காந்தி படுகொலை வழக்கு விசாரணையின்போது, காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சே கொடுத்த வாக்குமூலத்தை பள்ளிப் பாடத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது இந்து மகா சபை.
நாதுராம் கோட்சே-வின் மரண நாளை வலதுசாரி அமைப்பான இந்து மகா சபை கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடியது. காந்தி படுகொலை குற்றவாளியான கோட்சே, அம்பாலா சிறையில் 1949-ஆம் ஆண்டு நவம்பர் 15-ஆம் நாள் தூக்கிலிடப்பட்டார்.
இந்து மகா சபையை உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை கோட்சே மற்றும் காந்தி படுகொலையில் மற்றொரு குற்றவாளியான நாராயண் ஆப்தே ஆகியோரின் படங்களுக்கு ஆரத்தி எடுத்து வணங்கினர்.
இந்து மகாசபையின் தேசிய துணை தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சொல்வதுபோல, ‘இந்திய சுதந்திரத்துக்குப் பாடுபட்ட இவர்களின் பங்களிப்பு மறக்கடிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
“நாங்கள் ஒரு கோரிக்கை மனுவை மத்திய பிரதேச முதலமைச்சர், மாவட்ட நிர்வாகத்துக்கு அளித்திருக்கிறோம். கோட்சே-வின் வாக்குமூலத்தை பள்ளிப்பாடத்தில் சேர்க்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை” என்றார் பரத்வாஜ்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கம் கோட்சேவின் வாக்குமூலத்தை வெளியிடவில்லை எனவும் குறைபட்டுக்கொண்டார் அவர்.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருந்த, 2017 நவம்பர் 15ல் கோட்சேவின் கழுத்தளவு சிலையை தனது அலுவலகத்தில் நிருவியது இந்து மகாசபை. நாடு முழுவதும் கடுமையான கண்டனங்கள் எழுந்தநிலையில், மாவட்ட நிர்வாகம் அதை நீக்கியது.
“மாவட்ட நிர்வாகம் எடுத்துச் சென்ற கழுத்தளவு சிலையை திரும்பத் தர ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருக்கிறோம்” என்கிறார் பரத்வாஜ்.
வெள்ளிக்கிழமை நடந்த இந்தக் கொண்டாட்டங்களுக்கு ம.பி. காங்கிரஸ் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
“இந்த நிகழ்ச்சி வன்முறையைக் கொண்டாடியுள்ளது. இது கண்டனத்துக்குரியது. இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையற்றவர்கள் இவர்கள். நாட்டில் உச்சநீதிமன்றம் இருக்கும்போது பிரிட்டீஷ் ராணியிடம் மன்னிப்பு மனுவை தானே அனுப்பியவர் கோட்சே” என காங்கிரஸ் ஊடக பிரிவைச் சேர்ந்த பூபேந்திர குப்தா கண்டித்துள்ளார்.