 5 படுக்கைகள் தயாராகவே இருந்தன எனவும் மருத்துவமனை பொறுப்பாளர் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய உயிரிழந்த முதியவரின் மருமகன் அமோல், “எனக்கு கொரோனா பாசிட்டிவ். நான் பேசும் நிலையில் இல்லை. அன்று நடந்ததுதான் உண்மை. அவர் உதவும் மனப்பான்மை கொண்டவர்தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர் இறந்தேவிட்டார். இதைப்பற்றி இப்போது பேச விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார். மேற்கொண்டு பேசவோ விளக்கம் தரவோ அவர் விரும்பவில்லை என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
உண்மைத் தன்மையை அறியாமல் அனைத்து ஊடகங்களும் ஆர். எஸ். எஸ் வெளியிட்ட அறிக்கையை அப்படியே பரப்பி வருகின்றன. கொரோனா பெருந்தொற்றை கையாள முடியாத அரசாங்கத்தின் தோல்வியை திசைதிருப்பும் வகையில், இதுபோன்ற நிகழாத ‘நெகிழ்ச்சி’ கதைகள் ஆளும் அரசின் தரப்பிலிருந்து கசியவிடப்படுவதாக விமர்சனம் வைக்கப்படுகிறது.