பாவெல் தருமபுரி
பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியின் வெற்றிக்குப் பிற்பாடு மு.க. ஸ்டாலின் அவர்களை கதாநாயகனாகவும், ரட்சகன் போலவும் பிம்பங்கள் கட்டமைக்கப் படுகின்றன.
இன்னொரு பக்கம் இது பெரியார் மண் என்றும் இங்கே எந்த காலத்திலும் பா.ஜ.க குடியேற முடியாது என்றும் பரவலாக கருத்துக்கள் பகிரப்படுகின்றன.
இது உண்மைதானா? ஸ்டாலினின் கள வியூகமும், அவரின் தொடர் பிரச்சாரங்களும், திராவிட கோட்பாடும்தான் தி.மு.க கூட்டணிக்கு வெற்றியினை கொண்டுவந்து கொடுத்ததா? நிச்சயமாக இல்லை. ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை விடுங்கள், இங்கே பலமான கூட்டணி அமைத்திடும் சாமர்த்தியத்திலும் கூட அவர் ஒருபடி பின்தங்கியேதான் இருந்தார்.
மாநில கட்சி ஒன்றின் தலைவர் என்கின்ற முறையில் ஸ்டாலினின் நோக்கம் யாவும் மாநில ஆட்சி அதிகாரத்தை நோக்கித்தான் இருந்திருக்க வேண்டும். அதற்கு பிறகுதான் மத்திய அரசில் பங்களிப்பு எல்லாம். கலைஞர் உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் இதைத்தான் செய்திருப்பார். ஆனால் கடைசி வரை ‘எடப்பாடியை வீட்டுக்கு அனுப்புவோம்’ என்ற முழக்கத்துக்கு முக்கியத்துவம் தரப்படவே இல்லை. மோடிக்கு எதிரான பிரச்சாரத்தின் பகுதி அளவுக்கு கூட எடுபிடி எடப்பாடி அரசுமீது கை காட்டப் படவில்லை. விளைவுதான் எடப்பாடி மீண்டும் ஆட்சியை தக்க வைத்திருப்பது.
ஸ்டாலின் மத்தியில் ஆட்சிமாற்றம் வருமென உறுதியாக நம்பினார். எடப்பாடிக்கு முட்டுக் கொடுக்கும் பா.ஜ.க இல்லாது போனால் எளிதாக எடப்பாடியை வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்பது அவர் கணக்கு. அரசனை நம்பி புருஷனை கைவிடுவது போன்ற இந்த முடிவு ஸ்டாலினின் பலவீனமன்றி வேறு என்ன?
நாம் பேசிக் கொண்டிருக்கும்போது குறுக்கிட்டு நீங்கள் கேட்கலாம் ‘ஸ்டாலின் பலவீனமானவர் என்றால் பாராளுமன்றத் தேர்தலில் எவ்வாறு மாபெரும் வெற்றி சாத்தியமானது?’. உண்மைதான் இது மாபெரும் வெற்றிதான். தேனி தகிடு தித்தங்களை கடந்து பார்த்தால் இது நூறு சத வெற்றிதான். ஆனால் வெற்றிக்கு உங்கள் ஸ்டாலினோ, கூட்டணியோ, திராவிட கொள்கைகளோ, தேர்தல் அறிக்கைகளோ எவையும் பிரதான காரணமல்ல. வெற்றிக்கான காரணம் ஓட்டரசியலுக்கும் அப்பார்பட்டது.
ஸ்டெர்லைட், கெய்ல் குழாய், ஹைட்ராேகார்பன் திட்டம், மீத்தேன் எரிவாயு, எட்டுவழிச் சாலை என எங்கெங்கெல்லாம் மக்களின் வாழ்வுரிமைக்கு எதிரான திட்டங்கள் கொண்டுவரப் படுகிறதோ அதை அப்பலப்படுத்தி கைமாறு கருதாமல் மகத்தான மானுடப்பற்றோடும், தியாக உணர்வோடும் தேர்தல் சாரா மக்கள்நல இயக்கங்கள் ஏற்படுத்திய தாக்கமே மக்களின் இந்த முடிவுக்கு காரணம்.
மக்கள் அதிகாரம் போன்ற எண்ணற்ற இந்தக் குழுக்களின் போராட்டம்தான் உள்ளபடி மத்திய அரசினையும், அதன் மக்கள் விரோதக் கொள்கைகளையும், மாற்றாந்தாய் மனோபாவத்தையும் மக்களுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது. தி.மு க அல்ல, மாற்றாக அடுத்த இடத்தில் யார் நின்றிருந்தாலும் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கும். இதில் எந்தவித பீற்றலுக்கும் இடமில்லை.
உண்மை என்னவென்றால் மக்களிடம் தங்களின் செயல்பாடுகள் குறித்த தாக்கத்தினை உணராமலேயேதான் பலவேறு இயக்கங்கள் இன்றைக்கும் களமாடிக் கொண்டிருக்கின்றன.கூடுதலான ஒரு செய்தி.. இந்த தேர்தல் சாரா அமைப்புகள் தங்களுக்குள் பொதுவானதோர் நோக்கத்தோடு ஒரு ஐக்கியத்தை உண்டாக்க வில்லை என்றால் இத்தனையாண்டுகால உழைப்பு அதிகபட்சம் இது போன்றதை மட்டும்தான்(தி.மு.க கூட்டணி வெற்றி) சாதிக்க முடியும்.
இப்படியாக யாரோ சம்பாதித்து யாரோ தின்ற கதையாகத்தான் ஸ்டாலினின் வெற்றி அமைந்தது என்பதை தி.மு.க அணியினர் புரிந்துகொள்ள வேண்டும். துதிபாடல்களை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு யதார்த்தத்தை யோசிக்க வேண்டும்.