க. கனகராஜ்

முன்பொரு முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது, நரேந்திர மோடி அவர்கள் கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டுப் பேசினார். பொதுமக்களும், கேரளத்தினரும், பல அறிவு ஜீவிகளும் இதற்காக மோடியை துவைத்து, கிழித்து வறுத்துப் போட்டனர்.
மனித வளக் குறியீட்டில் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் உள்ள ஒரே மாநிலம் ‘கேரளம்’ மட்டும் தான். அத்தகைய மாநிலத்தை வாக்குகளை அபகரிப்பதற்காக ‘சோமாலியா’ என்று கோமாளித்தனமாக சித்தரித்து கிண்டலுக்கு உள்ளானார்.
தற்போது, சில தினங்களுக்கு முன்பு கேரளாவில், ஏன் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்யும் மண்டிகள் இல்லை?, இவர்கள் எல்லாம் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுகிறார்கள்? என்று தனது மேதமையை காட்டுவதாக நினைத்துக் கொண்டு, மோடி தன் அறியாமையை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த நாட்டில் ஒரு மாநிலத்தைப் பற்றிய குறைந்தபட்ச விபரங்களையாவது தெரிந்து வைத்துக் கொண்டு விமர்சனம் செய்ய வேண்டும் என்கிற குறைந்தபட்ச நேர்மை கூட ஒரு பிரதமரிடம் இல்லாமல் இருப்பது மிகப் பெரிய அவமானம்.
கேரளாவில் உணவுப் பொருட்கள் கொள்முதல் செய்யும் ‘மண்டிகள்’ இல்லை என்பது உண்மை தான். ஏனென்றால் கேரளாவுக்கு தேவையான நெல்லில் 20 முதல் 30 சதவிகிதம் மட்டுமே அந்த மாநிலத்தில் உற்பத்தியாகிறது. எனவே, அது பற்றாக்குறை மாநிலம் தான். நரேந்திர மோடி இன்னொரு அம்சத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும் உணவு தானியங்களில் இந்த ஆண்டு 90 சதவிகிதம் பஞ்சாப்பிலும், ஹரியானாவிலும் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. இதுதான் ஒவ்வொரு ஆண்டும் நடைமுறை. இந்தியாவில் உள்ள இதர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் குறைந்தபட்ச ஆதார விலையின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக வெறும் 10 சதவிகிதம் அளவிற்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதையாவது திருவாளர் மோடி அறிந்து வைத்திருக்க வேண்டும்.
பிறகு, கேரளாவில் எப்படித்தான் உணவு தானிய கொள்முதல் நடக்கிறது என்ற கேள்வி எழலாம். இந்தியாவில், வலுவான கூட்டுறவு அமைப்புகள் உள்ள மாநிலம் கேரளா. இந்த கூட்டுறவு அமைப்புகளே இந்த கொள்முதலை செய்து வருகின்றனர். நரேந்திர மோடி அரசாங்கம் 100 கிலோ நெல்லுக்கு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 1,848/- மட்டுமே. ஆனால், கேரள அரசாங்கம் கூடுதலாக ரூ. 900/- அறிவித்து 100 கிலோ நெல்லுக்கு ரூ. 2,748/- கொடுத்து கொள்முதல் செய்கிறது. மோடி இதை அறிந்து கொண்டு பேசியிருக்க வேண்டும். அவருக்கு எப்போதுமே அப்படி ஒரு வழக்கம் இல்லை.
இதோடு மட்டுமல்ல; கேரள அரசாங்கம் நெல் உற்பத்திக்கும் கூட ஊக்கத் தொகையை அளித்து நெல் உற்பத்தியை ஊக்கப்படுத்தி வருகிறது. ஒரு ஹெக்டேர் நிலத்தில் நெல் சாகுபடி செய்தால் ரூ. 5,000/- மாநில அரசாங்கம் தனது நிதியிலிருந்து ஒதுக்குகிறது. இது தவிர, சாகுபடியாகும் இடத்திற்கேற்ப உள்ளாட்சி அமைப்புகள் நெல் சாகுபடியாளர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 15,000/- முதல் 17,000/- வரை கொடுக்கிறது. (உடனே பஞ்சாயத்துக்கு எப்படி இவ்வளவு நிதி கிடைக்கும் என்று சங்பரிவார் வகையறா கொடி தூக்கக் கூடும். திட்டத்திற்கு ஒதுக்கப்படும் மாநில நிதியில் 25 சதவிகிதம் ஊராட்சி அமைப்புகளுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது. இது எந்த திட்டத்தோடும் இணைக்கப்பட்டு வழங்கப்படுவதில்லை. ஊராட்சிகள் தங்களது தேவையின் அடிப்படையில் இவற்றை செலவழித்துக் கொள்ளலாம். அந்த நிதியிலிருந்து தான் இது வழங்கப்படுகிறது.)
ஆக, நெல் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ரூ. 20,000/- முதல் ரூ. 22,000/- வரை ஒரு ஹெக்டேருக்கு வழங்கப்படுகிறது. இது தவிர, தரிசாக கிடக்கும் நிலத்தை செம்மை செய்து நெற்பயிரை வளர்த்தால் அதற்காக கூடுதலாக ரூ. 2,000/- மாநில அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. திரு. நரேந்திர மோடியோ அவரது பரிவாரமோ இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது இப்படியொரு விவசாய ஆதரவு நடவடிக்கை இருக்கிறது என்று சொல்ல முடியுமா?.
இதேபோன்று, காய்கறிகளுக்கு ரூ. 25,000/-, பயிர் வகைகளுக்கு ரூ. 20,000/-, வாழைப்பழத்திற்கு ரூ. 30,000/- அந்த அரசாங்கத்தால் பயிர் செய்வதை ஊக்குவிப்பதற்காக மட்டும் வழங்கப்படுகிறது. இப்படி ஒரு ஏற்பாடு இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது இருக்கிறதா?. இது எதையும் கவனத்தில் கொள்ளாமல் இந்தியாவில் இருக்கும் ஊடகங்கள் அனைத்தையும் தனது அடியாளாக மாற்றி வைத்திருக்கிற சங்பரிவார் இந்த பொய்யையே ஊர் முழுவதும் விதைத்து விட முடியும் என்று நம்புகிறது. ஆனால், கேரளாவில் உள்ள விவசாயிகளுக்கு அதை அனுபவிப்பவர்களுக்கு இவருடைய பொய், புளுகு அத்தனையும் சிரிப்பையே உருவாக்கும்.
இது ஒருபுறம் இருக்க, மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு சி.ஏ.சி.பி., எனப்படும் “விவசாய செலவுகள் மற்றும் விலைகளுக்கான கமிசன்” என்ற அமைப்பு ஒரு ஆபத்தான பரிந்துரையை செய்திருக்கிறது. அந்த பரிந்துரையை மோடி அரசாங்கம் நிராகரிக்கவில்லை. எந்த நிமிடத்திலும் அதை அமல்படுத்தும் வாய்ப்புள்ளது.
அது என்னவெனில், மத்திய அரசு, அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையை விட கூடுதலாக கொடுத்து எந்த மாநில அரசாங்கமாவது கொள்முதல் செய்தால் அந்த மாநிலத்தில் நெல்லோ, கோதுமையோ இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்வது தடை செய்யப்பட வேண்டும் என்பது தான் அந்த பரிந்துரை.
அதாவது, கேரளா மத்திய அரசு அறிவித்துள்ளதற்கு மேல் ஒரு குவிண்டால் நெல்லுக்கு கூடுதலாக கொடுக்கும் தொகையை நிறுத்தாவிட்டால் கேரளாவில் அல்லது எந்தவொரு மாநிலத்திலும் கொள்முதலை நிறுத்தி விடுவோம் என்பது தான் அந்த பரிந்துரை. இவ்வளவு மோசமான ஒரு பரிந்துரையை நிராகரிப்பதற்கு பதிலாக, அதை அடைகாத்துக் கொண்டிருக்கும் மோடி சொல்கிறார் கேரளா மோசம் என்று.
இதுபோன்று வாக்கு அபகரிப்புக்காக புளுகும் போது, கொஞ்சமேனும் உண்மைகளை தெரிந்து கொண்டு மோடி பேச வேண்டும். என்ன செய்ய, சங்பரிவாருக்கு அப்படியொரு குணம் அதன் இயல்பிலேயே கிடையாது.
க. கனகராஜ், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்.