ரபீக் ராஜா
“என் பெயரே அவர்களுக்குப் பிரச்சனை”
அன்பு மகள் ஃபாத்திமா லத்தீஃபின் இந்த விசும்பலை எளிதில் கடந்துவிடக்கூடாது. பாஜக இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்தபிறகு, “இனி இஸ்லாமியர்களின் வாழ்வியல் என்னவாகும்?” என்ற எனது பதிவுக்கு, மூத்த இடதுசாரித் தோழர் ஒருவர், “மற்றோர் எல்லாம் என்ன பெருவாழ்வு வாழ்ந்திடப் போகிறார்கள்?” என்று கேட்டு, பதிவின் வீரியத்தைப் பொதுமைப்படுத்திப் பலவீனமாக்கினார்.
“இஸ்லாமியர்களே அவர்களது முதல் குறி” என்றேன். “கல்புர்கி, கௌரி எல்லாம் முஸ்லீம்களா?” என்றார். அதற்கு, “இந்து அடிப்படைவாதத்தை எதிர்ப்பதனால் கொல்லப்படுவதும், இஸ்லாமியர்களாக இருப்பதனாலேயே இவர்கள் கொல்லப்படுவதும் ஒன்றா” என்றேன். விவாதம், நான் இஸ்லாமியச் சார்புடையவன் என்று முடிந்தது வழக்கம் போலவே.
இதேபோல, “வட மாநிலங்களில் நடைபெற்ற கொலைகள், கும்பல் படுகொலைகள் இல்லை; திட்டமிடப்பட்ட கொலைகள்” என்றேன். இல்லை, அவை கும்பல் கொலைகள் தாம் என்றனர் தாராளவாதிகள்.
இப்பொழுது இதனை ஏன் சொல்கிறேன் என்றால், இஸ்லாமிய அரசியல் விவகாரங்களை மற்ற அரசியல் விவகாரங்களைப் போல அணுக முடிகிற சூழல் இல்லை.
இஸ்லாமிய எதிர்ப்பின் மூலமே பாஜக, தன்னைத் தக்கவைக்கிறது ; வளர்கிறது. அதற்கான சமூக ஒப்புதலை முன்பைவிட அதிகமாக இப்போது பெற்றுவருகிறது. சட்டப்பூர்வமாகவும், சமூக வகையிலும் பாஜக தன் திட்டங்களுக்கு ஒப்புதல் பெற்று வளர்கிறது. அதற்கு அது எடுக்கும் முதல் பெரிய ஆயுதம் “இஸ்லாமியர்கள்” .
பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பும், பொதுச்சமூகத்தின் இயல்பும் மேற்சொன்னவற்றிற்குச் சான்றுகள். அன்பு மகள் ஃபாத்திமாவின் மரணம் விடும் எச்சரிக்கை.
ரோகித் வெமுலா போன்ற பல இளங்குருத்துகளை நாம் இழந்திருக்கிறோம். உயர்கல்வி நிறுவனங்களில் நிகழும் மரணங்கள் அக்கல்விமுறைமையின் தோல்வியையும், அங்கே நிலவுகிற பாரபட்சங்கள், ஒடுக்குமுறைகளையும் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன.
படிப்பை வியாபாரமாக்கும் அரசு, அதற்கான அனைத்து நெருக்கடிகளையும் மக்கள் மீது திணிக்கிறது. யூஜிசி யைக் கலைப்பது தொடங்கி, 3 ஆம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு வரை, படிப்பதற்கு நிறைய தடைகளை இந்த அரசுகள் போடுகின்றன. இவை விரிவாகப் பேசப்பட வேண்டும்.
ஃபாத்திமாவின் மரணத்தில் நாம் கூடுதலாக ஒன்றை ஆழமாகப் பேச வேண்டும். அது ஃபாத்திமாவின் மரணக் குறிப்பில் உள்ள, ” MY NAME ITSELF IS A PROBLEM TO THEM” என்பது.
இஸ்லாமியராக இருப்பதாலேயே, நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார் என்பதை அந்தப் பிஞ்சின் குறிப்புகள் சொல்கின்றன. இந்தச் சிக்கல் ஏறக்குறைய எல்லா இஸ்லாமியர்களுக்கும் இங்கே வலியாகத் திணிக்கப்படுகிறது.
இந்த இஸ்லாமிய வெறுப்பை, எல்லா நேரங்களிலும் பாஜக வெளிப்படையாகவும், பிற கட்சிகள் அவ்வப்போதும், முற்போக்கு ஆற்றல்களும் சில நேரங்களிலும் வெளிப்படுத்துகின்றன. அதற்கு இந்துப் பெரும்பான்மை வாக்கு வங்கியும், இஸ்லாமியர்களை வாக்குவங்கிகளாக மட்டும் பார்ப்பதும் காரணமாகின்றன.
இஸ்லாமியர்கள் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் சம்பவங்களுக்கு, எல்லாத் தரப்பிலிருந்தும் கிட்டத்தட்ட உடனடியாக ஒரே மாதிரியான எதிர்வினை வந்துவிடுகிற இந்த நாட்டில், இஸ்லாமியர்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக, நின்று நிதானித்துக்கூட ஒருமித்த ஆதரவு வருவதில்லை. அதற்குக் காரணம், உலகளாவிய இஸ்லாமியத் தீவிரவாதக் கட்டமைப்பை நம்புவது/ஏற்பது.
இத்தகைய மரணங்களின் போது வெளிப்படுகிற பரிதாப உணர்ச்சியை, “அரசியலாக” மாற்றும் அரசியல் இங்கே பெரிதாக இல்லை. எனவே, அவரவர் அரசியல் வகைமைக்கேற்ப எதிர்வினைகள் கிளம்பி, கிளம்பிய வேகத்திலேயே அமுங்கிப்போய் விடுகின்றன.
“தமிழகம் பாதுகாப்பானது என்று நம்பினோம்” என்ற ஃபாத்திமாவின் தாயின் குமுறல், தமிழகத்தில் மாறிவரும் அரசியல் போக்கைக் கோடிட்டுக்காட்டுகின்றது. பினராய் அரசு இதற்கு நீதி கேட்டு களமிறங்கப் போகிறதாம். கேரளக் கல்லூரி வளாக மோதல் கொலைகளும், ஹாதியா வழக்கும் நினைவுக்கு வருகின்றன.
கடந்த தேர்தலில், இஸ்லாமியர்களைக் களமிறக்காத கட்சிகள் ஒருபுறம், பாஜகவின் வாக்குறுதிகளைப் போன்ற காங்கிரசின் வாக்குறுதிகள் மறுபுறம், இடதுசாரிகளின் இஸ்லாமிய – இந்து வாக்குவங்கி அரசியல் இன்னொருபுறம் என, ஏதோவொரு வகையில் இந்த ‘இஸ்லாமோபோபியா” கிட்டதட்ட அனைவருக்கும் இருக்கிறது.
உயர்கல்வி நிறுவனங்களில் நிலவுகிற சாதியப் பாகுபாடுகளைப் போலவே, மதப் பாகுபாடும் அழுத்தமாகப் பேசப்படவேண்டும். ஃபாத்திமா மரணத்தை, உயர்கல்வி சிக்கல், வளாகச் சிக்கல், உளவியல் சிக்கல்களோடு மட்டும் பொருத்திவிட்டுப் போகாமல், நிலவுகிற இஸ்லாமிய வெறுப்பின் சிக்கலாகவும் பேசவேண்டும்.
ரபீக் ராஜா, அரசியல் செயல்பாட்டாளர்.