சமீபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கன்னையா குமார், மங்களூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாணவி ஒருவர் ‘ஒரே இந்தியா, ஒற்றை தன்மையுடன் நாடு ஏன் இருக்கக்கூடாது; அதில் என்ன தவறு” என கேள்வி கேட்டார். இந்தக் கேள்விக்கு கன்னையா குமார் அளித்த பதில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.
‘ஜெய் ஸ்ரீராம்’ சொல்லுங்கள் என ஆரம்பித்து பேசிய, அந்த மாணவிக்கு கன்னையா குமார் அளித்த பதில்…
ஏதேனும் ஒற்றை அமைப்புக்கு நீங்கள் ஏன் ஆதரவு தரக்கூடாது என்பது உங்கள் கேள்வி. ஆனால் பாருங்கள், என்னுடைய பிறப்பு இரண்டு நபர்களின் இணைவால் நிகழ்ந்தது. என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமணம் நடந்திருக்காவிட்டால் நான் பிறந்திருக்கவே மாட்டேன். என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் திருமணம் நடந்தது, அப்புறம், திருமணம் ஆன பிறகு அவர்கள் என்ன செய்திருக்க வேண்டுமோ அதைச் செய்ததால் நான் பிறந்தேன். – இரண்டு நபர்களின் இணைவால் என் பிறப்பு நிகழ்ந்தது. ஆக, அதில் இருவரின் இணைவு இருந்தது.
இப்போது ஒன் நேஷன் – ஒரே தேசம் என்ற விஷயத்துக்கு வருவோம். ஒரே தேசத்துக்கு ஏன் ஆதரவு தரவில்லை என்று கேட்கிறீர்கள். ஆனால், நாடு ஒன்றாகத்தானே இருக்கிறது! இந்தியா என்பது ஒன்றே. இதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால், இந்த ஒரே தேசத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசமைப்புச்சட்டத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட விதிகள் உள்ளன. அந்த அரசமைப்பில் 300க்கும் மேற்பட்ட ஆர்டிகிள்கள் உண்டு.
நீங்கள் சொல்கிறீர்களே ஒன் நேஷன் என்று… அந்த ஒரே தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்றம் இருக்கிறதே, அதில் இரண்டு அவைகள் உள்ளன – மக்களவை, மாநிலங்களவை. அப்புறம், அதற்குத் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்களே, அவர்களும் ஒரே ஒரு நபர் அல்ல. அதற்கு 545 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுச் செல்கிறார்கள்.
நம்முடைய ஒன்னெஸ் – ஒருமைப்பாடு என்கிறோமே அது உண்மையில் பன்மைத்துவத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. அதில் டைவர்சிடி இருக்கிறது.
நீங்கள் ஜெய் ஸ்ரீராம் பற்றிக் கேட்டீர்கள். நீங்கள் ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள், அதற்கு உங்கள் சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள், அல்லது ஜெய் ஹனுமான் சொல்லுங்கள், உங்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ சொல்லுங்கள் – இதைச் சொல்வதற்கான சுதந்திரத்தை நமக்கு நம்முடைய அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிறது. அதனால் நான் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், அவ்வப்போது ஜெய் அரசமைப்புச் சட்டம் என்று சொல்லுங்கள். ஏனென்றால், உங்களுக்கு கோஷமிடும் சுதந்திரம் கொடுத்தது அதுதான்.
அப்புறம், என்னுடைய விஷயத்துக்கு வருவோம். உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் – நான் மிதிலையில் பிறந்தவன். என்னுடைய வீடு – நான் பிறந்த இடம் எந்த மாவட்டத்தில் வருகிறதோ – அந்த மாவட்டம் பெகுசராய். அந்த மிதிலை பெகுசராயில்தான் இருக்கிறது. ஒருவேளை நீங்கள் எங்கள் பகுதிக்கு வந்தால், நீங்கள் மிகவும் வியப்பதற்குரிய விஷயங்களைப் பார்ப்பீர்கள்.
எங்கள் ஊரில் ஆண்டுதோறும் இந்தி ஆக்ரஹண் மாதத்தில் (நவம்பர்-டிசம்பர்) அயோத்தியாவிலிருந்து மணமகன் ஊர்வலம் வரும். மணமகன்களாக இளைஞர்கள் வருவார்கள். அதில் ராம-லட்சுமணர்கள் மணமகன்களாக இருப்பார்கள். எங்கல் ஊரில் ராம்-ஜானகி கோயில் இருக்கிறது. அங்கே ஆண்டுதோறும் ராமன்-சீதை திருமணம் நடைபெறும். இதில் சுவையான ஒரு விஷயம் சொல்ல வேண்டும். அது என்னவென்றால், மிதிலாவின் மக்கள் ராமனைத் திட்டுவார்கள். ஏன் தெரியுமா? ஏனென்றால், மிதிலை ராமனுக்கு மாமனார் வீடு. எனவே, இந்த உரிமையின்கீழ் அவர்கள் ராமனைக் கேலி செய்து திட்டுவார்கள். நமது பண்பாட்டின்படி திருமணம் நடைபெறும்போது, மணமகன் தரப்பு ஊர்வலம் வரும்போது மணமகள் தரப்பிலிருந்து கேலியாகத் திட்டுவது வழக்கம். ஆக, எந்த ராமனை மக்கள் கடவுளாக வணங்குகிறார்களோ அந்த ராமனை வரவேற்கும் விதமாகத் திட்டுகிற வியப்பான ஒரு விஷயத்தை எங்கள் ஊருக்கு வந்தால் நீங்கள் பார்ப்பீர்கள். இது எங்கள் பாரம்பரியப் பண்பாட்டின் ஓர் அங்கம்.
நாங்கள் எந்தப் பண்பாட்டின் கீழ் வளர்ந்தோமோ அங்கே எந்தவொரு கடவுளையும் தனியாகப் பார்க்க முடியாது. நீங்கள் குறிப்பிட்டீர்களே ஒருமை என்று – கடவுளை ஒருமையில் பார்க்க முடியாது. ராமருடன் எப்போதும் சீதை இருப்பார், கிருஷ்ணனுடன் ராதையும் சேர்த்தே நினைக்கப்படுவார். இதுதான் எங்கள் பாரம்பரியம்.
நீங்கள் யூத் என்றீர்கள். நான் பிஎச்டி முடித்து விட்டேன். நீங்களும் பிஎச்டி செய்வீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை நீங்கள் பிஎச்டி செய்வீர்கள் என்றால், உங்களுக்கு என்னுடைய வேண்டுகோள் ஒன்று உண்டு – ராமாயணத்தின் மீதே ஆராய்ச்சி செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லிக் கொள்கிறேன் – இந்தியாவில் குறைந்தது 300க்கும் மேற்பட்ட ராமாயணங்கள் உண்டு. ஆமாம், முந்நூறுக்கும் அதிகம்.
நான் ஒருமுறை இமாச்சலப் பிரதேசம் சென்றிருந்தேன். அங்கே திரிலோகநாதர் கோயிலுக்குப் போயிருந்தேன். இன்னொரு விஷயம் உங்களுக்குச் சொல்ல வேண்டும் – இந்த நாட்டை குறுக்கும் நெடுக்குமாக சுற்றிப் பாருங்கள். நீங்கள் கற்பனைகூட செய்ய முடியாத அளவுக்கு இந்த நாடு எவ்வளவு பெருமைகளைக் கொண்டது என்பதைக் காண்பீர்கள். இந்த நாட்டின் முன்னால் உங்களை நீங்கள் சிறு துரும்பாக உணரும் தருணங்களை அடிக்கடி சந்திக்க நேரும். நீங்கள் திரிலோகநாதர் கோயிலுக்குப் போனால், அங்கே பகவான் புத்தரின் சிலையைக் காண்பீர்கள். அந்த புத்தரின் சிலைக்கு மேலே சிவபெருமானின் சிலையைக் காண்பீர்கள். ஆமாம், புத்தரின் தலைக்கு மேலே சிவன் சிலை. அந்தக் கோயிலில் முதலில் இந்து மதப் பூசாரிகள் வந்து பூஜை செய்து விட்டுப் போகிறார்கள். பிறகு புத்த பிக்குகள் வந்து வணங்கிவிட்டுச் செல்வார்கள். இது இந்தியாவின் தனிச்சிறப்பு.
அங்கே – அதாவது லாஹோலில் – லாஹோல் என்னும் மாவட்டத்தைப் பற்றிச் சொல்கிறேன். (நான் சொல்வதில் ஏதேனும் பிழை இருந்தால் திருத்தவும்.) அந்தக் கோயில் அமைந்திருக்கிற அந்த மாவட்டத்தில் லாஹோலி மொழி பேசப்படுகிறது. அங்கே உலவுகிற ராமாயணத்தில் – அதாவது லாஹோலீ ராமாயணத்தில், ராவணன் சீதையைக் கடத்திச் செல்லவில்லை. மாறாக, சீதையின் தந்தைதான் ராவணன். உண்மையில், அந்த ராமாயணத்தின்படி, ராமன் சீதையைக் காதல் மணம் புரிந்து கொள்கிறான். அதன் காரணமாகக் கோபம் கொண்ட ராவணனுக்கும் ராமனுக்கும் போர் நடக்கிறது.
உங்கள் மூளையில் யார் எதற்காக இதுபோன்ற விஷயங்களை எல்லாம் திணித்து விட்டார்களோ தெரியாது… உஙகளுக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இந்த நாட்டில் பிறந்த எவருக்கும் இதைவிடப் பெருமை தரக்கூடிய விஷயம் இருக்க முடியாது. அது என்னவென்றால், நீங்கள் இமாச்சலம் சென்றால் ஸ்விட்சர்லாந்தில் இருப்பதுபோல உணர முடியும். நீங்கள் மங்களூர் அல்லது கோவா கடற்கரையில் படுத்திருந்தால், மியாமி கடற்கரையில் இருப்பது போல உணர முடியும். இந்த நாட்டின் பரந்த மைதானங்களில் நடக்கும்போது அமெரிக்காவின் கிரீன் மைதானத்தில் நடப்பது போல உணரலாம். நீங்கள் தெற்கின் பீடபூமிகளுக்குச் சுற்றப் போவீர்கள் என்றால் – குறிப்பாக சோட்டா நாக்புர் பகுதிக்குச் சென்றால் ஏராளமான கனிம வளங்களைக் காண்பீர்கள்.
உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்றுதான் – இந்த நாடு உங்களுடையது, உங்களுடைய தாய் உங்களுக்கு எப்படிச் சொந்தமோ அப்படி இந்த நாடும் சொந்தம். நீங்கள் உங்கள் தாயை விரும்புகிறீர்கள் என்றால் அது உங்கள் தனிப்பட்ட விஷயம். நீங்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள்… அப்போது ஏதேனுமொரு கொடியை ஏந்திக்கொண்டு, ஏதேனுமொரு கோஷம் எழுப்பிக் கொண்டு வருகிறார்கள்… அது எந்த கோஷமாகவும் இருக்கட்டும் – இன்குலாப் ஜிந்தாபாத் ஆக இருக்கட்டும், அல்லது ஜெய் ஸ்ரீராமாக இருக்கட்டும். அவர்கள் கோஷம் போட்டுக்கொண்டு கொடியை ஆட்டிக்கொண்டு உங்களிடம் வந்து “நீ உன் அம்மாவை நேசிக்கிறாய் என்றால், அதை நிரூபித்துக் காட்டு பார்க்கலாம்” என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்? அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?
இந்த நாடு நம்முடையது. இதை நாங்கள் நேசிக்கிறோம். எங்களைப் பொறுத்தவரை – இந்த விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் – எங்களைப் பொறுத்தவரை, நேசம் என்பது கண்காட்சியில் வைப்பது போல விளம்பரப்படுத்தப்படும் விஷயம் அல்ல. நாங்கள் நாட்டை நேசிக்கிறோம், அந்த நேசத்தை எங்கள் நெஞ்சங்களில் சுமந்து கொண்டு உலவுகிறோம்.
கன்னைய குமாரின் உரை தமிழாக்கம் : ஷாஜகான்
வீடியோ: நன்றி தீக்கதிர்.