அன்புள்ள ஜெயமோகன்..
க்ரீஷ் கர்னாட்டுக்கு நீங்கள் எழுதிய அஞ்சலி கட்டுரையை படிக்க நேர்ந்தது.. நீங்கள் அவரின் நாகமண்டலா, ஹயவதனா ஆகிய இரண்டு மட்டுமே முழுமையான கலைப்படைப்புகள் என்கிறீர்கள்..
ஒரு ஆளுமையை உங்கள் அளவுகோலில் மதிப்பிடுவது உங்கள் உரிமைதான்.. ஆனால் இந்த அஞ்சலிக்கட்டுரை விஷமத்தனத்தின் முட்களுடன் இருப்பதால் இதை எழுத வேண்டியிருக்கிறது..
அவர் தகுதிக்கு மீறிய அங்கீகாரங்களைப்பெற்றார் என்றும் அதற்கு காங்கிரஸ் மேலிடத்துடன் அவருக்கிருந்த தொடர்புகளே காரணம் என்றும் விஷம் விதைக்கிறீர்கள்.. சங்பரிவாரங்களின் வகுப்புவாதத்திற்கு எதிராக வாழ்நாள் முழுவதும் குரல் எழுப்பி வந்த ஒருவரைப் பற்றி நீங்கள் இப்படி ஒரு கோணத்தை யாருக்கு எடுத்துக்கொடுக்கிறீர்கள்.?
அவரின் “துக்ளக்” நாடகம் நேருவை விமர்சித்தது என்பதையும், இந்திராகாந்தியின் நெருக்கடி நிலையை கடுமையாக எதிர்த்தவர் அவர் என்பதையும் வசதியாக மறந்துவிட்டு “காங்கிரஸ் மேலிடத்தின்” செல்லப்பிள்ளையாக அவரை சித்தரிப்பில் இருக்கும் வடிகட்டும் தன்மை சந்தேகமில்லாமல் உள்நோக்கம் கொண்டது.. தினத்தந்தியிடம் கடன்வாங்கி பிரயோகித்திருக்கும் அந்த “காங்கிரஸ் மேலிடம்” என்பது அதில் வந்த கன்னித்தீவுக்கு இணையான கற்பனைமிளிரும் உருவகம்..
ஆனால் ரொம்ப பழையது.. ஆனால் யாரும் கண்டிராதது. அவ்வளவுதான் மற்றபடி அவர் வகுப்புவாதத்தையும் பிற்போக்கு மதிப்பீடுகளையும் தனது வாழ்நாளின் இறுதிவரை எதிர்த்தவர் என்கிற இழையில் மட்டுமே காங்கிரஸோடு தத்துவார்த்த நெருக்கம் கொண்டிருப்பவர்.. மற்றபடி அவர் பெற்ற அங்கீகாரத்திற்கு முழுத்தகுதி கொண்டவர் என்றே ஒரு இலக்கிய வாசகனாகவும், காங்கிரஸ்காரனகவும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..
நீங்கள் கன்னட இலக்கிய முன்னோடிகளான சிவராம்காரந்த், யு.ஆர்.அனந்தமூர்த்தி, எஸ்.எல்.பைரப்பா ஆகியோருடன் ஒப்பிட்டு க்ரீஷின் தகுதிக்குறைவை சுட்டுகிறீர்கள்.. இது விஷமத்தனமானது.. காரணம் க்ரிஷ் கர்னாட் இயங்கியது மேற்சொன்னவர்கள் பிரதானமாக இயங்கிய நாவல் சிறுகதை போன்ற வடிவங்களில் அல்ல.. அவர் இயங்கியது ஒட்டு மொத்த இந்திய நவீன இலக்கியச்சூழலில் அரிதான நவீன நாடகம் என்கிற வடிவத்திற்குள். எனவே இந்த ஒப்பீடு நேர்மையற்றது.. இதன்பொருள் மேற்சொன்ன படைப்பாளிகள் மதிக்கத்தக்கவர்களல்ல என்கிற பொருளில் அல்ல.. பைரப்பாவிற்கு ஞானபீடம் விருது அளிக்கப்படாதது வருந்தத்தக்கதுதான்.. எப்படி தமிழில் சுந்தராமசாமிக்கு வழங்கப்படாததைப்போல ஒப்ப முடியாத ஒன்றுதான்.. ஆனால் அதை வழங்கும் தனியார் அறக்கட்டளையை “காங்கிரஸ் மேலிடம்” நடத்தவில்லை. அதேபோல் இதற்கு க்ரீஷ் கர்னாட் எந்தவகையிலும் காரணம் அல்ல. மேலும் காங்கிரஸ் ஆட்சியில் 1975லேயே அவருக்கு சாகித்ய அகாடமி வழங்கப்பட்டாயிற்று.. அவரின் இந்துத்துவ அரசியல் சார்பு அவரின் இலக்கியத்தகுதியை குறைத்து மதிப்பிடப்போதுமானது என நான் ஒருபோதும் கருதவில்லை.. கருதவும் மாட்டேன்.
பொதுவாக இந்திய இலக்கியச்சூழலில் நவீன நாடக அரங்குகள் உயிர்ப்புடன் இருக்கும் மொழிச்சூழல்கள் என்றால் அது கன்னடமும், மராத்தியும்தான்.. ஆரோக்யமான கன்னட நாடகச்சூழலின் இருப்பிற்கு க்ரீஷின் பங்களிப்பு மிக முக்கியமானது. எனவே அவரின் இலக்கிய பங்களிப்பை இந்த கோணத்தில் சக கன்னட நாடகாசிரியரான சந்திரசேகர கம்பாருடனோ, மராத்திய நாடகாசிரியரான விஜய் டெண்டுல்கருடனோ ஒப்பிட்டு மதிப்பிடுவதல்லவா பொருத்தம்..?
ந.முத்துசாமியை ஜெயகாந்தனுடனும், அசோகமித்திரனுடமா ஒப்பிடுவீர்கள்..?
அவரை சுமாரான நடிகர் என்கிறீர்கள்.. இருக்கட்டும்.. அவர் பெரும்பாலும் வணிகநோக்கிலான வெகுசன படங்களில் நடித்தார்.. அது தனது வருவாய்க்கான வழியாக.. நீங்கள் எழுதும் திரைக்கதைகள் கூட அப்படித்தானே..? அவற்றை நீங்கள் எழுதும் நோக்கம் என்னவோ அதே நோக்கம்தான் அவர் நடித்ததற்கும்.. ஆனால் என் மதிப்பீட்டில் அவர் வெற்றிகரமான குணச்சித்திர நடிகர்தான்..
எல்லாவற்றிற்கும் மேலாக தான் நம்பிய மதிப்பீடுகளுக்காக, வலியுறுத்திய விழுமியங்களுக்காக, கடைப்பிடித்த அரசியல் கொள்கைகளுக்காக ஔிவுமறைவின்றி நேர்மையாக நின்றமைக்கான வாழ்வே எல்லாவகையிலும் மேலானது.
கர்நாடக காவல்துறை புலனாய்வு பிரிவு, கவுரி லங்கேஷின் கொலைகாரர்கள் அவருக்கு முன்பாக கொலைசெய்யப்பட வேண்டியவராக க்ரிஷ் கர்னாட்டையே வைத்திருந்ததாக குறிப்பிட்டது. வகுப்பு வாதத்திற்கு எதிராகவும், படைப்புரிமைக்கு ஆதரவாகவும், எத்தனை உக்கிரமான கருத்தியல் போராளியாக இருந்தார் என்பதற்கான சான்று அது..சமகால இந்தியாவில் விரல்விட்டு எண்ணத்தக்க பொது அறிவுஜீவிகளில் (public intellectual ) ஒருவராகவும் அவர் இருந்தார்.. இதையெல்லாம் குறிப்பிடாமல் கூட நீங்கள் எழுதலாம்.. ஆனால் ஒரு குற்றப் பத்திரிக்கைக்கு அஞ்சலி கட்டுரை என்று பெயரிட்டிருக்க வேண்டாம்..
அன்புடன்,
இரா.முருகானந்தம்,
13.06.2019.
இரா. முருகானந்தம், அரசியல் செயல்பாட்டாளர்.