சூழலியல் செயல்பாட்டாளர்கள் -1
இந்திய சுதந்திரத்துக்கு முன், குறு நில மன்னர்களாலும் ஆங்கிலேய அதிகாரிகளாலும் நம் காடுகளில் இருந்த சிங்கம், புலி, சிறுத்தை, யானை போன்ற பெரிய விலங்குகள் வேட்டையாடி அழித்தொழிக்கப்பட்டன. அதிருஷ்டவசமாக, அதில் சிலர் தங்கள் தவறுகளை உணர்ந்து இறுதி சமயத்தில் தாங்கள் அழித்த வன உயிர்களின் காப்பாளர்களாகவும் மாறினர். உதாரணத்துக்கு குஜராத்தின் சிங்கங்களை வேட்டையாடி மகிழ்ந்த ஜுனாகாரின் நவாப், இதே ரீதியில் போனால் அவை அழிவை சந்திக்கும் என உணர்ந்து அவற்றை ‘கிர்’ வனத்தில் பாதுகாத்தார். இவரையும் விடவும் பிரபல வேட்டையாடியாக இன்னும் விளங்குபவர், அதிகம் விற்பனையாகவும் வேட்டையாடி இலக்கியம் எழுதிய ஜிம் கார்பெட் !
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கு வந்த ஜிம் கார்பெட்டின் குடும்பம், இப்போதைய உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிதாலில் பிறந்தவர். இளம் வயதிலேயே தந்தையை இழந்த ஜிம் கார்பெட்டின் கவனம் இயற்கையின் மீது திரும்பியது. பின்னாளில் பிரபலமான வேட்டையாடியாகவும் எழுத்தாளராகவும் சூழலியல் பாதுகாவலராகவும் அறியப்பட காரணமாக இருந்தது!
ரயில்வேயில் பணியாற்றிய காரணத்தால் இந்தியாவில் பல பகுதிகளுக்கு பயணப்பட்டார் ஜிம் கார்பெட் . இதில் பஞ்சாப், பீகார் மாநிலங்களும் அடங்கும். அப்போது குமாயூன், கர்வால் ஆகிய பகுதிகள் கிராம மக்களை கொன்று உண்ணும் புலிகள், சிறுத்தைகளை வேட்டையாடும்படி கார்பெட்டுக்கு வேண்டுகோள் விடுத்தனர் மக்கள். வேட்டையாடிய களம் இறங்கியவர் 30 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட விலங்குகளை கொன்றார்.
வேட்டையாடுதல் அந்தக் காலக்கட்டத்தில் குற்றமாக்கப்படவில்லை. ஆனபோதும் விலங்குகளை வேட்டையாடும் புலி, சிறுத்தை போன்ற மாமிச உண்ணிகள் ஏன் மக்களை கொல்கின்றன என்கிற கேள்விக்கு விடை தேடினார் கார்பெட்.
“மனிதர்கள் புலிகளின் இயற்கையான இரைகள் அல்ல. காயத்தின் காரணமாகவோ அல்லது வயது முதிர்வின் காரணமாகவோ காட்டு வாழும் விலங்குகளை வேட்டையாட முடியாமல், வேறு வழியின்றியே அவை மனிதர்களை கொன்று புசிக்கின்றன” என தனது நூல் ஒன்றில் எழுதியிருக்கிறார்.
குமாயூன் புலிகள், எனது இந்தியா உள்ளிட்ட ஜிம் கார்பெட் எழுதிய வேட்டை அனுபவ இலக்கியங்கள் (The Man Eating Leopard of Rudraprayag, My India, The Temple Tigers and More Man-Eaters of Kumaon) புலிகள், சிறுத்தைகள் குறித்த இவருடைய கருத்துக்கள் இவரை ஒரு வேட்டையாடி என்பதைக் கடந்து, காட்டு விலங்குகள் மீது எல்லையில்லா ஆர்வம் கொண்டிருந்தவர் என்பதைக் காட்டுகின்றன.
புலிகளை “பரந்த இதயம் கொண்ட பண்புக்கும் தைரியத்துக்கும் பெயர் போனவை.” என்றும் “சிறுத்தைகள் நேரில் கண்டிராத ஒருவரால் அதன் நிறத்தின் அழகையும் இந்திய காடுகளின் தெய்வீகமான மிகவும் அழகான விலங்கை அறியாதவர்கள்” என்றும் தனது படைப்பில் வர்ணித்திருப்பார் கார்பெட்.
1920களிலேயே இந்திய புலிகளை ஒளிப்பதிவு செய்யத் தொடங்கினார். இவர் எழுதிய 12க்கும் மேற்பட்ட வேட்டை இலக்கியங்கள், இந்திய வனங்களின் வளத்தை அறிந்துகொள்ள இன்றளவும் ஆவணங்களாகவும் உதவுகின்றன. இந்திய காட்டுயிர்கள் குறித்த பல சொற்பொழிகளையும் இவர் நிகழ்த்தியிருக்கிறார். குறிப்பாக குழந்தைகளுக்கு காட்டுயிர்கள் குறித்தும் அவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் சொல்லித்தந்தவர். பிரபலமான வேட்டையாடியாக இருந்து பிரபலமான சூழலியலாளராக அறியப்பட்டார் ஜிம் கார்பெட்.
இந்திய சுதந்திரத்துக்கு சில காலம் கழித்து 1955-ஆம் ஆண்டு தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தை விற்றுவிட்டு கென்யாவில் குடியேறினார் கார்பெட். அவர் வசித்த வீடு உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜிம் கார்பெட் அருங்காட்சியகமாகவும் அவருடைய சூழலியல் செயல்பாட்டை போற்றும் வகையில் உத்தரகாண்டின் ஹெய்லி தேசிய பூங்காவுக்கு, ‘ஜிம் கார்பெட்
தேசிய பூங்கா’ என பெயரிட்டு பெருமைபடுத்தியது இந்திய அரசு.
இந்திய வனங்களும் எப்படி நெருக்கமாக இருந்தரோ, அதுபோல இந்திய கிராமப்புற மக்களுடனும் கார்பெட் நெருக்கமான உறவை பேணினார். தான் வசித்த பகுதியில் இருந்த சோட்டி ஹால்தானி என்ற கிராமத்தை தத்தெடுத்து, அவர்களை வனவிலங்குகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற அந்த கிராமத்தைச் சுற்றிலும் மதில் சுவர் எழுப்பினார். 1925ல் கட்டப்பட்ட இந்த சுவர் இன்றும் மக்களை காக்கிறது. கார்பெட்டின் நினைவை அக்கிராம மக்கள் இன்றளவும் நினைவு கூறுகின்றனர்.
‘எனது இந்தியா’ என்ற நூலை ‘எனது இந்திய ஏழை நண்பர்களுக்கு சமர்பிக்கிறேன்…” என எழுதிய அவர், “இவர்கள் ஏழைகள், பட்டினியால் வாழும் லட்சக்கணக்கானவர் என அழைக்கப்படுகிறார்கள். இவர்களுடன்தான் இவர்களை நேசிக்கும் நானும் வாழ்ந்தேன். எனவே, என் மரியாதைக்குரிய ‘இந்தியாவின் ஏழை’ நண்பர்களுக்கு இந்த நூலை சமர்பிக்கிறேன்” என நெகிழ்வோடு குறிப்பிட்டிருக்கிறார் கார்பெட்.
ஜிம் கார்பெட் கென்யாவில் குடியேறிய பிறகு, ஆப்பிரிக்க காட்டுயிர்கள் குறித்து எழுதியதோடு, அத்தகைய சூழலிலேயே வாழ்ந்து மடிந்தார்; ஒரு முன்னோடி சூழலியல் பாதுகாவலராக..!
நன்றி: யாதும்