இரா. முருகவேள்
மேட்டுப்பாளையத்தில் 17 பேரைப் பலிவாங்கிய சுவர் பற்றி வெளிவரும் உண்மைகள் படுமோசமானவையாக உள்ளன.
அது ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மட்டுமல்ல. மேட்டுப்பாளையத்திலேயே வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியையும், அருந்ததிய மக்கள் வாழும் பகுதியையும் பிரிந்த்து எழுப்பப்பட்டிருந்த சுவருமாகும்.
அருந்ததிய மக்கள் லே அவுட் சாலைகளில் நடமாடுவதைத் தடை செய்யவே அமைக்கப்பட்ட தீண்டாமைச் சுவர் இது.
மேட்டுப்பாளையத்தில் ஒரு கூட்டுறவு சங்கம் லேஅவுட் அமைத்த போது பெரும் பணக்காரர்கள் இங்கே வந்து குவிந்தனர். லேவுட்டுக்கு அப்பால் இருந்த நடூர் தலித் மக்கள் வாழும் பகுதியாகவும், வறுமை மிகுந்ததாகவும் இருந்ததால் அது தங்கள் கண்ணில் பட்டு இந்தப் பகுதியி்ன் அழகைக் கெடுத்து விடக்கூடாது என்றும், அவர்கள் தங்கள் சாலைகளில் நடமாடிவிடக் கூடாது என்றும் 100 அடி நீளமும், 20 உயரமும் கொண்ட கருஙகல் சுவரை சேரிக்கும், லேவுட்டும் நடுவே துகில் மாளீகையார் உள்ளிட்டவர்கள் எழுப்பினர்.
இது அருந்ததிய மக்களின் சாலையை அடியோடு மறித்தது. இந்தச் சுவரை எடுக்க வேண்டும் என்பது அவர்களது நீண்ட நாள் கோரிக்கையாகும்.
சுவர் எழுப்பிய இந்த பணக்கார லேஅவுட்டானது காம்பவுண்ட் போட்டு தங்கள் பகுதியை மூடி வைக்க அனுமதி பெற்ற கேட்டட் கம்யூனிட்டியோ, தனியார் டவுன்ஷிப்போ அல்ல. அதே போல இந்த லே அவுட்டின் மற்ற சாலைகளை மறித்து சுவர் எழுப்பப் படவில்லை.
மற்றவர்கள் நடமாட்டத்தைத் தடுக்க சுவர் எழுப்பும் உரிமை இவர்களுக்கு இல்லை. சட்டப்படி வீட்டு மனைகள் விற்றுத் தீர்ந்ததும் லேஅவுட் சாலைகளை தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி அரசிடம் ஒப்படைத்து விட வேண்டும். பின்பு அந்த சாலைகள் எல்லோருக்கும் பொதுவானவை ஆகிவிடும்.
இங்கே நடூரை மறித்து சட்டவிரோதமாக சுவர் எழுப்புவதை அரசும் நகராட்சியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.
இந்த சுவரோரம் 22 செண்ட் மனை சக்ரவர்த்தி துகில் மாளிகை உரிமையாளருடையது. எனவே சுவர் எழுப்புவதில் அவருக்கு முக்கிய பங்கிருந்திருக்கலாம்.
இவர் கருங்கல் சுவர் ஓரம் செடிகள் வளர்த்து நீர் விட்டு அந்தப் பகுதியையே சதுப்பு நிலம் போல ஆக்கிவிட்டார். இது சுவரை பாதித்து சுவருக்கு அப்பால் வாழ்ந்து வந்த மக்களையும் கடுமையாகப் பாதித்தது. அவர்கள் இது பற்றி முறையிட்டும் துகில் மாளிகை உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.
மழைகாலத்தில் தொடர்ந்து மழை பெய்ததும் வடிகால் இல்லாமல் சுவர் ஓரம் நீர் குளம் போலத் தேங்கியது. சுவர் உடைந்து விடுவதைத் தடுக்கும் கான்கிரீட் பீம்கள் இல்லாமல் நெடுநெடு உயரத்தில் கட்டப்பட்டிருந்த சுவர் ஏற்கெனவே பலவீனமடைந்திருந்தது.
நள்ளிரவில் கனமழையில் ஏற்கெனவே சிதிலமாகியிருந்த சுவர் இடிந்து விழுந்து விலைமதிப்பற்ற உயிர்களைப் பலிவாங்கியது. இந்த உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம்.
கேடுகெட்ட சாதியுணர்ச்சி, சுத்த உணர்ச்சி, அழகுணர்ச்சியால் ஏற்கெனவே வேதனை அனுபவித்து வந்த மக்கள் உடமைகளையும் உயிரையும் இழந்து உள்ளனர்.
இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்?
இரா. முருகவேள், எழுத்தாளர்; வழக்கறிஞர்.