எழுத்தாளர் நக்கீரன்

சில வாரங்களுக்கு முன்பு ஆனந்த விகடனுக்கு நான் அளித்த பேட்டியில், ஆட்சி அமைக்க போகும் கட்சி நிதிநிலைமை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றை காரணம் காட்டி கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒத்துப்போகும் என்ற கருத்தை தெரிவித்திருந்தேன். இப்போது அதற்கு முன்னரே ‘ஆக்சிஜன்’ சிக்கலில் பெரும்பாலான கட்சிகள் உடன்பட்டுவிட்டன.
கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சிக்கல் ஆக்சிஜன் உற்பத்தியில் இல்லை, விநியோகம் மற்றும் போக்குவரத்தில்தான் உள்ளது என்று தெரிகிறது. இந்நிலையில் வேதாந்தா மட்டுமே. ஆக்சிஜனுக்கு ஒரே தீர்வு என்பது போன்ற தோற்ற மயக்கம் உருவாக்கப்படுவதின் பின்னணியை யோசிக்க வேண்டாமா?
இது எண்ணெய் நிறுவனங்களின் அரசியலை நினைவூட்டுகிறது. புவிவெப்பமாதல் குறித்த சிக்கல் மேலெழுந்தபோது எண்ணெய் நிறுவனங்கள் உடனே மாறுவேடமிட்டன. 2000-ல் பிரிட்டிஷ் பெட்ரோலியம் தனது நிறுவனத்தின் வாசகத்தை, ‘beyond petrolium’ என்று மாற்றியதோடு, தனது லோகோவையும் கதிரொளி வடிவில் மாற்றியது. அதாவது அது இனிமேல் எண்ணெய் நிறுவனம் இல்லையாம். அதுபோல செவ்ரான் நிறுவனமும் மாற்று எரிஆற்றல் அவசியமே என்று விளம்பரப் பரப்புரையே மேற்கொண்டது. பத்தாண்டுகள் கழித்து பார்த்தால் எண்ணெய் துரப்பணத்துக்கு மேலும் அதி பயங்கரமான (அதிநவீனமாம்) கருவிகளைப் பயன்படுத்தி இன்றுவரை லாபம் குவிக்கின்றன. இதைத்தான் தற்போது ‘ஆக்சிஜன் மட்டும்’ என்ற வாசகம் நினைவூட்டுகிறது. மேலும்
உற்பத்தியாகும் ஆக்சிஜன் அனைத்தும் நடுவண் அரசுக்குத்தான் என்கிறார்கள். ஏற்கனவே, பாஜக+வேதாந்தா, பசுமைத் தீர்ப்பாயம்+கிரிஜா வைத்தியநாதன் போன்ற இணைப்புகள் மக்களின் எண்ணத்தில் அய்யத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் கயிற்றை ஆட்டுவிக்கும் கரங்களை அடையாளம் காண்பது சிரமமல்ல.
பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக ஆகிய மாநிலக் கட்சிகளும் கார்ப்பரேட்டுகளுடன் உடன்படுவதில் வியப்பேதுமில்லை. ஆனால், கேபிடலிச எதிர்ப்பைப் பேசும் இடதுசாரிகள், கார்ப்பரேட்களின் ‘டிஸ்சாஸ்டர் கேபிடலிசம்’ உத்திக் குறித்து யோசிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.
தூத்துக்குடி – ஸ்டெர்லைட் என்றாலே குறிப்பார்க்கும் துப்பாக்கியுடன் மஞ்சள் நிற சட்டையணிந்த ஒரு காவலரின் உருவமே தமிழக. மக்கள் அனைவரின் நினைவிலும் பதிந்திருக்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகளின் இந்த முடிவு ஒரு துயரமே. மக்களின் உணர்வுகளை முதலில் மதிக்க வேண்டும். அனில் அகர்வாலின் உணர்வுகளை அல்ல. ஏற்கனவே 40,000 டன் உற்பத்திக்கு அனுமதிப் பெற்று 1,70,000 டன் வரை உற்பத்தி செய்த ஆலை வெறும் ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்யபோகிறது என்பதை நாம் நம்பவேண்டுமா? துப்பாக்கிச் சூட்டையே
தொலைக்காட்சிப் பார்த்து தெரிந்துகொண்ட முதல்வரைக் கொண்ட மாநிலம் இது. திரு. ஸ்டாலின் தாமிர ஆலையை திறக்கமாட்டோம் என்று வாக்குறுதி அளித்துள்ளதாகச் சொல்கிறார்கள். வாக்குறுதிதானே? முன்பு 30.10.94-ல் செல்வி. ஜெயலலிதா அம்மையாரால் ஸ்டெர்லைட் ஆலை அடிக்கல் நாட்டப்பட்டு பின்பு 1996-ல் திரு.மு. கருணாநிதி ஆட்சியில் உற்பத்திக்கு அனுமதித்தபோது அவர் அளித்த வாக்குறுதி நினைவுக்கு வருகிறது. ” ஒரு சொட்டு நீரும் ஒரு பொட்டு மண்ணும் கெடாமல் தொழிலகங்களை திறப்போம்”
இன்று பொது மக்களிடமும், ஏன் அரசியல் கட்சிகளின் தொண்டர்களிடமும்கூட கட்சி உணர்வைத் தாண்டிய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வந்துவிட்டது. அனைத்து தரப்பிலும் இருந்து எழும் எதிர்ப்புக் குரல்கள் இதை மெய்ப்பிக்கின்றன. இதுவே அரசியல் கட்சிகள் உணர வேண்டிய பாடம். இனி எந்தவொரு கட்சியாக இருந்தாலும் சூழலியல் பாதுகாப்பில் முன்புபோல அலட்சியம்’ காட்டமுடியாது.
ஆம், நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்.