நூல் அறிமுகம்: ‘சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும் – தொடரும் விவாதம்’

ரங்கநாயகம்மா எழுதிய ‘சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது, அம்பேத்கர் போதாது,மார்கஸ் அவசியத் தேவை’ என்ற நூலை கொற்றவை மொழிபெயர்ப்பு செய்தார். இந்த நூலுக்கு வந்த எதிர்வினைகள் ஏராளம். கொற்றவை இந்த நூலின் மொழிபெயர்ப்பாளர்தான் ஆனாலும் அடிப்படையில் அவர் ஒரு சமூக செயற்பாட்டாளர். எனவே அந்த நூலை மையப்படுத்தி எழுந்த விவாதங்களை தொடர்ந்து நடத்த விரும்பியிருக்கக் கூடும். எனவே ஏறக்குறைய அதன் அடுத்த பாகமாக இந்த நூலை கொற்றவை தொகுத்து, மொழிபெயர்த்துள்ளார் போலும். குறளி பதிப்பகம்தான் இந்த நூலையும் (264 பக்கங்கள்/ரூ.200) வெளியிட்டுள்ளது (2016).

இந்த நூலுக்கான முன்னுரையில் இந்த நூலுக்கான அவசியம் பற்றி பேசுகிறார். ‘மக்களுக்கு சில சலுகைகளை,நிவாரணங்களை பெற்றுத் தருவது, பூர்ஷ்வா பாராளுமன்ற அரசியலில் பங்கு பெறுவது என்பதைத் தவிர ‘தலித்தியத்தின் பெயரால் நடக்கும் பிழைப்புவாத பூர்ஷ்வா அரசியலுக்கு’ ‘ சாதி ஒழிப்பிற்கான எந்த செயல்திட்டமும் இல்லை’ என்பதை அறுதியிட்டு சொல்லுகிறார்.’மார்க்சியம் பற்றிய தவறான புரிதல்களை அம்பேத்கர் வளர்த்துக் கொண்டதால்’ உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமை பாதிக்கப்படுகிறது.சாதி ஒழிப்பானது வெறும் அடையாள அரசியலால் சாத்தியம் இல்லை. இது பல்முனைகளில் நடத்த வேண்டிய போராட்டம்.’சாதி ஒழிப்பிற்கான தீர்வு மார்க்சியத்தில் இல்லை’ என்று சொல்லுவதே சாதி ஒழிப்பிற்கு எதிரானது என்று கொற்றவை சொல்லுகிறார்.

இது தொகுப்பு நூல். கொற்றவை கட்டுரைகளை தேர்ந்தெடுத்து தொகுத்து உள்ளார். அரவிந்த் மார்க்சிய கல்வியகம் சார்பில் ‘சாதியப் பிரச்சினையும்,மார்க்சியமும்’ என்னும் தலைப்பில் 2013ல் சண்டிகரில் நடந்த கருத்தரங்கில் சமர்ப்பித்த ஒரு உரைதான் இந்த நூலின் முதல் அத்தியாயம். இந்த 120 பக்க கட்டுரை பல குறிப்பான செய்திகளைப் பேசுகிறது.

‘தலித் அறிவுஜீவிகள் பாட்டாளிவர்க்க நலனில் எந்த அக்கறையும் கொள்வதில்லை’,’எந்தவிதமான ஆய்வுகளுக்கும் அவர்கள் தயாராக இல்லை’,’சாதிய அடையாளங்களை கொண்டாடுகின்றனர்’,’தலைவர்களை திருவுருவாக்கி’ வழிபடுகின்றனர் என்பது போன்ற பல செய்திகளை இக்கட்டுரை அக்கறையோடு சொல்லுகிறது. இதனை நட்பு விமர்சனமாகத்தான் பார்க்கமுடிகிறது.

கம்யூனிஸ்டுகளையும் இது விட்டுவைக்கவில்லை.’கம்யூனிஸ்டுகள் மதச் சின்னங்களை அணிவது ஒரு சமூக கோழைத்தனம்’ என்று முடியும் இந்த கட்டுரை, சாதி ஒழிப்புக்காக தனிமனிதனும், அரசும், சமூக நிறுவனங்களும், அரசியல் கட்சிகளும் செய்ய வேண்டிய நெடிய நடவடிக்கைகளைப் பற்றி பேசுகிறது.

அடையாள அரசியலின் போதாமையை இது பேசுகிறது. அதன் வெற்றுத் தன்மையை, சந்தர்ப்பவாதத்தை சொல்லுகிறது. கடந்த 70 ஆண்டுகளில் இடஒதுக்கீட்டினால் நடைபெற்றுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்கிறது. பெரும்பாலான தலித் சிந்தனையாளர்கள் ‘பாராளுமன்றம் மற்றும் சீர்திருத்தம் என்னும் வாய்ப்பைத் தாண்டி அடிப்படைக்கூறு சார்ந்த எந்த நடவடிக்கையையும் தவிர்க்கின்றனர்’ என்று சொல்லுகிறது.

‘சாதி ஒழிப்பிற்கான சோஷலிஸ்ட் வேலைத்திட்டம்’ என்னும் கட்டுரையைச் சுருக்கி குறிப்புகளாக ஒரு துண்டுப்பிரசுரம் கூட வெளியிடலாம். மிகுந்த பொறுப்போடு எழுதப்பட்டுள்ளது. சாதி உருவான விதம், அது இறுகிய விதம் என்பதை பேசுகிறது. அம்பேத்கரின் போதாமை, அவரது தத்துவ வெறுமையை ஒரு புறம் பேசுகிறது. அதே சமயம் இது குறித்து தீர்க்கமான விமர்சனத்தை வைக்காத கம்யூனிஸ்டுகளை அது கேள்வி கேட்கிறது. விடுதலைப் போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து, பாட்டாளிவர்க்க நலனுக்காக கம்யூனிஸ்டுகள் போராடினார்கள்; அதேபோல தலித் மக்களின் மேம்பாட்டிற்கு இட ஒதுக்கீடு கோரி அம்பேத்கரும் போராடியவர். இருவரும் முரண்பட்ட புள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். அப்படி செய்வது இந்த இயக்கங்களுக்கு நல்லது.

அம்பேத்கரை கடவுள் நிலையில் வைத்து பூஜிப்பது மூலம் தலித் அறிவுஜீவிகள் தவறு செய்கின்றனர். பௌத்த மதத்திற்கு மாறுவதால் சாதி ஒழிப்பு சாத்தியமா? அமைச்சராக அம்பேத்கர், தலித் மக்களின் ஆதாரமான வாழ்க்கை மேம்பாட்டிற்கு என்ன திட்டத்தை கொடுத்தார்? இட ஒதுக்கீடு மட்டுமே பெரிய நிவாரணத்தை தந்து விடுமா? நிலம் என்பது தலித் மக்களின் முன்னேற்றத்திற்கு அவசியம் இல்லையா ? நில உரிமைக்காக போராடி வரும் கம்யூனிஸ்டுகளை எதிரிகளாக பார்ப்பது ஏன்? வர்க்கப் புரிதல் பற்றிய அரசியலை கம்யூனிஸ்டுகள் பேசுவதற்கு பதிலாக, தலித் அறிவுஜீவிகள் சொல்லும் அவதூறுகளுக்கு இணங்கி எண்ணற்ற தியாகங்கள் புரிந்தும், கம்யூனிஸ்டுகள் தற்காப்பு மனநிலையில் (defence mode) எதிர்வாதம் புரிவது ஏன் என்ற எண்ணற்ற கேள்விகளை இந்த நூல் முன் வைக்கிறது.

‘சாதி ஒழிப்பு சில பத்தாண்டுகளில் சாத்தியம்’ என்று நம்பிக்கையோடு சொல்கிறது. மரபார்ந்த கம்யூனிஸ்டுகளின் நிலைபாடுகள் குறித்தும் இந்நூலில் ஒருசில இடங்களில் விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் அது விவாதத்தின் போக்கை மாற்றவில்லை. இந்த நூலை தலித் அறிவுஜீவிகளும் கம்யூனிஸ்டுகளும், சமூக மாற்றம் கோருவோரும் அவசியம் படிக்க வேண்டும். இது ஒரு ஆவணம் என்பதில் ஐயமில்லை. இந்த நூலுக்காக கட்டுரைகளை தேர்ந்தெடுத்து, மொழிபெயர்த்த கொற்றவையை பாராட்ட வேண்டும். நூல் வெளியாகி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இரண்டாம் பதிப்பு வரவிருக்கிறது.

இந்த நூலில் ரங்க நாயகம்மாவும், பி. ஆர். பாபுஜியும் கூறிய கருத்துக்களுக்கு வந்த எதிர்வினைகளுக்கு அவர்கள் பதிலாக எழுதியுள்ள கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இந்த நூலைப் படித்து இதனை பாராட்ட வேண்டும் அல்லது தவறு என்று சொல்ல வேண்டும்; அதாவது எப்படி தவறு என்று சொல்ல வேண்டும். கள்ள மௌனம் தேவையில்லை.

இறுதியில் வாசகர்களுக்காக என்ற பிரிவில் 25 கேள்விகளை கொற்றவை பட்டியலிடுகிறார்.(வாடகை, வரி, வட்டி, உழைப்புச் சுரண்டல், அரசு, இராணுவம், நிதித்துறை பற்றிய அம்பேத்கரின் புரிதல் எத்தகையது? தெலுங்கானா, தெபாகா எழுச்சி பற்றி அம்பேத்கர் என்ன சொல்லுகிறார்? அம்பேத்கர் பௌத்தத்திற்கு மாறியதால் சாதி ஒழிப்பு போராட்டம் அடைந்த முன்னேற்றம் என்ன?) இதற்கு பதில் தேடும் விதமாக நூட்களின் பட்டியல் ஒன்றை அவர் கொடுத்துள்ளார். இப்போது வாசகர்களாகிய நாம்தான் இக்கேள்விகளுக்கு விடைகாண முயற்சிக்க வேண்டும்.

சாதி ஒழிப்பில் காந்தி, பெரியாரின் பாத்திரம் என்ன என்பது பற்றியும் இது பேசுகிறது. கல்வி நிறுவனங்கள், பங்குச்சந்தை, கூட்டுப் பண்ணை, வீட்டுவசதி, மத நிறுவனங்கள், சாதி சங்கங்கள், திருமண உறவுமுறை போன்றவைகளை நாம் எப்படி அணுகவேண்டும்.சாதி ஒழிப்பில் இவைகளின் பாத்திரம் என்ன என்பதையும் இது பேசுகிறது. இந்த நூலை படித்து முடிக்கையில் சாதியை நம் தலைமுறையிலேயே ஒழித்துவிடலாம் என்ற அதீத நம்பிக்கை தென்படுகிறது.

பீட்டர் துரைராஜ்

1 comments

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.