முருகானந்தம் ராமசாமி
நான் சிலகாலம் முன்புவரை பிராமணீயம் என்றே சுட்டி வந்தேன்.. நவீீன ஜனநாயக சமூகப்ரக்ஞைக்கு எதிர்திசையில் இயங்கும் ஆதிக்க கருத்தியல் என்பதால் அதை கருத்தியல் ரீதியாக அப்படிச்சுட்டினேன். இந்திய சமூகவரலாற்றில் பிராமணீயத்தின் தடத்தை கருப்பு வெள்ளையாக அன்றி டி. டி. கோசாம்பி, கெ. தாமோதரன், டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன், டாக்டர். பி. ஆர். அம்பேத்கர், தேவிப்ரசாத் சட்டோபாத்யாய, ஆகிய அறிஞர்களை வாசித்த பின் பெற்ற தத்துவார்த்த பின்புலமும் எனது கண்டடைதலுக்கு உண்டு.
சிறுகுழுவாக தங்கள் நேரடி பங்களிப்பின்றி அதிகாரத்தை கையகப்படுத்தி அதை நிலைநிறுத்திக்கொள்ளும் யுக்திகளை பொதுவாக பிராமணீயம் எனக்கொள்ளலாம். எதிர்மறையான சூழல்களில் தங்களை வெளிப்படுத்தாமல் அதிகாரமையங்களில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளும் காலத்தில் அதன் இயங்குமுறையும், நேரடி அதிகாரத்தை அடைந்தபின் அது தன்னை முன்வைத்துக்கொள்ளும் முறையும் இரு துருவங்களைப்போன்றவை. அது குரூரமானதாகவும் அடிப்படைமனித இயல்புகளற்றதுமாவும் ஆகிறது. அப்போது அது தனது அசலான அத்தனை குறளிவித்தைகளையும் காட்டும்.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபின் அந்த அப்பட்டமான குரூரங்கள் பெருமிதமாக வெளிப்படுகின்றன. அதை ஒரு புள்ளியில் உணர்ந்த பின் அதை பார்ப்பனீயம் என்றே சுட்டுகிறேன். இந்தச் சொல்லாடல் அதன் இயங்குமுறைகளை ஒட்டி நான் தேர்வு செய்து கொண்டது/ கொள்ள வேண்டியது. இது தனிநபர்களை குறிப்பதன்று. எப்போதும்போல பிராமணர்களில் தனிநபர்களை அவர்களில் மெய்யான நவீன ஜனநாயகப் பண்புடையவர்களை உள்ளபடியே அணுகுகிறேன்.
பிராமணர்களில் மட்டும்தான் சாதிவெறி இருக்கிறதா? இடைச்சாதியினரிடம் இல்லையா? என்கிற கேள்விகளுக்கு திட்டவட்டமான பதில் ஆம்.. இருக்கிறது. ஏன் தலித்களில்கூட கணிசமானவர்களிடம் இருக்கிறது. ஆனால், அவற்றை முற்றிலும் அடையாளப்பெருமிதம்/ கும்பல் உளவியல்/ தொல்குடி வேர்களைத்தேடும் உளவியல் என்றே வகைப்படுத்த முடியும். அது எந்த மோதலையும் ஒரு இனக்குழு மனநிலையில் நேரடியாகவே நிகழ்த்தும். அதன் எதிர்விளைவுகளை அங்ஙனமே எதிர்கொள்ளும்.
மாறாக பார்ப்பன சாதிவெறி ஒருங்கமைக்கப்பட்ட அதிகாரக் கருத்தியல், அதன் இயங்குமுறை எளிய அரசியலால் மேம்போக்கில் புரிந்து கொள்ள முடியாதது. ஒரு இடைநிலைச்சாதி வெறி ஆவேசமாக சுலபமாக புலப்பாட்டில் அறிய நிகழ்ந்துவிடக்கூடியது; பார்ப்பனீயம் அப்படியல்ல. அதன் குரூரமும் இதர சாதிவெறிகளும் ஒரு போதும் ஒன்றல்ல.
இடைச்சாதிகளின் மேல்நிலையாக்க மனோபாவம் இயல்பாக பார்ப்பனீயத்தை நோக்கி நகரக்கூடியது. எனவே, இடைச்சாதியினரில் அதிகாரம் பெறுபவர்களில் மிகச்சிலரே பார்பனீயத்தின் சுற்றுப்பாதைக்குள் செல்லாமல் அதனுடன் மூர்க்கமாக போரிடுகிறார்கள். அவர்களே பார்ப்பனீயத்தை புறங்கையால் கையாளும் லாவகத்தை பெற்றிருக்கிறார்கள்.
அவர்கள் எல்லாக் காலத்திலும் பார்ப்பன கருத்தியல் இயந்திரங்களால் ஆளுமைக் கொலை செய்யப்படுவார்கள். ஊழல்வாதிகளாக சித்தரிக்கப்படுவார்கள். உலகில் ஊழலின்றி அதிகார அரசியலே இல்லை என்கிற வெகுசாதாரணமான உண்மையைக்கூட உணரவிடாமல் தொடர்ந்து ஊதுவார்கள். இன்னொரு பிரம்மாண்ட உண்மை உலக வரலாற்றில் துல்லியமாக ஒருங்கமைக்கப்பட்ட ஊழல், அதிகார கட்டமைப்பு பார்ப்பனீயம். இதனை வெறும் இடைநிலைச்சாதியின் அடையாள அரசியலோடு இணை வைப்பது அபத்தம்..
சமூகநீதி அரசியலை சாதி அரசியலாக சுருக்கிப்பேசும் அயோக்யத்தனத்தின் பிறப்பிடம் பார்ப்பனீய மனங்கள். இந்தியாவின் உயர்கல்விப்பீடங்கள் இந்த விஷவிருட்சங்கள் செழித்த கானகங்கள். இவற்றுள் சென்று மீண்டுவரும் யுக்தி பாம்புக்கு இரையாகாமல் பரமபத விளையாட்டில் மீள்வதற்கு ஒப்பானது. ஏனெனில், அங்கு முதலில் நிகழ்வது உளவியல் தாக்குதல். முதிரா இளம்பருவத்தில் அதை எதிர்கொள்வது எளிதானதல்ல. உங்கள் தற்கொலைத்தடுப்பு உளவியல் ஆலோசனை மையங்களை தற்காலிகமாக சாத்துங்கள்.. அதற்கான இடமோ நேரமோ அல்ல இது. சமூக நீதி அரசியல் கல்வியே இதற்கான மருந்து.
அந்தக்கும்பல் அதை சாதி அரசியல் என்று சொல்லும். காரணம் அதுவே அதற்கு பீதிதரும். பேதியை உண்டாக்கும். காமராஜரும்,கருணாநிதியும், லாலுப்ராசாத்தும்,சரத்பவாரும் அதைத்தான் அந்தக் கூடாரத்திற்கு தந்தார்கள். தருகிறார்கள்.
நவ பார்ப்பனீயத்தை எதிர்கொள்ளும் யுக்தியே அடுத்தகட்ட இந்திய அதிகார அரசியலின் சவால்.. பாத்திமா லத்தீப்கள் தங்கள் மரணத்தின் மூலம் நமக்கு சொல்லிச் செல்லும் செய்தி அதுதான்..
அந்தத் தங்கைக்கு அஞ்சலி..!
முருகானந்தம் ராமசாமி, அரசியல் செயல்பாட்டாளர்.