இலியாஸ் முகமது ரஃபியூதீன்
‘மன அழுத்தம் காரணமாக தற்கொலை நடக்கிறது; Depression can be cured. என்னிடம் பேசலாம்’ என்ற வாக்கியங்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. அகக் காரணங்களை சரிசெய்து விடலாம். புறக்காரணிகளை என்ன செய்ய முடியும்?
ஃபாத்திமா நம்மிடம் பேசியிருக்கலாம் என்று கூறும் ஐஐடி நண்பர்களின் பதிவுகளைப் பார்த்தேன். பேசியிருந்தால் என்ன செய்திருப்பார்கள்? ‘இன்னும் ஒரு செமஸ்டர் தான். பொறுத்துக் கொள்’ என்று சொல்லியிருப்பார்கள். பாத்திமாவின் வேதனை நிச்சயம் புரிந்திருக்காது.
‘எங்கே முக்காடு அணிந்தால் இஸ்லாமிய பெண் என்ற அடிப்படையில் தொல்லைக்கு உட்பாடுவாளோ என்று அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய? அவள் பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே’ என்று அழுகிறார் ஃபாத்திமாவின் தாய். இந்தப் பிரச்சனையை எப்படி சரிசெய்வது?

நாங்கள் யாரும் லாயக்கற்றவர்கள் கிடையாது. ஃபாத்திமா நுழைவுத் தேர்வுகளில் முதலிடம் பெற்றவர் எனக் கூறுகிறார்கள். பாயல் தாத்வி மகப்பேறு மருத்துவத்தில் முதுகலை படித்து வந்தவர். “The value of a man was reduced to his immediate identity and nearest possibility. To a vote. To a number. To a thing. Never was a man treated as a mind” என்ற மாபெரும் உண்மையைத் தனது இறுதி கடிதத்தில் எழுதினார் ரோஹித் வெமுலா. நஜீப் நன்றாகப் படித்து வந்த மாணவர். இப்படி இருந்தும், பட்டமா கிடைத்தது?
பெரும்பான்மை இந்துக்களே, பார்ப்பனியத்த்திற்கு வளைந்து கொடுக்கும் இந்து அடையாளம் கொண்ட நாத்திகர்களே.. உங்கள் பெரும்பான்மையின் கள்ள மௌனத்தால் தான், நாங்கள் தூக்கில் தொங்க விடப்படுகிறோம்; காணாமல் ஆக்கப்படுகிறோம்; உங்கள் பெரும்பான்மையின் கூட்டு மனசாட்சியைத் திருப்தி படுத்தவே, எங்கள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன; உங்கள் பெரும்பான்மையின் பெயரால் எங்களைக் கொல்ல சட்டங்கள் இயற்றப்படுகின்றன.
உங்கள் பெற்றோரும் உறவினரும் இந்துத்துவத்திற்கு வாக்களிக்கும் போது, எங்கள் பெற்றோர் எங்கள் பிணங்களை வாங்க காத்துக் கொண்டிருக்கிறார்கள்; உங்கள் பெற்றோரோடு நீங்கள் செல்லமாக ஆத்திக – நாத்திக சண்டை போடும்போது, எங்கள் பெற்றோர் எங்கள் பிணங்களோடு சாலையில் அமர்ந்திருக்கிறார்கள்; போராடுகிறார்கள்; தோற்றுப் போய், செத்துப் போகிறார்கள்.
மிகுந்த வலியோடு இதனை எழுதுகிறேன். நேருக்கு நேராக, களத்தில் பார்ப்பனியத்தோடு சண்டையிடுபவர்களை நான் குறை சொல்லமாட்டேன். அவர்கள் மட்டுமே எங்களுக்குத் தோழர்கள்.
இலியாஸ் முகமது ரஃபியூதீன், ஊடகவியலாளர்.