இந்தியா, மோடியின் எரியும் பிணக்காடு | ரானா அய்யூப்

ரானா அய்யூப்
தமிழில்: கை. அறிவழகன்

டாக்டர். ஜலீல் பார்க்கர், இந்தியாவின் தலைசிறந்த நுரையீரல் நிபுணர்களில் ஒருவர், முகத்தில் கடுமையான சோர்வு தெரிகிறது, மும்பை மாநகரத்தின் லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளைக் கவனித்தபடி தொலைக்காட்சிகளிலும் தோன்றி கோரமான கோவிட் இரண்டாம் அலை எப்படி ஆயிரக்கணக்கில் இந்தியர்களை தினமும் விழுங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்.

கடந்த ஆண்டில் அவருக்கே கொரோனா தோற்று ஏற்பட்டு ஏறத்தாழ இறப்பின் விளிம்பு வரை சென்று வந்தார், இப்போது அமைதியிழந்தவராக நாம் அறிந்திராத பல உண்மைகளை போட்டு உடைக்கிறார். “நம்முடைய சுகாதாரத்துறை முற்றிலுமாக செயல் இழந்து விட்டது, நாம் நமது சொந்த தேசத்தின் மக்களைக் கைகழுவி விட்டோம், நம்முடைய மருத்துவ உள்கட்டுமான அமைப்பு மிக மோசமான நிலையில் இருக்கும் போது மருத்துவர்களால் என்ன செய்ய முடியும்? படுக்கைகளும், ஆக்சிஜன் சிலிண்டர்களும் இல்லாத போது மருத்துவர்கள் என்ன செய்ய முடியும்?”

நேற்று (23rd April), இந்தியாவில் ஒரே நாளில் 3,32,730 பேர் கொரானா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், உலகம் முழுவதும் இதுவரை பதிவான மிகப்பெரிய ஒருநாள் தொற்று இதுதான், நேற்று முன்தினத்தின் அளவை நாமே நேற்று முறியடித்திருக்கிறோம் என்பதுதான் கொடுமை.
பெருந்தொற்றுக் காலம் துவங்கிய நாளில் இருந்து இன்றுவரை, 1 கோடியே 60 லட்சம் பேர் நோய்த்தொற்றை அடைந்திருக்கிறார்கள், 1 லட்சத்து 86 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள், உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாதான் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளான நாடக இருக்கிறது, அன்றாட தொற்றின் அளவும், மரணங்களின் அளவும் அமெரிக்காவை மிஞ்சும் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொருநாளும் 2000 இந்தியர்கள் கொரானாவால் இறந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால், இது குறைத்து மதிப்பிடப்படுகிற ஒன்று என்றும், இந்தியாவின் ஒருநாள் மரணம் 10000 த்தை தாண்டிக் கொண்டிருப்பதாகப் பெயர் சொல்ல விரும்பாத சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.

எனது வாழ்க்கையில் நான்கு மிக நெருக்கமான மனிதர்களை நான் இழந்திருக்கிறேன், ஒரு தூரத்து உறவினர், பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் எனது நெருங்கிய நண்பர்கள் இருவர், அவர்கள் இருவருமே 30 முப்பது வயதுகளில் மத்தியில் இருப்பவர்கள்.

இறப்பு மிக சாதாரணமாக நிகழ்கிறது, வெள்ளிக்கிழமை டெல்லியின் கங்காராம் மருத்துவமனை ஒரு அவசர செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது, அதில் இன்னும் இரண்டு மணி நேரத்துக்கான ஆக்சிஜன் மட்டுமே எங்களிடம் இருக்கிறது, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏற்கனவே 25 பேர் இறந்து விட்டார்கள் என்று அச்சமூட்டும் அறிவிப்பாக அது இருக்கிறது, தங்கள் உறவினர்களுக்காக ஆக்சிஜன் சிலிண்டர்களைத் திருடும் காணொளிக் காட்சிகள் மேலும் அச்சமூட்டுவதாக இருக்கிறது.

BBC யின் செய்தித் தொகுப்பொன்றில் வரும் காட்சியில் பெண்ணொருவர் இறந்து கொண்டிருக்கும் தனது தம்பியை சுயநினைவுக்குக் கொண்டுவர முயற்சி செய்கிறார், “பாலாஜி, நீ ஏன் விழித்துக் கொள்ளக்கூடாது?” என்று தனது தம்பியைத் தட்டி எழுப்ப முயற்சி செய்தபடி அழுகிறார்.


மஹாராஷ்டிராவில் ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் ஆக்சிஜன் குழாய்களில் தடை ஏற்பட்டு ஏறத்தாழ 25 பேர் இறந்து விட்டார்கள், இவர்கள் அனைவரும் கொரானா தொற்றால் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர்கள். பல்வேறு மருத்துவமனைகள் தங்கள் மாநில உயர்நீதிமன்றங்களில் எங்களுக்கு ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்று முறையீடு செய்திருக்கின்றன, கடவுளின் கரங்கள் எங்கே என்றால் அவை இந்தியாவின் மருத்துவமனைகளில் தான் இப்போது இருக்கிறது.இத்தகைய ஒரு கொடிய சூழல் நிலவும் போது, இந்தியாவின் மற்றொரு பக்கம் கொரானா பெருந்தொற்று குறித்த எந்த அச்சமும் இல்லாமல், விழிப்புணர்வும் இல்லாமல் “மோடியின் தட்டு தட்டி, விளக்கேற்றி கோரானவை விரட்டும்” மூடத்தளைக்குள் சிக்குண்டு சீரழிகிறது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் கும்பமேளா என்கிற பெயரில் கங்கை ஆற்றில் மூழ்கித் திளைக்கிறார்கள்.
குறிப்பிட்ட சில நூறு இஸ்லாமிய மனிதர்கள் கடந்த ஆண்டில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு வந்தபோது மோடியின் தேசபக்த ஊடகங்களும், அவரைப் பின்பற்றும் மடையர்களும் அவர்களைக் குற்றவாளிகளாக்கி ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள்.

மார்ச் 11 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து குளியல் போட்டு வருகிற இந்த பக்தர்களில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொரானா தொற்று உறுதியாகி இருக்கிறது, மெல்ல மெல்ல இவர்கள் வீடுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள், இவர்கள் மூலமாகப் பரவ இருக்கும் இந்தப் பெருந்தொற்று மிகப்பெரிய சோகங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

மார்ச் மாதத்தில் ஏறத்தாழ கொரானாவின் இரண்டாம் அலை துவங்கி இருந்தபோது, உத்தரகாண்ட் மாநிலத்தை ஆளும் ஆளும் பாரதீய ஜனதாக கட்சியின் தலைவர்கள் செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்களைக் கொடுத்திருந்தார்கள், கும்பமேளா குளியல் இடம் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக அவர்கள் மக்களுக்கு அறிவித்தார்கள், இதைவிடக் கொடுமை மார்ச் 20 ஆம் நாள், உத்தரகாண்ட் மாநில முதல்வர் ஒருபடி மேலே சென்று “யாராலும் கோவிட் -19 ன் பெயரால் எங்களைத் தடுத்து விட முடியாது, நாங்கள் நம்புகிற கடவுள் கிருமிகளிடம் இருந்து எங்களைக் காப்பாற்றுவார்” என்று கொக்கரித்தார். ஏப்ரல் மாதத்தின் மத்தியப் பகுதி வரையில் இந்து ராஜ்யத்தின் தலைவரான நரேந்திர மோடி ஒரு துரும்பையும் அசைக்காமல் தேர்தல் நாடகங்களில் மும்முரமாய் இருந்தார்.

பிறகு திடீரென விழித்து பன்னாட்டு சமூகத்துக்கு அஞ்சி “மத விழாக்களில் கலந்து கொள்வதை நாம் ஒரு அடையாளமாக வைத்துக் கொள்ள வேண்டும், அப்போதுதான் நம்மால் பெருந்தொற்றை எதிர்க்க முடியும்” என்று திருவாய் மலர்ந்தார். இப்படி ஒரு பிரதமர் இருக்கும் நாட்டில் கும்பமேளாக்கள் அப்பாவி இந்தியர்களின் உயிரைக் குடிக்கும் ஒரு மரணக்குழியாக இருக்கும் என்பதில் என்ன பெரிய வியப்பு இருக்க முடியும்.

மார்ச் 2020 துவங்கி இந்தியாவின் கோவிட் – 19 குறித்து நான் தொடர்ந்து கவனித்தும், பேசியும் வருகிறேன், ஆனால், இந்த இரண்டாம் அலையின் தீவிரம் என்பது மிகப்பெரிய அச்சத்தை உருவாக்குகிறது, சுகாதாரத்துறைப் பணியாளர்கள் மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருக்கிறார்கள், மும்பை மாநகராட்சி மருத்துவமனைக்கு நான் கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்ற போது அங்கே மாடிப்படிகளில் அமர்ந்திருந்த ஒரு செவிலியரைப் பார்த்தேன்.

அவர் தனக்குக் குமட்டிக்கொண்டு வருவதாக என்னிடம் கூறினார், இங்கிருக்கும் கழிவறைகள் மிகுந்த அசுத்தமாக உள்ளது, ஒவ்வொரு 20 கோவிட் நோயாளிகளுக்கும் 1 கழிவறைதான் இங்கே இருக்கிறது, நானே பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இப்போதுதான் குணமடைந்து வருகிறேன். மூன்றுமுறை நான் அளித்த விடுப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது, இப்போது நான் ராஜினாமா செய்ய விரும்புகிறேன்.

ஆனால், என் குடும்பம் என்னை நம்பி இருக்கிறது, மருத்துவப் பணியாளர்களை நாங்கள் மலர் கொண்டு ஆராதிக்கிறோம் என்று விமானங்களை வைத்து மோடியின் அரசு வித்தை காட்டியது, ஆனால், மருத்துவப் பணியாளர்களின் உண்மையான நிலை இதுதான், நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறோம்.
இரண்டாம் அலையில் நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மிகுந்த துயரத்தை அடைந்து கொண்டிருக்கிறார்கள், scroll.in என்கிற ஒரு செய்தி நிறுவனம் அதிர்ச்சி தரக்கூடிய உண்மை ஒன்றை வெளியிட்டிருக்கிறது, அக்டோபர் 2020 வரை, உலகைக் காக்கும் வல்லமை பொருந்திய இந்துக்களைக் காக்கும் மாமன்னர் மோடி அரசு கண்களை மூடிக் கொண்டு ஏகாந்தத்தில் இருந்தது.


பெருந்தொற்று துவங்கி 8 மாதங்கள் வரை ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்த எந்த சுய உணர்வும் இல்லாமல் வாயால் வடை சுட்டுக் கொண்டே இருந்தார்கள் பாரதீய ஜனதாவின் மக்கள் விரோதத் தலைவர்கள். அக்டோபரில் தான், அதுவும் வெறும் 150 மாவட்ட மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வேண்டும் என்று 2.7 கோடி டெண்டர் கோரி இருந்தார்கள். ஹரியானா, மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் மற்றும் குஜராத்தில் தான் நிலைமை மிகமோசமாக இருக்கிறது. மருத்துவமனைகளில் யாகம் செய்வது, பசு மூத்திரம் குடிப்பது என்று குரங்காட்டிகளின் தலைவராக யோகி ஆதித்யநாத் போன்ற பாரதீய ஜனதாவின் தலைவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மாநிலங்களுக்கு இடையே ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான சண்டை துவங்கி இருக்கிறது, ஹரியானாவின் அமைச்சர் திரு.அனில் விஜ், டெல்லி அரசு ஆக்சிஜன் கொண்டு வருகிற வாகனங்களைக் கடத்துவதாகவும், ஆகவே ஆக்சிஜன் கொண்டுவரும் வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும் Economic Times செய்தித் தாளுக்குப் பேட்டி அளித்திருக்கிறார்.

உத்திரப் பிரதேசத்தில் இடுகாடுகளை பெரிய டின் ஷீட்டுகளைக் கொண்டு மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் சாமியார் யோகி ஆதித்யநாத். 12 ஆவது அவதாரமான பிரதமர் மோடியின் குஜராத்தில் ஓய்வின்றி இரவு பகலாக இடுகாடுகளில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கிறது. உண்மையான மரண எண்ணிக்கைகளை மறைக்கும் வேலைகளில் அமைச்சர்கள் தீவிரமாக இருக்கிறார்கள்.

குஜராத் உயர்நீதிமன்றம் உண்மையான கோவிட் -19 நோயாளிகள் மற்றும் இறப்பு எண்ணிக்கையைத் தருமாறு அரசைக் கேட்டிருக்கிறது, ஏனைய மாநிலங்களில் நடக்கும் போலியான எண்ணிக்கைக் கணக்குகளும் நெஞ்சைப் பதற வைப்பதாக இருக்கிறது, மத்தியப்பிரதேசத்தில் ஒருநாளில் எரியூட்டப்பட்ட பிணங்களின் எண்ணிக்கை 97 ஆக இருக்கிற போது அரசு அது வெறும் 3 என்று கணக்குக் காட்டுகிறது என்று “டைம்ஸ் நௌ” செய்தித்தாள் குறிப்பிடுகிறது.
மிகப்பெரிய அவலம் நடந்து கொண்டிருக்கும் போது ஒன்றுமே நிகழாததைப் போல அரசுகள் நாடகமாடுகின்றன, பிரதமர் ஏதுமறியாதவரைப் போல “நாம் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவோம், இது புதிய இந்தியா” என்று தேர்தல் மேடைகளில் புளுகிக் கொண்டு திரிகிறார்.

இந்த வாரத்தில் உலகிலேயே மிக அதிகமான கொரானா தோற்று இந்தியாவில் நிகழ்ந்திருக்கும் சூழலில், ஆளும் இந்துத்துவ அரசானது ட்விட்டரில் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறது, அதில் உள்துறை அமைச்சரும், பிரதமரும் கூடிக்குலாவியபடி தேர்தல் ஊர்வலங்களில் கலந்து கொள்கிறார்கள், உள்துறை அமைச்சர் முறைப்படி அவசர காலமாகக் கருதி தலைநகரில் இருந்தபடி பல்வேறு மாநிலங்களின் தேவைகளைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், அவரோ பல லட்சக்கணக்கான தொண்டர்களை ஓரிடத்தில் கூட்டி தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாகி இருக்கிறார், இறுதியாக மீண்டும் பன்னாட்டு அழுத்தங்களுக்கு அஞ்சி நடுங்கி பிரதமர் கடைசி தேர்தல் கூட்டங்களை மட்டும் ரத்து செய்வதாக அறிவித்தார், அடிப்படையான அறிவும் இல்லாத, மக்களைப் பற்றிய எந்த சிந்தனைகளும் இல்லாத ஒரு மூடரின் கீழாக இந்த இக்கட்டான சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறது இந்தியா.

ஆனால், மூட பக்தர்களோ இன்னும் திருந்திய பாடில்லை, “பாகிஸ்தான் தான் கிருமியைப் பரப்பியது, சீனாதான் கிருமியைப் பரப்பியது” என்று கிளப்பியபடி மோடியைப் புகழ்ந்து நாடு முழுவதும் ராஜஸ்தானியர்களும், குஜராத்திகளும் பாட்டுப் பாடுகிறார்கள். ஆனால், பாகிஸ்தானும், அதன் மக்களும் இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மருத்துவ நிபுணர்களும், உலகநாடுகளின் மருத்துவ அமைப்புகளும் பல்வேறு எச்சரிக்கைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது இந்தியாவின் பிரதமர் சிகை அலங்காரத்தை மாற்றிக் கொள்வதில் மும்முரமாய் இருந்தார், மக்களின் மீது எந்த அக்கறையும் இல்லாத சென் நிலைக்கு அவர் மாறி இருந்தார்.

அவரது சகாக்களும், பக்தர்களும் அவர் கோவிட் -19 க்கு எதிராக ஒரு சூப்பர் மேனைப் போல அவரை சித்தரித்தார்கள், இந்தியாவில் கொரானா சோதனைகள் கூட நிறுத்தப்பட்டு விட்டது, உழைக்கும் மக்களின் பணத்தைச் சுரண்டிக் கொழுக்கும் பணக்கார, அல்லது உயர் நடுத்தர வர்க்கத்தினர் கடந்த முறை தட்டுகளை அடித்தும் உடைத்தும் மோடியின் வைரசுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.

விளக்கேற்றி கொரானாவை ஓட்டினார்கள், “பாக் கொரானா பாக்” (ஓடு கொரோனா, ஓடு”) என்று புத்தி பேதலித்தவர்களைப் போல அவர்கள் வீதிகளில் அலைந்தார்கள். ஆனால், ஏழை கூலித் தொழிலாளிகளோ தங்கள் வேலைகளை இழந்து உணவுக்கும் வழியின்றி வாழ்ந்த நகரங்களில் இருந்து வெளியேறி நடந்தார்கள். அதுனால் அவரை தங்களிடம் வேலை பார்த்த அந்த கூலித்தொழிலாளிகள் மீது இந்துராஜ்யத்தின் நீதிமான்கள் யாருக்கும் கருணை பிறக்கவில்லை. 12 ஆவது அவதாரமான கடவுள் மோடிக்கும் கூட இந்த ஏழைத் தொழிலாளிகள் மீது சிறிதளவும் கருணை தோன்றவில்லை.
இவர்கள் தான் கடவுள் மோடியை இந்த தேசத்தின் பிரதமராகத் தேர்தெடுக்க வாக்களித்தவர்கள், இப்போதும் அவர்கள் மோடி தங்களைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறார்கள், அவரது உண்மையான கோர முகத்தை அறியாதவர்களாக…..

எல்லாவற்றையும் தாண்டி இந்த தேசத்தின் 130 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு நான் வேலைக்காரன் என்று சுய விளம்பரம் செய்துகொண்ட மோடி, இந்த அவசர காலத்தை ஒரு தேர்ந்த குற்றவாளியைப் போல கை கழுவி விட்டார், அவருக்கு அம்பானியையும், அதானியையும் உலகப்பணக்காரர்கள் வரிசையில் முன்னேற வைக்கக்கூடிய மிகமுக்கியமான பணி இருக்கிறது,

இந்தியாவின் விற்பனையை துரிதப்படுத்தும் நிர்மலா சீதாராமன் கையில் மிக நீண்ட பட்டியலோடு பிரதமரின் கண்ணசைவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். மருந்து நிறுவனங்களைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளும் இல்லை, “Make in India” என்று போலிக்குரல் எழுப்பியபடி அலைந்த இஸ்லாமியர்களைக் கொன்று குவித்த கோரமுகம் கொண்ட நரேந்திர மோடி, இந்திய அரசின் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களை ஏன் ஊக்குவிக்கவில்லை?

இந்திய மருத்துவக் கவுன்சிலின் தற்காப்பு நடவடிக்கைகளை ஏன் துரிதப்படுத்தவில்லை என்கிற இந்தக் கேள்விக்கும் பிரதமரும் பதில் சொல்ல மாட்டார், பக்தர்களும் பதில் சொல்ல மாட்டார்கள். மேற்கு வங்கத்தில் பிரதமர் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்திலேயே மாநில பாரதீய ஜனதாக கட்சித் தலைவர் “கோவிட் வந்தால் நாம் பசு மூத்திரத்தை குடிக்க வேண்டும்” என்று வெட்கமே இல்லாமல் பேசினார், கேட்டுக்கொண்டு மண்டையை மண்டையை ஆட்டினார் பிரதமர். இப்படி ஒரு முட்டாள் பிரதமரை இந்தியா இதுவரை சந்திக்கவே இல்லை.

உலகம் முழுவதும் பல நாடுகளின் தலைவர்கள் கொரோனா காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்திப்பதிலும், இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்வதிலும், ஊடகங்களை சந்தித்து என்ன மாதிரியான மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று வெளிப்படையாகப் பேசும்போது, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மோசடியான பிரதமர் இதுவரை ஒருமுறை கூட ஊடகங்களை சந்திக்கவில்லை.

உலகெங்கும் நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு நேரடியாக பணத்தை நிவாரணமாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது குரூர மனமும், மூடத்தனமும் கொண்ட ஒரு பிரதமர் இதுவரை இந்த தேசத்தின் ஏழை உழைக்கும் மக்களுக்கும் கூட நேரடியான எந்த உதவிகளையும் செய்யவில்லை என்பதுதான் முகத்தில் அறைகிற உண்மை.

நன்றி: டைம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.