தொ.பரமசிவனை பெரியாரிஸ்ட்கள் எப்படி அணுக வேண்டும்? சுகுணா திவாகர்

தோழர்.வே.மதிமாறன் நான் மிகவும் மதிக்கும் சிந்தனையாளர்; எழுத்தாளர்; பேச்சாளர். பல்லாண்டுகால நண்பர். வாய்ப்பு கிடைக்கும் மேடைகளில் எல்லாம் அம்பேத்கர். பெரியார் சிந்தனைகளை முன்வைப்பவர். எண்ணற்ற இளைஞர்களைத் தன் பேச்சால் ஈர்ப்பவர். ஆனால் சிலசமயம் அவரது தடாலடியான கருத்துகள் ஆழமும் சாரமும் அற்ற அப்போதைய கவர்ச்சிகரம் வாய்ந்தவை, சமயங்களில் பெரியாரியலுக்கு எதிர்த்திசையில் நடைபோடுபவை. அதற்கான சமீபத்திய உதாரணம் தொ.பரமசிவன் குறித்த அவரது அண்மைய வீடியோ.


அவரது ‘பாரதிய ஜனதா பார்ட்டி’ நூலை அறிவுலகம் தேவையற்ற பதற்றத்துடன் எதிர்கொண்டது உண்மைதான். பாரதி விமர்சனத்துக்கே அப்பாற்பட்டவர் என்ற போக்குதான் அந்தப் பதற்றத்தில் தெரிந்தது. அவர் வீடியோவில் குறிப்பிடும் த.மு.எ.சவின் ஜனநாயக விரோதப் போக்கு ஏற்கத்தக்கதல்ல, கண்டிக்கத்தக்கது என்பதும் உண்மைதான். மதியின் அந்த வீடியோவில் தமுஎச கூட்டத்தில் தொ.ப பேசியது, தொ.ப மட்டுமல்ல பாலகுமாரனும் பெரியார்தாசனும்தான் கமல்ஹாசன் முன்பு சிகரெட் குடிப்பார்கள், தன்மீது விழுந்த ‘சங்கி’ முத்திரையை மறைப்பதற்காகத் தேர்தல் அரசியலுக்காகத்தான் கமல்ஹாசன் தொ.பவுக்கு இரங்கல் எழுதுகிறார், தொ.பவுக்கே சாதியுணர்வு இருந்ததாலும் தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் சாதியெதிர்ப்பை அவர் கொண்டு சேர்க்காததாலும்தான் அவருக்கு சாதிச்சங்கம் சார்பில் அஞ்சலி சுவரொட்டி ஒட்டினார்கள் என்று அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைக்கிறார்.
அடிப்படையில் தொ.ப ஓர் ஆய்வாளர். அவரது ஆய்வுகளில், எழுத்துகளில் என்ன பிரச்னைகள் என்ன என்பதையே சொல்லாமல் வெறும் சம்பவங்கள் மற்றும் அதிரடியான கருத்துகளை மட்டும் முன்வைப்பது என்னவகையான விமர்சன முறை? தொ.பவுக்கு அஞ்சலி செலுத்துவது தேர்தல் அரசியல் என்பதெல்லாம் ‘கறுப்பு நகைச்சுவை’ என்றுதான் சொல்லவேண்டும். தொ.ப பேரைச் சொன்னால் ஓட்டுகள் விழும் என்றால் அவரை அரச மரியாதையுடன் அடக்கம் செய்து எடப்பாடி பழனிசாமியே வாக்குகளை வாங்கியிருப்பாரே?


மதியை விட்டுவிடுவோம். பொதுவாகவே கணிசமான பெரியாரிஸ்ட்களிடம் இருக்கும் பிரச்னைகள் குறித்தும்தான் இந்தப் பதிவு.

உலகில் எந்தத் தத்துவமும் பல்வேறுவகையான விமர்சனங்கள், விவாதங்கள், உரையாடல்களுக்கு உட்படுத்தப்பட்டுத்தான் செழுமையடைந்திருக்கிறது. மார்க்சியம் என்பது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, மூலதனத்துடன் நின்றுபோய்விடவில்லை. லெனின், ஸ்டாலின், மாவோ, ட்ராட்ஸ்கி, கிராம்ஷி, அல்தூஸர், ரோஸா லக்சம்பர்க், பிராங்க்பர்ட் மார்க்சியர்கள் என மார்க்சியத்தின்மீது பல்வேறு இடையீடுகளை நிகழ்த்தியவர்கள் பலர். சோசலிசக் கட்டுமானம் குறித்த விவாதங்கள், அரசு குறித்த மார்க்சிய அணுகல்முறைகள் குறித்த உரையாடல்கள், பாட்டாளி வர்க்கச் சர்வதிகாரமா, பாட்டாளி வர்க்க ஜனநாயகமா என்னும் கேள்விகள், சர்வதேசியவாதம், தேசிய இனப்பிரச்னைகள், சுயநிர்ணய உரிமை என்று பல்வேறுவிதமான விமர்சனங்களூடாகத்தன் மார்க்சியம் ஒவ்வொரு காலகட்டத்திலும் செழுமை பெற்றிருக்கிறது.
ஆனால் பெரியாரியம் அப்படி விமர்சனங்களினூடாக வளர்த்தெடுக்கப்படவில்லை. மிகக்குறுகிய அளவிலேயே தமிழ்ச்சூழலில் விவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ‘பெரியார் தந்த புத்தி’, ‘ஈரோட்டுக் கண்ணாடி’, ‘பெரியாரைப் பரப்புவதைவிட பாதுகாப்பது முக்கியம்’ என்ற குரல்களின் வழியே இறுக்கமான கதவுகள் அறைந்து சாத்தப்பட்டிருக்கின்றன.

அமைப்புகளுக்கும் பெரியாரிஸ்ட்கள் என்று அறியப்பட்டவர்களுக்கும் வெளியே அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி, எஸ்.வி.ஆர், வ.கீதா, வீ.அரசு, ராஜன்குறை, தொ.ப போன்ற சிந்தனையாளர்கள்தான் நவீனச் சிந்த்னைகளுடன் பெரியாரியத்தையும் அதன் தேவைகளையும் பொருத்தி விளக்கியிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் மார்க்சியப் பின்புலம் உடையவர்கள். அப்படி வருபவர்களையும் ஏதேனும் முத்திரை குத்திக் கழித்துவிடுவதுதான் பெரியாரியப் பணியா என்ன?

காலத்தைத் தாண்டி நிற்கும் தத்துவமாக இருந்தாலும்கூட அதில் சமகாலத்தின் சுவடுகள் ஆழப்பதிந்திருப்பது தவிர்க்க முடியாதது. இதுதான் அந்தத் தத்துவங்களின் பலமும் பலவீனமும். இதை வேறு யாரையும்விட பெரியார் ஆழமாக உணர்ந்திருந்தார். ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண, இதிகாசங்களை விமர்சிக்கும்போது ‘அவையெல்லாம் அந்தந்த காலகட்டத்து பண்பாட்டைப் பிரதிபலிப்பவை. அதைத்தாண்டிக் காலம் எவ்வளவோ முன்னகர்ந்துவிட்டது’ என்பதைச் சுட்டிக்காட்டினார் பெரியார். காலத்துக்குக் காலம், நாட்டுக்கு நாடு, ஆளுக்கு ஆள் பண்பாடுகளும் பழக்கவழக்கங்களும் ஒழுக்க மதிப்பீடுகளும் மாறி வருகின்றன என்பதையும் அவர் எடுத்துரைத்திருக்கிறார். இஸ்லாத்தைப் பாராட்டும்போதும் மிலாதுநபி விழாக்களிலும் அவர் சொல்லும் முக்கியமான விஷயங்களில் ஒன்று, மற்ற மதங்களைவிட காலத்தால் மிக இளையது இஸ்லாம். அதனால்தான் மற்ற மதங்களைவிட அதில் முற்போக்கு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன என்பது.

ஒரு தத்துவம் உருவாகிவிட்டது என்பதற்காகவே காலம் ஒற்றைப்புள்ளியில் உறைந்துவிடவில்லை. காலம் எப்படியும் முன்னேறிச் செல்கிறது. மனிதர்களின் வாழ்க்கை, சிந்தனைகள், மதிப்பீடுகள் நவீனமடைகின்றன. இவற்றுக்கு ஏற்றாற்போல் மாற்றம்பெறாவிட்டால் எந்தத் தத்துவமாக இருந்தாலும் ஒன்று கேள்விகளற்ற மதமாகிவிடும் அல்லது காலத்தில் அழிந்துவிடும். இதைத் தெளிவாக உணர்ந்ததால்தான் பெரியார் ”இன்னும் அய்ம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ராமசாமி என்ற மூடக்கொள்கைக்காரன் இருந்தான் என்று உலகம் பேசும்” என்றார். சமகாலச் சுவடுகள் உடைய தத்துவங்கள் காலத்துக்கேற்றவகையில் விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் உட்படுத்தப்பட்டு செழுமைப்படுத்தப்பட வேண்டும். எல்லாத் தத்துவங்களுக்கும் பொருந்தும் வரலாற்று விதி பெரியாரியத்துக்குப் பொருந்தாதா என்ன? பெரியார்ர் இறந்து 50 ஆண்டுகள் ஆகப்போகின்றன. ஆனால் என்ன விவாதங்கள் நடைபெற்று பெரியாரியம் செழுமைப்படுத்தப்பட்டிருக்கிறது? இத்தனைக்கும் பெரியார் முன்வைத்த ‘பகுத்தறிவு’ என்னும் கருத்தாக்கமே சிந்திப்பதற்கான சுதந்திர வெளிதான். ‘நான் சொன்னேன் என்பதற்காக எதையும் ஏற்றுக்கொள்ளாதே, நம்பாதே’ என்பதுதான். ஆனால் அதை இயந்திரத்தனமான உச்சாடனமாக மாற்றிக்கொண்டு பெரியாரை முதுமக்கள் தாழியைப்போல் காப்பாற்றி வருகிறோம்.

தமிழ்ப்பண்பாடு என்பது வைதீகத்தின் கறைபடிந்த பண்பாடு என்று பெரியார் கருதினார். அதனாலேயே ‘நமது மொழி சாதி காப்பாற்றும் மொழி, நமது இலக்கியங்கள் சாதி காப்பாற்றும் இலக்கியங்கள்’ என்றார். சாதி நீக்கச் செயற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டார். பெரியாருடைய செயற்பாடுகள் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்தவை. ஆனால் பெரியார் கருதியதைப்போல் தமிழ்ப்பண்பாடு என்பது ஒற்றைப் பண்பாடு அல்ல. தமிழில் ஐம்பெருங்காப்பியங்களும் ஐஞ்சிறு காப்பியங்களும் பௌத்த, சமணக் காப்பியங்கள். அவைதீக மதங்களான பௌத்த, சமண, ஆசிவகக் கூறுகளின் எச்சம் தமிழ்ப்பண்பாட்டில் உண்டு. இத்துடன் பழங்குடி இனக்குழுப் பண்பாட்டுக்கூறுகளும் உண்டு. இவை அனைத்தும் பார்ப்பன மேலாண்மையையும் வைதீகத்தையும் எதிர்த்தவை. ஆனால் இதை விரிவாக விளக்குவதற்கான ஆராய்ச்சிகள் அந்தக் காலத்தில் இல்லை. அப்போது இலக்கிய ஆராய்ச்சி என்பது சொற்சுவை, பொருள்சுவை ஆராய்ச்சிகளும் எந்த நூல் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது என்ற ஆராய்ச்சிகளும் பழம்பெருமிதக் கற்பிதங்களுமே. அவர்களுடன் உரையாடிய பெரியார் எரிச்சலும் சலிப்புமுற்றார். தமிழறிஞர்கள் மாற்றத்துக்கே தயாராக இல்லாமலிருந்தபோது ”தமிழ் காட்டுமிராண்டிமொழி” என்றார். “எல்லாப் புலவனுக்கும் மரணதண்டனை கொடுக்கவேண்டும். திருவள்ளுவருக்கு வேண்டுமானால் ஆயுள்தண்டனை கொடுக்கலாம்” என்றார். இத்தனைக்கும் பௌத்தமும் தமிழும், சமணமும் தமிழும் நூல்களை எழுதிய மயிலை சீனி வேங்கடசாமி நாட்டாரும் சாத்தான்குளம் ராகவனும் சுயமரியாதை இயக்கத்தொடர்புடையவர்கள். ஆனால் இவர்கள் பெரியார் சிந்தனையில் என்ன இடையீடு செய்தார்கள் என்று அறியமுடியவில்லை.
பிறகு வந்த மார்க்சிய ஆய்வாளர்கள் ‘மதத்தையும் இலக்கியத்தையும் முழுவதுமாகத் தூக்கியெறிய முடியாது. மதம் என்பது இரக்கமற்ற உலகில் இரக்கமுள்ள ஆன்மா’ என்று பெரியாரை மறுத்தார்கள். ஒருவகையில் இது சரி என்றால் மதம் பற்றிய பொதுவான மார்க்சியக் கோட்பாட்டிலிருந்து இந்துமதம், வைதீகம், பார்ப்பனியம் வேறுபட்டிருந்ததைக் காணத்தவறினார்கள். குறிப்பாக இங்கே இந்துமதம் என்ற பெயரில் பல்வேறு பண்பாடுகள் நசுக்கிக்கட்டப்பட்டிருந்தன என்பதை அவர்கள் காணவில்லை. இந்த இரண்டுக்குமான இடைவெளியை இட்டு நிரப்பியவர்தான் தொ.பரமசிவன் என்ற ஆய்வாளர்.


அவர் பார்ப்பனப் பண்பாடு வேறு, வெகுமக்களின் தமிழ்ப்பண்பாடு வேறு என்பதை நிறுவினார். நாட்டார் தெய்வங்களில் அவர் எவற்றைக் கண்டார்? நாட்டார் தெய்வங்கள் வைதீகப் பெருந்தெய்வங்களைப் போல் இறுக்கமான ஆகம விதிகளுக்குட்பட்டவை அல்ல, கோயில் என்ற நிறுவனத்துக்குள் அகப்படாமல் வெட்டவெளியில் நிற்பவை, பார்ப்பன புரோகித மேலாண்மைக்கு எதிரானவை, வணங்கும் மனிதர்களைப்போன்றவையே அவர்களின் தெய்வங்கள், அக்காரவடிசலும் புளியோதரையும் பெருந்தெய்வங்களின் நைவேத்தியம் என்றால் சாராயமும் சுருட்டும் இறைச்சியும் நாட்டார் தெய்வங்களின் படையல். அடிப்படையில் பார்ப்பன மரபுக்கு எதிரான கூறுகளை ஆதாரங்களுடன் விளக்கினார்.

அதிலும் குறிப்பாக ‘பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பை முன்வைத்த திராவிட இயக்கம் சாதிவெறி இயக்கம், பார்ப்பனர்கள் சாதிவெறியில்லாத அப்பாவிகள், இடைநிலைச்சாதிகளை மட்டுமே எதிர்க்க வேண்டும், அதிலும் குறிப்பாகப் பார்ப்பனியத்துக்கும் இந்துத்துவத்துக்கும் எதிராகச் செயற்படும் மார்க்சிய – பெரியாரியச் சிந்தனையாளர்களைக் குற்றம் சாட்டவேண்டும்’ என்று விலகல் தலித்தியவாதிகளும் அவர்களைச் சிறுபத்திரிகைகள் தொடங்கி சமூகவலைத்தளங்கள் வரை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி அதன்மூலம் ‘தலித் ஆதரவாளர்’ சலுகையைப் பெற்றுக்கொள்ளத் துடிக்கும் பார்ப்பனர்களும் உள்ள சூழலில் ‘பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் இடையில் பரிமாறக்கொள்ள பண்பாட்டு அம்சங்கள் உள்ளன. ஆனால் பார்ப்பனப் பண்பாடு என்பது முற்றிலும் வேறானது’ என்று நிறுவினார் தொ.ப.

பெரியாரைப் பொறுத்தவரை கறாராகவும் இருந்தவர், நெகிழ்வுத்தன்மையுடனும் நடந்துகொண்டவர். தாலி மறுப்பை முன்வைத்தபோதும் நெ.து.சுந்தர வடிவேலு தேவதாசிப் பெண்ணை மணக்கும்போது, ”அவர்கள் விருப்பத்தின்படி தாலி கட்டுங்கள்” என்று பெரியார் ஏன் சொன்னார்? அந்தப் பெண்மணியின் பண்பாட்டு மனநிலையைப் புரிந்துகொண்டதால்தானே! குன்றக்குடி அடிகளார் இருக்கும் மேடையில் ஏன் கடவுள் மறுப்பு முழக்கங்களைத் தவிர்த்தார்? வள்ளலார் முதல் விவேகானந்தர் வரை, மறைமலையடிகள் முதல் காமராஜர், கலைஞர் வரை பெரியார் தன் கருத்தியலுக்குச் சாதகமான கூறுகளையும் சாதகமானவர்களையும் முன்னிலைப்படுத்தினார், பயன்படுத்தினார். இந்தப் பண்பு இப்போதைய திராவிடர் கழக ‘விடுதலை’, ‘உண்மை’ ஏடுகளிலும் தொடர்கின்றனவே? பார்ப்பனப் பண்பாட்டுக்கு எதிரானது திராவிடப் பண்பாடு என்ற தொ.ப.வின் முன்வைப்பை பெரியார் வரவேற்றுப் பயன்படுத்தவே செய்திருப்பார்.

பெரும்பாலான நாட்டார் தெய்வங்கள் ஆணவப்படுகொலையின் சாட்சியங்கள். மதுரைவீரன், காத்தராயவன் என்று சாதியப்படுகொலை நடந்தபிறகு, கொல்லப்பட்ட சாதியினருக்கு முன்னோடித் தெய்வமாக அவர்கள் மாறிப்போனார்கள். கொன்ற சாதியினரும் ஆவி அச்சம், குற்றவுணர்வு காரணமாக அவர்களைத் தெய்வமாக்கி வணங்கினார்கள். ஆணாதிக்க மனநிலையால் கொல்லப்பட்ட கன்னித் தெய்வங்களும் இப்படியே. ஆனால் பார்ப்பனியப் பண்பாட்டைப் பார்ப்போம். மதுரைவீரன் கொலையும் ஆணவக்கொலைதான். சம்புக வதமும் ஆணவக்கொலைதான். ஆனால் சம்புகன் வணங்கப்படுவதில்லை. ராமனுக்கு அச்சமோ குற்றவுணர்வோ இல்லை. இதுதான் ஆரியப்பண்பாட்டுக்கும் தமிழ்ப்பண்பாட்டுக்கும் இடையிலான வித்தியாசம். இந்த வேறுபாட்டைத்தான் கவனப்படுத்தினார் தொ.ப.

சரி, குற்றவுணர்வு கொள்வதாலும் கொலை செய்துவிட்டுத் தெய்வமாக்கிவிடுவதாலும் எல்லாம் சரியாகிவிடுமா? அது விடுதலை அரசியலுக்கு உதவுமா? நிச்சயமாக இந்தக் கேள்விகள் முன்வைத்து உரையாடப்பட வேண்டியவை. நாட்டார் தெய்வங்களில் சாதியம் மட்டுமல்ல, ஆணாதிக்கமும் இருக்கிறது. ஒரு பெண்ணுக்குத் திருமணமாவதற்கு முன்பு தந்தையின் குலதெய்வமே அவளது தெய்வம், மணமானபின் கணவனின் குலதெய்வமே அவளது தெய்வம். பூசை செய்யும் உரிமை எப்படி பெண்களுக்கு இல்லையோ அதேபோல் தெய்வத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் அவளுக்கில்லை.

என்னைப்பொறுத்தவரை நாட்டார் தெய்வங்கள் உள்பட எந்தத் தெய்வத்தையும் ஏற்பவனல்ல. கடவுள் மறுப்பு என்பது வெறுமனே அரசியலோ நம்பிக்கை சார்ந்த நிலைப்பாடோ மட்டுமல்ல. என் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு நானும் சமூகச்சூழலும்தான் காரணம், கடவுள், மதம், ஆன்மா, மோட்சம், நரகம், விதி, கர்மா, பாவபுண்ணியம் என எதுவும் காரணமல்ல என்ற புரிதலுடன்கூடிய சுயேச்சை அறமே கடவுள் மறுப்பு எனக் கருதுபவன்.

மக்கள் பண்பாட்டை அப்படியே ஏற்று நடப்பது வேறு ; மக்கள் பண்பாட்டைப் புரிந்துகொள்வதும் அதில் தன் கருத்தியலுக்கு சாதகமான கூறுகள் மீது கவனம் செலுத்துவதும் வேறு. பெரியார் பெரிதும் வெகுமக்கள் பண்பாடுகளுக்கு எதிராக இருந்தார். ஆனால் தன் சாதியொழிப்புக் கருத்தியலுக்கு ஆதரவான கருத்துகளுக்காக புத்தர், வள்ளுவர், அம்பேத்கர், வள்ளலார், குன்றக்குடி அடிகளார் சிந்தனை மரபுகளை விமர்சனத்துடன் கவனப்படுத்தினார்; எடுத்தாண்டார். தொ.பரமசிவனும் நாட்டார் தெய்வங்களையும் வைணவ மரபில் இருந்த கலகக்கூறுகளையும் கவனப்படுத்தினாரே தவிர தனிப்பட்ட முறையில் கடவுள் மறுப்பாளராகத்தான் இருந்தார்.

தொ.ப மட்டுமல்ல, மக்கள் பண்பாட்டைப் புரிந்துகொள்வதற்குப் பெரியாரியர்களிலும் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். மாதவிடாய்த் தீட்டைக் காரணம் காட்டி கருவறையிலிருந்தும் வழிபாட்டிலிருந்தும் பெண்கள் தள்ளிவைக்கப்பட்டிருக்கும் சூழலில் ‘தீட்டு’ பற்றிப் பொருட்படுத்தாத ஆதிபராசக்தி வழிபாட்டில் பெண்கள் கணிசமாகப் பங்கேற்பதைத் தோழர் ஓவியா சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வளவு ஏன் தோழர். மதிமாறனே “ரஜினிகாந்தின் மிகப்பெரிய தோல்விப்படங்கள் ராகவேந்திராவும் பாபாவும்தான். அவர் எந்தத் தைரியத்தில் ஆன்மிக அரசியல், இந்துத்துவ அரசியல் பேசுகிறார்?” என்று சரியாகவே ஒருமுறை கேட்டிருக்கிறார்.

தமிழ் சினிமாக்களில் தமிழுணர்வு, ஓரளவு சமத்துவத்தை வலியுறுத்தும் ஜனநாயகப்பாவனையைக் கொண்ட திருவிளையாடல் போன்ற பக்திப்படங்களும் அம்மன் சினிமாக்களும்தான் இங்கே வெற்றிபெற்றிருக்கின்றனவே தவிர சமஸ்கிருத மேலாண்மையை வலியுறுத்தும் ‘பாபா’ போன்ற படங்கள் தோல்வியையே தழுவியிருக்கின்றன. ஏனெனில் தமிழ் மக்கள் பண்பாடு என்பது இயல்பிலேயே இந்த வைதீக எதிர்ப்பைக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் தொ.ப தன் ஆய்வுகளின் மூலம் முன்வைத்தார். ரஜினி அரசியலில் இருந்து பின்வாங்கியதற்கு, வைதீக எதிர்ப்புடன்கூடிய தமிழ்மனநிலைக்கு முன்பு தன் மதவாத அரசியல் எடுபடாது என்பதும் முக்கியமான காரணம்.

மேலும் தொ.ப வெறுமனே நாட்டார் தெய்வங்களை மட்டும் ஆராயவில்லை. நீருக்கும் தமிழருக்கும் உள்ள தொடர்பு உள்பட இயற்கை சார்ந்த வாழ்வு குறித்த ஆய்வுக்கருத்துகளை முன்வைத்துள்ளார். “மறை என்றால் மறைக்கப்பட்டது. சூத்திரர்களுக்கும் பஞ்சமர்களுக்கும் மறைக்கப்பட்டதால்தான் வேதங்கள் ‘மறை’ என்றழைக்கப்பட்டன. எனவே திருக்குறளை உலகப்பொதுமறை என்றோ குர்-ஆனைத் திருமறை என்றோ அழைப்பது பிழையானது” என்று சுட்டிக்காட்டினார்.

கள ஆய்வுகள், கல்வித்துறைச் செயற்பாடுகளுடன் அவர் நின்றுவிடவில்லை. சமகால அரசியல் தேவைகளையொட்டி ‘இதுதான் பார்ப்பனியம்’, ‘இந்து தேசியம்’, ‘பூனா ஒப்பந்தம் ஒரு சோகக்கதை’, ‘நான் இந்துவல்ல. நீங்கள்…?’ போன்ற நூல்களில் அவர் முன்வைத்தது அம்பேத்கர், பெரியார் சிந்தனைகளைத்தான். ஆனால் தொ.ப-வையே முழுமையாகப் படிக்காமல் ‘அழகரைப் பற்றிப் பேசியவர் அம்பேத்கரை ஏன் பேசவில்லை?’ என்று கேட்பதற்கு ஒரு முரட்டுத்தனமான புத்திசாலித்தனம் வேண்டும். அது தோழர் மதியிடம் நிறையவே இருக்கிறது.

‘மதத்தில் புரட்சி செய்த மகான்’ என்று ‘ராமானுஜர்’ தொடருக்கு வசனம் எழுதிய கலைஞரை ஏற்றுக்கொள்ளும் மதிமாறன், ‘வைணவ மரபில் வடமொழி எதிர்ப்புக் கலகக்கூறுகளை அடையாளப்படுத்தும் தொ.ப.’வை மட்டும் ஏற்க மறுப்பது என்ன வகையான மனத்தடை? தொ.ப மறைவுக்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திராவிடர் விடுதலைக்கழகத்தின் ‘பெரியார் முழக்கம்’, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் என திராவிட இயக்கத் தலைமைகள் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் மதிமாறனோ தொ.ப.வை முழுமையாகத் தூக்கியெறிகிறார். அவர் லாஜிக்படி பார்த்தால் ‘சங்கி’ என்ற முத்திரையை மாற்றுவதற்காகத்தான் கமல் தொ.பவுக்கு அஞ்சலி செலுத்துகிறார் என்றால் ‘இந்து விரோதி’ என்ற பா.ஜ.க.வின் முத்திரையை மறைப்பதற்காகத்தான் ஸ்டாலின் தொ..பவுக்கு இரங்கல் தெரிவித்தார் என்று சொல்லிவிடலாம்தானே! ஆனால் அது தொ.ப, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இருவரையுமே அவமானப்படுத்துவது.

தொ.பவுக்கு சாதி அடையாளத்துடன் சுவரொட்டி ஒட்டப்பட்டதற்கு ‘அவர் சாதியொழிப்புச் சிந்தனைகளைத் தான் சார்ந்திருந்தவர்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. அவரே சாதியுணர்வுடன்தான் இருந்தார்’ என்று குற்றம் சாட்டுகிறார் தோழர். வே.மதிமாறன். இது ‘கருணாநிதி வீட்டுப்பெண்களே சாமி கும்பிடுகிறார்கள். அவர்களையே திருத்த முடியவில்லை’ என்பது போன்ற அபத்தக் குற்றச்சாட்டு. அம்பேத்கரே ‘இந்துத்துவ அம்பேத்கர்’ ஆக்கப்படுகிறார். கலகக்கலைஞன் எம்.ஆர்.ராதாவின் படத்தையே சமீபத்தில் தெலுங்கு அமைப்பு ஒன்று பயன்படுத்திக்கொண்டதே? வ,உ.சி உள்ளிட்ட பலரும் சாதிய அடையாளங்களுடன் கொண்டாடப்படுவதற்கு அவர்களா பொறுப்பு?

தொ.பரமசிவனுக்கும் அந்த சாதிய அமைப்புக்கும் என்ன உறவு இருந்தது என்று அறிய வேறெங்கும் போக வேண்டாம். அந்தச் சாதிச்சங்கம் அடித்த இரங்கல் சுவரொட்டியே போதும். தொ.பரமசிவனை நாம் தொ.ப என்றழைக்கிறோம். ஆனால் அந்தச் சாதிச்சங்கத்தின் இரங்கல் சுவரொட்டியிலோ ‘தொ.ப.பரமசிவன் யாதவ்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதான் அவர்கள் தொ.ப.வை அறிந்துகொண்ட லட்சணம். இவ்வளவுதான் தொ.ப.வுக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவு.

சுகுணா திவாகர், பத்திரிகையாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.