ப. ஜெயசீலன்
“பேருந்தில் உட்கார்ந்து கொண்டுவரும் திமிர் பிடித்த குடும்பம்தான் சாதி ஹிந்துக்கள். அவர்களிடம் தலைகீழாய் கயிற்றில் தொங்கியபடி நீதி கதைகள் சொன்னவர்தான் மாரி செல்வராஜ். இப்பொழுது நீதி கதையை கேட்ட அந்த குடும்பம் அடுத்த நாளிலோ அல்லது அடுத்த நூற்றாண்டிலோ அந்த பஸ்சை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாக மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அந்த பேருந்தில் அனுபவித்து வரும் சொகுசு அவர்களுக்கு முந்தைய தலைமுறை இவர்களுக்கு விட்டு சென்றது. இவர்களும் இவர்களது அடுத்த தலைமுறைக்கு இதை அளித்து செல்லவே முயல்வார்கள். முடிந்தால் பேருந்தின் மேல்தளத்திலும் யாரும் ஏறாமல் செய்ய என்ன செய்யலாம் என்று வேண்டுமானால் யோசிப்பார்கள்.
பிறகு, அவர்களை எப்படி சீட்டிலிருந்து கிளப்புவது? மேலிருப்பவர்கள் எப்படி பேருந்துக்குள் வருவது? இதை செய்ய அந்த குடும்பத்தினரிடம் கண்ணை கசக்கி கொண்டு நீதிக்கதைகள் சொல்லாமல் அந்த குடும்பம் அனுபவித்துவரும் அதிகாரத்தை கைவிட ஒரு வலுவான காரணத்தை முன்வைக்கவேண்டும். எங்களை உள்ளே விடவில்லையென்றால் பஸ்ஸை கொளுத்திவிடுவோம். எல்லோரும் நடந்து செல்லலாம் என்று மிரட்டலாம். அல்லது நீங்கள் உங்கள் சீட்டில் எப்பொழுதும் போல உட்கார்ந்துகொண்டுவருங்கள். எங்களுக்கு நாங்களே சீட்டு செய்து அதில் உட்கார்ந்து வருகிறோம் என்று சமாதானம் பேசலாம். அல்லது அந்த பேருந்தைவிட ஒரு பெரிய பேருந்தை வாங்கி நாங்கள் அதில் பயணித்து கொள்கிறோம் என்று சவால் விடலாம். அல்லது உங்கள் குடும்பத்தை கொன்று எங்கள் வஞ்சம் தீர்ப்போம் என்று இறுதி எச்சரிக்கை செய்யலாம்.”
“பரியேறும் பெருமாளின் கருப்பி, சாதி ஹிந்துக்களின் செல்லக்குட்டியானது எப்படி?” என்ற விமர்சன கட்டுரையில் நான் எழுதிய வரிகள்.

“DJANGO” திரைப்படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் டிகாப்ரியோ கதாபாத்திரம் தனது தந்தையிடம் அடிமையாக இருந்த ஒரு கருப்பின அடிமை ஒருவர் தனது தந்தைக்கு ஒவ்வொரு நாள் காலையிலும் தனது தந்தை இறக்கும் வரை முகச்சவரம் செய்ததை கிட்டத்தட்ட தான் இருபது ஆண்டுக்கு மேலாக பார்த்து வந்ததையும், அப்பொழுதெல்லாம் அந்த கருப்பின அடிமை தனது தந்தையின் குரல்வளையை அறுத்தெறிவதற்க்கான எல்லா வாய்ப்பும் இருந்தும் ஏன் அந்த கருப்பின அடிமை அதை செய்யவில்லை என்று யோசித்தத்தையும், தான் அந்த கருப்பின அடிமையின் இடத்தில் இருந்திருந்தால் முதல் நாளே தன்னை அடிமைப்படுத்தியவனின் குரல்வளையை அறுத்தெறிந்திருப்பேன் என்றும் சொல்லும்.
தமிழக சூழலில் தலித்துகளின் மீது நடந்த எல்லா தாக்குதல்களிலும் சில பொதுவான அம்சங்களை காண முடியும். தாக்கப்பட்ட தலித்துகள் தாக்குதல் நடந்த பகுதியில் எண்ணிக்கையில் சிறுபான்மையாகவும், தாக்குதல் நடத்திய சாதி இந்துக்கள் பெரும்பான்மையாகவும் இருப்பார்கள். தாக்குதலுக்கு முன்பும், தாக்குதலின் போதும், தாக்குதலின் பின்பும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை செயல்பாடுகள் சாதி இந்துக்களின் கூட்டு உளவியலை பிரதிபலிக்கும், ஆதரிக்கும் முறையில் செயல்பட்டு இருக்கும், செயல்படும். 20 பேர் சேர்ந்து 4 பேரை வெட்டும் போது அந்த 20 பேரின் மனோநிலை என்பது என்னவாக இருக்கும்? நாம் அவர்களை விட 5 மடங்கு பெரிய எண்ணிக்கையில் இருக்கிறோம். அந்த 4 பேரால் நிச்சயமாக நம்மில் ஒருவரை கூட காயப்படுத்தவோ, கொல்லவோ முடியாது. அந்த 4 பேரை நாம் கொன்ற பிறகு நமது சாதியினர் மத்தியில் நாயகத்தன்மை கிடைக்கும். நமது சாதியின் சமூக பொருளாதார அரசியல் வலிமை நம்மை நீதித்துறையின் கரங்களில் இருந்து காப்பாற்றும். இதுபோன்ற நம்பிக்கைகளும், இதை வலிமை படுத்தும் கடந்தகால உதாரணங்களுமே சாதி ஹிந்துக்களுக்கு தலித்துகளின் மீது காட்டுமிராண்டித்தனத்தை கட்டவிழ்த்து விடும் உத்வேகத்தை, துணிவைத் தருகிறது.
4 தலித்துகளின் மீது தாக்குதல் நடத்த வரும் 20 சாதி ஹிந்துக்களில் நிச்சயமாக அந்த தாக்குதலின் போதோ, பின்போ குறைந்தது 3 சாதி ஹிந்துக்களாவது கொல்லப்படுவார்கள் என்று ஒரு சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அந்த 20 சாதி ஹிந்துக்கள் மத்தியில் கொல்லப்படப்போகும் அந்த 3 பேர் தங்களில் யார் என்ற கேள்வி உருவாகும். அந்த 3 பேர் நானாக இருந்துவிட கூடாது என்று அவர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் பயத்தை உருவாக்கும். பயம் வந்த பிறகு அந்த 4 தலித்துகளின் மீது தாக்குதல் நடத்துவது அவசியமானதா என்ற கேள்வியை, குழப்பத்தை உருவாக்கும். இந்த கேள்வியும் குழப்புமும்தான் தலித்துகளுக்கான கவசமாக, கவசகுன்டலமாக மாறும்.
வன்முறையின் மூலம் நிச்சயம் நிரந்தர தீர்வை எட்டிவிட முடியாது. மக்களை அரசியல் படுத்துவதின் மூலம்தான், ஜனநாயக சக்திகளுடன் கை கோர்ப்பதன் மூலம்தான் தலித்துகள் தங்களுடைய ஜனநாயக உரிமையை, அதிகாரத்தை வென்றுடுக்க முடியும் என்று அண்ணன் திருமாவளவன் பேசுவது தத்துவார்த்தரீதியாக, தர்க்கரீதியாக, சித்தாந்தரீதியாக சரியான யோசனை. ஆனால் அண்ணனின் யோசனை என்பது ஒரு நெடும்பயணத்தை கோருவது. இலக்கு என்பது ஒருபோதும் அடைய முடியாத ஒரு இலக்காக அமைந்துவிடும் என்கிற அளவுக்கு அச்சத்தை ஊட்டும் நெடும்பயணத்தை கோருவது. தேர்தல் அரசியலில் ஈடுபடும், அரசியல் மைய்ய நீரோட்டத்தில் ஒரு சக்தியாக உருப்பெறும் ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவராக அண்ணன் திருமாவளவனின் எண்ணம், விருப்பம், அரசியல் வடிவம் போற்றுதலுக்குரியது, உன்னதமானது. ஆனால் அந்த பயணத்தை தொடரவும் , இறுதி இலக்கை அடையவும் தலித்துகள் இடைப்பட்ட காலத்தை பாதுகாப்போடும், கண்ணியத்தோடும் கடக்கும் வாய்ப்பை பெற்றிருக்க வேண்டும். பாக்ஸிங் ரிங்கிற்கு வெளியில் நிற்பவன் சித்தாந்தம் பேசலாம். ஆனால் உள்ளே இருப்பவன் தனக்கு எதிராக எறியப்படும் குத்துகளிலிருந்து தன்னை தற்காத்து கொள்ளும் தேவையிலிருக்கிறான். நாம் அந்த பாக்ஸிங் ரிங்கிற்கு உள்ளே சென்று அவனுக்கு உதவவில்லை என்றாலும் வெளியே நின்று கொண்டு அவனிடம் நாம் செல்ல விரும்பும் இறுதி இலக்கை குறித்து பேசிக் கொண்டிருப்பது பாக்ஸிங் ரிங்கில் உள்ளே சண்டை போட்டு கொண்டிருப்பவனுக்கு உதவாது. அண்ணனின் களத்தில் அண்ணனின் இருப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியம் இறுதி இலக்கை அடையும்வரை தலித்துகளின் militancyயையும் assertivenesசையும் முனை மழுங்காமல் பாதுகாப்பது. django திரைப்படத்தில் டிகாப்ரியோ கதாபாத்திரம் எழுப்பிய “ஏன் அந்த கருப்பின அடிமைக்கு தன்னை அடிமைப்படுத்தியவனின் குரல்வளையை அறுத்து போடும் வாய்ப்பு 20 வருடமாக ஒவ்வொரு நாளும் இருந்தும் அவன் அதை செய்யாமல், தன்னை அடிமைப்படுத்தியதோடு மட்டும் இல்லாமல் இவனால் ஒருபோதும் தன்னை எதிர்ப்பதற்கான துணிவை பெற்றுவிட முடியாது என்கின்ற நம்பிக்கையோடு தன்னை சவரம் செய்யும் வேலையையும் அந்த அடிமையிடமே தந்த தனது தந்தைக்கு தினமும் முகசவரம் மட்டுமே செய்ய தோன்றியது” என்ற கேள்வியை நாம் தமிழக சூழலில் பொருத்திப் பார்க்க வேண்டும்.

பன்னெடுங்காலமாக ஒடுக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் உள்ளாகும் தலித்துகள் எதிர் தாக்குதலுக்கான முனைப்பே இல்லாமல் போனதற்கான காரணம் என்ன? dalit militancy அல்லது dalit assertiveness என்பது மிக மிக சொச்சமாக அல்லது இல்லாமல் போனதற்கான சமூக, உளவியல் காரணம் என்ன? தன்னை அடிமைப்படுத்தியவனின் கழுத்தின் மீது சவரம் செய்யும் வாய்ப்பை பெற்ற கருப்பின அடிமையை போல தன்னை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும் சாதி ஹிந்துக்களின் அன்றாட வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் தலித்துகளின் இருப்பு சாதி ஹிந்துக்களின் மீது பேரிடியை இறக்கும் எல்லா வாய்ப்பையும் தலித்துகளுக்கு அளித்திருந்தும் ஏன் அதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை அல்லது நடப்பதே இல்லை? Annihilation of caste புத்தகத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் Ireland நாட்டில் ulster பிராந்தியத்திற்கும் southern irelandகும் இருந்த பெரும்பான்மை சிறுபான்மை பிரச்சினை பற்றி சொல்லி இந்தியாவில் இருந்த சிறுபான்மையினர் சுதந்திர போராட்டத்தில் இந்திய சுதந்திரத்திற்கு எதிரான ஒரு நிலையை எடுத்திருந்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்ற கேள்வியை எழுப்புவார். சாதி ஹிந்துக்கள் சுதந்திர போராட்டம் தொட்டு, ஜல்லிக்கட்டு போராட்டம் வரை தலித்துகளின் தார்மீக ஆதரவு கோரி நின்றபோது போடா சுன்னி என்று சொல்லும் அரசியல் துணிவு/அறிவு தலித்துகளுக்கு ஏன் வாய்க்க பெறவில்லை? தன்னை மாய்த்து கொள்ள முடிவெடுத்துவிட்ட ஆயுதப்பயிற்சியும், ஆயுதமும் பெற்றிருந்த சகோதரி விஷ்ணுபிரியாவிருக்கு தன்னை அழுத்தத்திற்கு உள்ளாக்கிய சைக்கோ மண்டையனை ஏன் சுட தோன்றவில்லை? தங்களுக்கு இரட்டை குவளை வைத்திருக்கும் தேநீர் கடையை கொளுத்துவதற்கு வெறும் 50 பைசா தீப்பெட்டி போதுமானது என்று தெரிந்திருந்தும் ஏன் அங்கு சென்று தனது காசையும் கொடுத்து தொட்டாங்குச்சியில் தேநீர் குடிக்கிறார்கள்? தாங்கள் புழங்க முடியாத குளத்தையும், கிணற்றையும் யாரும் புழங்க முடியாமல் செய்ய ஒரு கூடை அழுகிய எலிகள் போதும் என்னும் பொழுது அதை செய்யாமல் ஏன் தயங்கி நிற்கிறார்கள்? வெமுலாக்கள் சாக முடிவெடுக்கும் பொழுதும் கூட தங்களது பல்கலைக்கழகத்தின் அரக்கனாக இருந்து தலித் மாணவர்களின் உயிரை கோரும் துணைவேந்தரின் மீது கீறல்கூட இடாமல் தன் உயிரை மட்டும் மாய்த்துக்கொள்ளும் இந்த உளவியல் எப்படி நிகழ்ந்தது?

சுருக்கமாக தனது உயிரையே மாய்த்துக்கொள்ளும் முடிவை எடுக்கும் தலித்துக்கு கூட தன்னை இந்த நிலைக்கு தள்ளியவனை எதிர்க்கும், அழிக்கும் முனைப்பு ஏன் ஏற்படுவதில்லை? இதற்கு அண்ணன் திருமாவளவன் சமூக உளவியல் சார்ந்து ஒரு பதிலை தனது பேச்சுக்களில் அளித்துள்ளார். உழைக்கும் மக்களாயிருக்கும் தலித்துகள் தங்களை விட எண்ணிக்கையில் 4,5 மடங்கு அதிகமாக இருக்கும் சாதி ஹிந்துக்களை எதிர்க்கும் துணிவையும், வலிமையையும் பெற்றவர்களாய் தான் இருக்கிறார்கள். பன்னெடுங்காலமாக சமூக பொருளாதார சூழலில் வரலாற்று ரீதியாக சாதி ஹிந்துக்களுக்கு, சனாதனத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தை தங்களது அன்றாட வாழ்வில் பயின்றவர்கள் என்ற முறையில் அவர்களுக்கு கோட்பாட்டு வலிமையையும், பின்புலமும் இருக்கிறது. இருந்தும் தலித்துகளால் சாதி ஹிந்துக்களுக்கு எதிரான ஒரு வலுவான தாக்குதலை முன்னெடுக்க முடியாமல் போனதற்கான காரணம் அவர்கள் பலநூறு ஆண்டுகளாய் அரசியல் அதிகாரம் அற்றவர்களாய் அரசியல் அதிகாரத்தில் பங்கெடுக்க முடியாமல் போனதுதான் என்று அண்ணன் சொல்கிறார். இதன் விளைவாக அரசும் அரசின் machineryயும் தலித்துகளுக்கு எதிரானதாக இருக்கிறது. சாதி ஹிந்துக்களும் அரச அமைப்புகளும் கைகோர்த்து செயல்படும்பொழுது தலித்துகளின் எதிர்தாக்குதலுக்கான வாய்ப்பு முற்று முழுவதுமாக இல்லாமல் போய் விட்டது என்பது அண்ணனின் கருத்து. இது மிக சரியான புரிதல். இதனுடன் இன்னொரு கலை இலக்கியம் சார்ந்த பார்வையும் உண்டு.
உலகத்தின் எல்லா நாடுகளிலும், பிராந்தியங்களிலும் ஆளும் வர்க்கம் என்று ஒன்று இருக்கும். ruling class என்பதை பற்றி விளக்கி தோழர் புனித பாண்டியன் பேசிய ஒரு உரையை நீங்கள் youtubeல் தேடி கேட்க பரிந்துரைக்கிறேன். இந்த ஆளும் வர்க்கம் குறித்து நாம் பல்வேறு பார்வைகளை முன்வைக்கலாம். அதில் நான் கலை இலக்கியம் சார்ந்து ஒரு பார்வையை எனது நண்பர்கள் மத்தியில் முன் வைப்பது வழக்கம். அது என்னவென்றால் ஒரு சமூகத்தில் எவருடைய கதையாடல் இதிகாசமாகவோ, புராணமாகவோ, சித்தாந்தமாகவோ, தத்துவமாகவோ வலுப்பெறுகிறதோ அந்த கதையாடலின் சொந்தக்காரர்கள் ruling class ஆக மாறுகிறார்கள். அதாவது உலகத்தில் உள்ள எல்லா நாட்டின் அதிகாரவர்க்கமும் தங்களது அதிகாரத்தை கதையாடல்களின் (narrative/version/perspective) மூலம்தான் கேள்விகளுக்கு அப்பாற்பட்டு நிலை நிறுத்துகிறார்கள் அல்லது பெரும்பான்மை மக்களை தங்களது அதிகாரத்தை கேள்விகளின்றி ஏற்றுக்கொள்ள செய்கிறார்கள். உலகத்தில் நிகழ்ந்த எல்லா யுத்தங்களும் ஒரு கதையாடலின் பொருட்டே நிகழ்ந்திருக்கிறது. ஒரு நாட்டின் மீது ஒரு நாடு போர் தொடுத்ததிற்கான வரலாற்று பின்னணியை நீங்கள் ஆராய்ந்தால் அதன் பின்னால் வரலாறு, இதிகாசம், புராணம், மத நம்பிக்கை, சித்தாந்த நம்பிக்கை சார்ந்த ஒரு கதையாடலே பின்னணியாக இருக்கும். ஒருவன் ஒருவனை அடிமையாய் வைப்பதற்கான காரணத்தை, நியாயத்தை ஒரு கதையாடல் மூலமாகவே வரலாறு நெடுகிலும் பெற்றிருக்கிறான். so கதைகள் என்பது வெறுமனே கதை அல்ல. கதைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நீங்கள் ஒரு சமூகத்தையே கட்டுப்படுத்த முடியும். பரத மன்னனின் கதையாடலின் மூலம் தான் பாரத் மாத கீ கோசம் வடிவம் கொள்கிறது. பாரத் மாத கீ மூலம்தான் பாகிஸ்தான் நமது நிரந்தர எதிரியாக நிலைநிறுத்தப்படுகிறது. பாகிஸ்தான் நிரந்தர எதிரி என்றாவதால் பாகிஸ்தான் நாட்டின் மதத்தை பாரத நாட்டில் பின்பற்றுபவர்களையும் எதிரியாக கட்டமைக்க முடிகிறது. அவர்களை எதிரியாக கட்டமைப்பதின் மூலம்தான் பிஜேபி ஆட்சிக்கு வர முடிகிறது. இது எல்லாவற்றிற்குமான மூலம் பரத மன்னனின் கதையில் உள்ளது. இன்னும் விளக்க வேண்டும் என்றால் இயக்குனர் ரஞ்சித் இதை சார்ந்து ஒரு எளிய உதாரணத்தை தனது பல பேட்டிகளில் சொல்லி உள்ளார். பாம்பு பால் குடிக்காது என்கின்ற ஒரு எளிய அறிவியல் உண்மையை தாண்டி ஏன் எல்லா இடங்களிலும் பாம்பிற்கு பால் ஊற்றும் பழக்கம் வந்தது? என்கிற கேள்விக்கு கதையாடல்கள் மூலம் மக்களின் மனதில் பாம்பு பால் குடிக்கும் என்கிற ஒரு அப்பட்டமான பொய் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது என்று ரஞ்சித் சொல்கிறார்.

இந்திய சூழலில் கிட்டத்தட்ட எல்லா இதிகாச புராணங்களும், இலக்கியங்களும், காப்பியங்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பார்ப்பனிய சனாதனத்தை வெளிப்படுத்துபவையாகவும், நிலை படுத்துபவையாகவும் உள்ளது. அதன் நீட்சியாக கலை இலக்கிய பரப்பிலும் நவீன கலை வடிவமான சினிமாவிலும் பார்ப்பனிய சனாதன சித்தாந்தம் தொடர்ச்சியான,வலுவான கதையாடல்கள் மூலம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தலித்துகள் மிகப்பெரிய உளவியல் தாக்குதலுக்கும் உளவியல் அழுத்தத்திற்கும் உளவியல் சிக்கலுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். தலித்துகள் மீது நடந்த இந்த continuous psychological conditioning தலித்துகளிடமிருந்த அவர்களது militant குணத்தை முற்றாக அழித்து விட்டது. ஒருவனை வீழ்த்த நாம் நேரடியாக சண்டை போட்டு வீழ்த்த வேண்டியது இல்லை. அவன் வீழ்த்தப்பட வேண்டியவன் என்பதையும் அவன் வீழ்த்தப்பட்டவன் என்பதையும் குறித்தான 1000 கதைகளை அவனை கேட்க செய்தாலே போதும். அக்கினி சட்டியில் இருந்து தான் பிறந்ததாக சொல்லப்படும் கதையை நம்ப தொடங்குபவன் குடிசையை கொளுத்துவது தனது அடிப்படை உரிமை என்று நம்ப தொடங்குவதை போன்று தான் வீழ்த்தப்பட்டவன் என்பதையும் தான் வீழ்த்தப்பட வேண்டியவன் என்பதையும் அவனே நம்ப தொடங்குவான். இதன் பின்னணியில் தான் சனாதனத்திற்கு எதிராக கலகம் செய்த புத்த மரபை ஏற்று,பின்பற்றிய தலித்துகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட லட்சக்கணக்கான கதையாடல்கள் இந்திய சமூகத்தில் நிலை நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக தலித்துகள் எதிர் தாக்குதலுக்கான வழிமுறை குறித்தான சிந்தனை கூட அற்றவர்களாகவும், தனது உயிரையே மாய்த்து கொள்ளும் நிலையிலும் அந்த நிலைக்கு தன்னை தள்ளியவனை தண்டிக்கும் முனைப்பு இல்லாதவர்களாவும், எனது கழுத்தையே இவர்களிடம் கொடுத்தாலும் தலித்துகள் அந்த கழுத்தில் சவரம் மட்டுமே செய்வார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கும் சாதி ஹிந்துக்களின் நம்பிகைக்கு ஊறு விளைவிக்காமலும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் தலித்துகளின் militant குணத்தை மீட்டெடுக்கவும், தலித் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட continuous psychological conditioningலிருந்து அவர்கள் விடுபட தலித்துகளுக்கும், சாதி ஹிந்துக்கள் நினைத்து கொண்டு இருப்பது போன்று அவர்கள் வீழ்த்த முடியாத ஒரு இடத்தில் இல்லை என்பதை சாதி ஹிந்துக்களுக்கும் சொல்லும் கதையாடல்கள் அத்தியாவசியமாகிறது. தலித்துகளின் militant குணத்தை ஊக்குவிக்கும், எதிர் தாக்குதலுக்கான வாய்ப்புகளை ஆராயும் கதையாடல்கள் திரைப்படங்களில் தொடர்ந்து வலுவாக நேர்த்தியாக வெளிப்படும் பொழுது அது சாதிய சமூகத்தில் நிச்சயம் ஒரு சலனத்தை ஏற்படுத்தும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த பின்னணியில்தான் “கர்ணன்” கவனம் பெறுகிறது.
(தொடரும்)
ப. ஜெயசீலன், சினிமா-சமூகம் குறித்து த டைம்ஸ் தமிழில் எழுதிவருகிறார்.