ப. ஜெயசீலன்
2011 ஜூலை 22 Anders Behring Breivik என்பவரால் நார்வேயின் Utøya என்னும் இடத்தில் நடத்திய இனவெறி/மதவெறியால் உந்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 77(56 பேர் அங்கு சுற்றுலாவிற்காக வந்திருந்த 20 வயதுக்கு உட்பட்டவர்கள்) பேர் சுட்டு கொல்லப்பட்டார்கள். இரண்டாம் உலகப்போருக்கு பின் நார்வே நாட்டில் நடந்த மிக பெரிய உயிரிழப்பு சம்பவம் இதுதான். குற்றவாளிகளை தண்டிப்பதில் நம்பிக்கையில்லாமல் அவர்களுக்கு மறு வாழ்வளிப்பதை நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் நார்வேயின் சட்டம் ஒழுங்கை பேணும் காவல்துறைக்கும், நீதித்துறைக்கும், மானுட மாண்பிலும், மனிதாபிமானத்திலும் நம்பிக்கைகொண்டுள்ள நார்வே மக்களுக்கும் இந்த சம்பவம் ஒரு பெரும் சோதனையாக அமைந்தது. நார்வேயில் அதிகபட்ச தண்டனை என்பது 21 வருட சிறை தண்டனை தான். இவனை போன்ற ஈவு இரக்கமற்ற மிருகத்திற்கும் 21 வருட சிறைத்தண்டனை தானா என்று உலகம் ஒரு கேள்விக்குறியோடும் இவனுக்கு மட்டுமாவது மரணதண்டனை நிறைவேற்றுவார்களா என்ற எதிர்பார்ப்போடும் கவனித்தது.
குற்றம் சுமத்தப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு தான் அதற்கு வருந்தவில்லையென்றும் மாறாக தான் செய்தது தனது தற்காப்பிற்காக நடத்திய தாக்குதல் என்றும் வாதிட்டார். அந்த குற்ற செயலில் ஈடுபடுவதற்கு முன்பு 1500 பக்கம் கொண்ட அவர் எழுதிய மின்னஞ்சலை பலருக்கும் அனுப்பியிருந்தார். அதில் வெள்ளை இனவெறியை தூண்டும், இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களையும், தனது நாட்டில் குடியேறும் பிற நாட்டினருக்கு எதிரான கருத்துக்களையும் பகிர்ந்திருந்தார். ஒரு வகையில் அவர் நார்வேயின் சகிப்புத்தன்மைக்கும், மானுட மாண்பின் மீதான நார்வே சமூகத்திற்கு இருந்த பற்றின் மீதும் ஒரு பெரும் சோதனையை ஏற்படுத்தினார். இருந்தும் கூட நார்வேயின் நீதிமன்றம் விசாரணையின் முடிவில் அவருக்கு அதிகபட்ச தண்டனையான 21 வருடங்களை மட்டுமே விதித்து தீர்ப்பளித்தது.
அப்பொழுது இதை பற்றி வெளியான ஒரு டாக்குமென்றியை நான் பார்த்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அந்த டாக்குமென்டரியின் முடிவில் அந்தத் தாக்குதலில் தனது 2 பதின்வயது மகன்களை பறிகொடுத்த தந்தையிடம் Anders வெறும் 21 வருட சிறைத்தண்டனையோடு தப்பித்துக்கொண்டது உங்களுக்கு கோபம் வரவைக்கவில்லையா? அவனைப் போன்றவர்களுக்கு மரண தண்டனை தரவேண்டும் என்று உங்களுக்கு தோன்றவில்லையா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் என்னை நெகிழ செய்தது.
அவர் நாங்கள் ஒரு சமூகமாக ஒரு சக மனிதனை எதன் பொருட்டும் கொல்லும் உரிமை யாருக்கும் இல்லை என்பதை முழுமையாக நம்புகிறோம்/ஏற்றுக்கொண்டிருக்கிறோம். எனவே ஒரு நொடி கூட அவனை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எழவில்லை. அப்படி தோன்றியிருந்தால் அவனுக்கும் எனக்குமான வித்தியாசம் இல்லாமல் போயிருக்கும். ஒரு வேளை எனது மகன்களுக்கு நான் நீச்சல் கற்றுத்தந்திருந்தால் அவர்கள் அங்கிருந்த குளத்தில் குதித்து தப்பித்திருப்பார்களோ என்ற எண்ணம் மட்டுமே எனக்கு அடிக்கடி வருகிறது என்றார். ஒரு நவீன நாகரீக ஜனநாயக சமூகத்தில் பயிற்றுவிக்கப்பட்டவர்களின் சிந்தனை எப்படியிருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
2016ல் Anders சிறையில் தனது மனித உரிமை பறிக்கப்பட்டதாக நார்வே அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்தார். infact Anders 360 சதுரடி கொண்ட விசாலமான இடத்தில TV, radio, gym, video games, காற்றோட்டத்திற்கு ஜன்னல்கள், சொந்த சமையல் அறை என்று நட்சத்திர விடுதிக்கு சமமான வசதிகளுடன் அடைக்கப்பட்டிருக்கிறார். தன்னை அதிக நாட்கள் தனிமையில் அடைத்துவைப்பதாகவும், அடிக்கடி நிர்வாணப்படுத்தி சோதிப்பதாகவும் அரசுக்கெதிராக குற்றம் சாட்டினார். இது சம்மந்தமாக கோர்ட்டிற்கு வந்த போதும் நாஜிக்களின் salute அடித்தார். தனது குற்ற செயல் குறித்தான எந்த வருத்தத்தையும் அவர் வெளிப்படுத்தவில்லை.
இருந்தும் நீதிமன்றம் அவர் சொன்னதில் உள்ள நியாயத்தை ஏற்று கொள்வதாகவும் அவர் நடத்தபட்ட விதம் நார்வேயின் மனித உரிமை மதிப்பீடுகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை மதிப்பீடுகளுக்கும் எதிராக உள்ளதாக சொல்லி Andersகு சுமார் 40000 டாலர் நஷ்ட ஈடு தர உத்தரவிட்டது. இதனை குறித்து Andersஇன் துப்பாக்கி சூட்டில் தப்பி பிழைத்தவர்களிடம் கேட்டபோது நீதிமன்ற தீர்ப்பை ஏற்பதாகவும் யாராக இருந்தாலும் மனித உரிமை என்பது எல்லோருக்கும் பொதுவானது என்றும் Andersன் குற்றச்சாட்டில் நியாயம் இருப்பதாகவும் கருத்து தெரிவித்தார்கள். ஒரு நவீன நாகரீக ஜனநாயக சமூகத்தில் பயிற்றுவிக்கப்பட்டவர்களின் சிந்தனை எப்படியிருக்கும் என்பதற்கு இது இன்னொரு உதாரணம்.
மனித மாண்பை குறித்தோ, மனித உரிமை குறித்தோ, நவீன நாகரீக சமூகத்தை குறித்தோ, ஜனநாயகத்தை பற்றியோ எந்த அடிப்படை புரிதலோ, அறிவோ, கல்வியோ இல்லாத காட்டுமிராண்டிகளும், தற்குறிகளும், பொறுக்கிகளும், இரட்டை வேடகாரர்களும், முட்டாள்களும் புழங்கும் சமூகம் எப்படியிருக்கும் என்பதிற்காண அடையாளம் தான் தெலுங்கானாவில் 4 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட மிக கொடூரமான, அப்பட்டமான மனித உரிமை மீறலை கொண்டாடும், சிலாகிக்கும் சில்லறை பசங்களும், ஊடகங்களும் புழங்கும் இந்திய, தமிழ் சமூகம்.
இந்தியாவில் காவல்துறை என்பது மிக மோசமாக பயிற்றுவிக்கப்பட்ட, தரமற்ற, தொழில் நேர்த்தியோ, தொழில் அறமோ அற்ற ஒரு கேவலமான அமைப்பு. வேட்டை நாய்களுக்கு என்னென்ன பயிற்சிகள் தேவைப்படுமோ அந்த அளவிற்கான பயிற்சிகளும், பாடங்களும் மட்டுமே இந்தியாவில் காவல்துறையினருக்கும் அளிக்கப்படுகிறது. முதலாளி கவ்விக்கொண்டு வர சொல்லும் எலும்பை கவ்விக்கொண்டு வருவது மட்டுமே இந்தியாவில் காவல் துறையினரின் வேலை. இதில் எந்த ஒளிவோ மறைவோ கிஞ்சித்தும் கிடையாது.
போலீசிங் என்பதின் அடிப்படையான அர்த்தத்தை இன்னமும் இங்கு மக்களோ, காவல்துறையோ புரிந்துகொண்டதாக தெரியவில்லை. மேலை நாடுகளில் உள்ள காவல்துறையினரின் சமகால policing மற்றும் professional standardஓடு ஒப்பிட்டால் நமது காவல்துறை atm வாசலில் நிற்கும் காவலாளிகளாய் கூட தகுதி பெறாது. இப்படிப்பட்ட காவல்துறைதான் தனது முதலாளி கவ்விவர சொன்ன 4 உயிர்களை encounter என்னும் பெயரில் கவ்விவந்துள்ளது. தமிழ் படங்களை ஆங்கில படங்களை போல எடுக்கும் வெள்ளைக்கார துரை கவுதம் வாசுதேவ் encounter செய்யும் காவல்துறையை நாயகத்தன்மையோடு காட்டிய சில்லறைத்தனமான காக்க காக்க படங்களை சிலாகித்து கொண்டாடும் சமூகத்தில் 4 உயிர்களை அரச பயங்கரவாதம் காவு வாங்கியிருப்பதை கொண்டாடுவர்களை பார்த்து நாம் ஆச்சர்யம் அடைய முடியாது.
தனிப்பட்ட ஒருவர் தனக்கு ஏற்படும் கோபம், வெறி, பழிவாங்கும் உணர்வு எல்லாவற்றையும் எப்படி வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். ஆனால் ஒரு சமூகமாக நாம் நமது உணர்ச்சிகளை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பது கவனத்துக்குறியது. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை குஞ்சை அறுக்க வேண்டும், கல்லால் அடித்து கொல்ல வேண்டும், நாயைப் போல சுட்டுக் கொல்லவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைக்கும் சமூகத்தின் மனநலன் மிகுந்த கவலைக்குரியது.
குற்றச் செயல்களில் ஈடுபடுபர்களின் வீட்டில் எத்தனை காற்றோட்டமான ஜன்னல் இருந்தது என்பதில் தொடங்கி ஒரு சமூகமாக ஒரு குற்றவாளிக்கு குற்றமிழைப்பதற்கான சிந்தனை தோன்றியவுடன் அவனுக்கு அந்த குற்றமிழைப்பதை தவிர்ப்பதற்கான எத்தனை வாய்ப்புகளை சமூக கட்டமைப்பு வழங்கியிருக்கிறது என்பது வரையும் பல்வேறு கோணங்களும், பரிணாமங்களும், factorsம் ஒரு குற்றக்செயலின் பின்பும், குற்றவாளியின் பின்பும் அடங்கியிருக்கிறது.
இன்னும் சொன்னால் குற்றவாளிகளும், குற்றங்களுமே சமூகத்தின் உள்ளார்ந்த ஆன்ம நலத்தை பிரதிபலிக்கிறார்கள். a crime gives us the insight in to the cross section of a society’s mental wellness. இதை நாம் ஆராய தொடங்கினால் மொத்தமாக இந்தியாவின் மீது அணுகுண்டு போட்டு அழிக்க வேண்டிய முடிவிற்கு நம்மை கொண்டு போய் நிறுத்தும். அதனை தவிர்க்க வேட்டை நாய்கள் அவ்வப்பொழுது 4 எலும்பை கவ்விக்கொண்டு வந்து இந்திய சமூகத்திற்கு போலியான ஆறுதலையும் நீதியையும் அளிப்பது தேவையாய் இருக்கிறது.