நூல் அறிமுகம் : தொ.பரமசிவன் நேர்காணல்கள்
பாளையங்கோட்டையில் வசித்து வரும் பண்பாட்டு ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவன் தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை. பெரியார் பார்வையில் அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கும் ஒரு வரலாற்று பொருள்முதல்வாதி என்று சொல்லலாம். பல்வேறு எண்ணவோட்டடம் கொண்டவர்களின் நன்மதிப்பை பெற்றவர். பொதுக் கருத்தை உருவாக்குவதில் அவரது பங்களிப்பு முக்கியமானது.இவரை பல்வேறு இதழ்களுக்காக, பல்வேறு ஆளுமைகள் நேர்காணல் செய்துவந்துள்ளனர். அதன் தொகுப்புதான் இந்த நூல்.
விகடன் தடம், தீராநதி, தலித் முரசு, மாற்றுவெளி, சண்டே இண்டியன், கீற்று போன்ற இதழ்களில் வெளியான நேர்காணல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. ஷோபா சக்தி, அ.முத்துலிங்கம், ஆர். ஆர். சீனிவாசன், அப்பணசாமி, சங்கர இராமசுப்பிரமணியன், ச. தமிழ்சசெல்வன், மணா, வ.கீதா உள்ளிட்டோர் இவரை கேள்வி கேட்டுள்ளனர். பரந்துபட்ட கேள்விகளுக்கு தொ.ப.விடையளித்துள்ளார். அவரது முழு பரிமாணமும் வாசகர்களுக்கு கிடைக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளில், பல்வேறு சமயங்களில் வெளிவந்துள்ள இந்த நேர்காணல்கள் மூலம் அவரது சிந்தனையில் ஒத்திசைவு இருப்பதை பார்க்கமுடியும்.
நான் அ.முத்துலிங்கத்தின் தீவிர ரசிகன். தொ. பரமசிவன் கனடா சென்றபோது அவர் தமிழினி இதழுக்காக எடுத்த நேர்காணலான “இருட்டறையில் வெளிச்சம் வரவேண்டும்” என்ற தலைப்பிலான கட்டுரையைத்தான் முதலில் படித்தேன். தொ.ப. பேசியதை விவரித்து, அ.முத்துலிங்கம் அவருக்கே உரிய எள்ளலோடு தொ.பரமசிவத்தின் எளிமையை (இரண்டு சட்டை எடுத்த கதை) செல்லுகிறார். ‘ஆயிரம் ஒட்டுப்போட்ட ஒரு பிச்சைக்காரனுடைய உடையை நினைவூட்டும் வகையில் இந்த உரையாடல் அமைந்தது’ என்கிறார்.
‘ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது மக்கள் விரோதச் சித்தாந்தம்’ என்ற மணா எடுத்த நேர்காணலில் சாதிகுறித்து பேசுகிறார். ‘பிராமணீயம் ஒரு ஒடுக்குமுறை கருத்தியல்’ என்கிறார்; ‘சாதி ஒழிப்பு சாத்தியமில்லை, கரைப்புதான் சாத்தியம்’ என்கிறார். மாரியம்மன் திருவிழாவோடு மழையை தொடர்புபடுத்துகிறார். ரசிக்கத்தக்க வகையில் இவரது பதில்கள் உள்ளன.
‘தீட்டு’ என்பதை எப்படி பார்ப்பனர்களும், பார்ப்பனர் அல்லாதவர்களும் வேறுபடுத்துகிறார்கள் என்பது நம்மை யோசிக்க வைக்கிறது. அவ்வாறே தாய்மாமனுக்கு மரியாதை என்பது திராவிடமொழி பேசுவோரின் பொதுவான குணம் என்கிறார். (சாதி, வர்ணம், நடைமுறை – தமிழ் ஒப்புரவு நேர்காணல்) இது தாய்வழிச்சமூகத்தின் தொடர்ச்சி என்கிறார். இந்த நூல் ஒரு ஆய்வுக் கட்டுரையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், இவர் போகிற போக்கில் சொல்லுகிற பல செய்திகள் ஆழமான விவாதங்களை எதிர்பார்ப்பவை. தொ.பரமசிவத்தின் பன்முகம் இந்த நூலில் வெளியாகிறது. ஏற்கெனவே ‘செவ்வி’ என்ற பெயரில் வெளியான நேர்காணல்களோடு வேறுசில நேர்காணல்களும் சேர்க்கப்பட்டு இந்த நூல் வெளிவந்துள்ளது.
தொ.ப. அசராமல் உரையாடுகிறார். இவர் பேசாத பொருள் இல்லை. கல்விமுறை பற்றி பேசுகிறார். தத்துவம் பற்றி பேசுகிறார் (தூய்மை வாதம் ஒரு எல்லைக்கு மேல் பாசிசமாகத்தான் முடியும்); கால்டுவெல் இடையான்குடியையும், இலண்டனில் அவருடைய பிறந்த ஊரான Shepardyard -ஐயும் ஒப்பிடுகிறார். ‘மிளகு’ போல உறைப்பு உடையது, காயாக இருக்கிறது என்பதினாலேயே 13 ம் நூற்றாண்டில் வெளிநாட்டிலிருந்து அறிமுகமானதற்கு ‘மிளாகாய்’ என்று பெயரிட்டோம் (மொழிக் கல்வியும் மதிப்பீடுகளும்)என்கிறார். சமணமும் புத்தமும் ஏன் தமிழ்நாட்டில் வெற்றிபெறவில்லை என்று சொல்லுகிறார். திருநெல்வேலியில் சாதியத்தை நிலைநிறுத்த வெள்ளாளர் பட்டபாட்டை சொல்லுகிறார்; அதன் எதிர்வினையை சொல்லுகிறார்.
‘அம்பேத்கரை அவர்களால்(பிராமணீயத்தால்) உட்செரிக்க முடிந்தால் கூட பெரியாரை ஒருபோதும் அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது’ என்று விவாதத்தை தூண்டுகிறார். இது ஒரு வெற்றி பெற்ற நூல்.’கோவணத்தில் இடி விழுந்தமாதிரி’ என்று சொல்லுவார்கள். அது போல இவருடைய பதில்கள் சற்றும் எதிர்பார்க்க முடியாத கோணத்தில் இருக்கின்றன.
காலச்சுவடு பதிப்பகம்/ஜனவரி 2019/158 பக்கம்/ரூ.175.
– பீட்டர் துரைராஜ்.