அ. குமரேசன்
- ரயில்வே ஃபுட் பிளாசா மேனேஜர்
- ட்ரெய்ன் கேட்டரிங் மேனேஜர்
- பேஸ் கிச்சன் மேனேஜர்
- ஸ்டோர் மேனேஜர்
-ஆகிய பணிகளுக்கு, பிளஸ் டூ படித்த, நாட்டில் எங்கே வேண்டுமானாலும் போய் வேலை செய்யத் தயாராக இருக்கிறவர்களிடமிருந்து விண்ணப்பங்கள வரவேற்கப்படுவதாக ஒரு விளம்பரம் ஆறு நாட்களுக்கு முன் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வந்திருக்கிறது.
முக்கியமான தகுதி, விண்ணப்பதாரர்கள் அகர்வால் வைஷ் சாதியைச் சேர்ந்தவர்களாக இருகக வேண்டும்.
தனியார்மயமாக்கப்பட்டு வரும் ரயில்வேயில் உணவு விநியோக காண்டிராக்ட் எடுத்துள்ள பிரந்தாவன் ஃபுட் பிராடக்ட்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் இது. நமக்கிருந்த பரபரப்புகளில் இதைக் கவனிக்கத் தவறியிருக்கிறோம்.
ஐஆர்சிடிசி நிர்வாகம் தலையிட்டு, இப்படியெல்லாம் சாதி அடிப்படையில் ஆளெடுக்கக்கூடாது என்றும், எந்தச் சாதி, பிரிவு, மதம், வட்டாரமானாலும் பொருத்தமானவர்களை நியமிக்குமாறும் கூறியிருககிறதாம். இந்த விளம்பரத்தைப் பத்திரிகைக்குக் கொடுத்ததற்காக நிறுவனத்தின் மனிதவளத்துறை மேலாளர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக காண்டிராக்டர் தெரிவித்திருக்கிறார். (செய்தி: இந்தியா டுடே)
மேற்படி விளம்பரத்திற்கு உடனடியாக சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அதுவே இந்த நடவடிக்கைகளுக்கு இட்டுச் சென்றது எனலாம். ஒருவேளை சமூக ஊடக விழிப்புணர்வாளர்கள் இதைக் கவனிக்காமல் அல்லது பெரிதுபடுத்தாமல் விட்டிருந்தால்?
எந்தச் சாதி, பிரிவு, மதம், வட்டாரமானாலும் பொருத்தமானவர்களை நியமிக்குமாறு ஐஆர்சிடிசி கூறிய அளவில் சரிதான். ஆனால், பிரைவேட் என்று போய்விட்டதால், அனைத்துச் சமூகத்தினருக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்தும் இட ஒதுககீடு, ரயிலின் சமையலறைப் பெட்டியிலிருந்த தானிய மூட்டை திருடப்பட்டது போல, துடைத்தழிக்கப்பட்டுவிட்டதே?
முடிந்துபோன ஒரு நிகழ்வின் செய்தியை எதற்காக நினைவூட்ட வேண்டும்? முடிந்து போய்விட்டதா என்ற கேள்வி முடியாமல் தொடர்வதால்தான். தனியார்மய எதிர்ப்பு நாட்டின் பொதுச்சொத்தை யாரோ கொள்ளைகொண்டு போவதைத் தடுப்பதற்கு மட்டுமேயல்ல, சமூகநீதிப் பொது அறம் கடத்தப்படாமல் காப்பதற்கே என நினைவூட்டத்தான்.
அ. குமரேசன் மூத்த பத்திரிகையாளர்.