கா. ஐயநாதன்
இந்திய நாடாளுமன்றத்தின் 17வது மக்களவையைத் தேர்ந்தெடுக்கும் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக் கிழமை முடிவடைந்த சில நிமிடங்களிலேயே “மீண்டும் மோடி ஆட்சியே அமையப் போகிறது” என்று கூறும் வாக்குக் கணிப்பு முடிவுகள் (Exit Poll Results) தொலைக் காட்சிகளில் வெளியாகியுள்ளன.
முன் திட்டமிடப்பட்டுபோல் எல்லா தொலைக்காட்சிகளின் வாக்குக் கணிப்பு முடிவுகளும் மோடியின் தலைமையில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசு அமையும் என்று கூறியுள்ளன.
பாஜக தலைமையிலான தேச ஜனநாயகக் கூட்டணி 247 முதல் 336 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும் காங்கிரஸ் கூட்டணி 86 முதல் 168 இடங்கள் வரை பெறும் என்றும் இவ்விருக் கூட்டணிகளிலும் இடம்பெறாத கட்சிகள் 148 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் பல்வேறு தொலைக்காட்சிகளின் வாக்குக் கணிப்புகள் கூறியுள்ளன.
இந்த கணிப்புகள் யாவும் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் சில நூறு முதல் ஆயிரம் வாக்காளர்களிடம் கேட்டு முடிவை அறிந்து தொகுக்கப்பட்டவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி சில நூறு / ஆயிரம் வாக்காளர்களிடம் கேட்டு இந்நாட்டின் 90 கோடி வாக்காளர்களில் 67% வாக்களித்த தேர்தல் முடிவுகளை இவ்வளவு துல்லியமாக கூற முடியுமா என்று கேட்டால் புள்ளியியல் வழிமுறைகள் (Statistical Methodology) படித்தவர்கள் நிச்சயம் சிரிப்பார்கள். ஏனென்றால் வாக்களித்த 67% வாக்காளர்களின் எண்ணிக்கையானது 60.30 கோடி பேர்! அவர்களின் வாக்கு முடிவுகளைத் சில இலட்சம் வாக்காளர்கள் சொன்னதை வைத்து நிச்சயம் கூற முடியாது என்றே கூறுவார்கள்.
ஆனால் இந்த வாக்குக் கணிப்பு முடிவுகள் யாவும் இதே தொலைக்காட்சிகள் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னர் வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளை ஒட்டியே அமைந்துள்ளன என்பது ஒப்பிட்டுப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம். இப்படியான கருத்துக் கணிப்புகளும் வாக்குக் கணிப்புகளும் ஏற்கனவே பல தேர்தல்களில் வெளியாகியிருக்கின்றன. அவை யாவும் இறுதியில் வெளியான தேர்தல் முடிவுகளை பிரதிபலித்ததா என்றால் நிச்சயம் இல்லை என்பதே வரலாறாகும். அப்படியிருந்தும் எதற்காக இப்படிப்பட்ட வாக்குக் கணிப்புகள் வெளியிடுகிறார்கள்? பிசினஸ், பெரும் பிசினஸ்.
தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுகளை விட வாக்குக் கணிப்பு முடிவுகள் மக்களை பெரிதும் ஈர்க்கின்றன என்பதை அறிந்து அதனை பெரும் வருவாய் பார்க்கும் வர்த்தக வாய்ப்பாக இதை நடத்தும் நீல்சன், சி வோட்டர், சாணக்கியா போன்ற நிறுவனங்களும் அவற்றோடு ஒப்பந்தம் போட்டு வெளியிடும் தொலைக்காட்சிகளும் பெரும் பயன் ஈட்டியுள்ளன. இந்த அமைப்புகள் எதுவும் தேர்தல் முடிவு வெளியாகி அந்த முடிவுகள் இவர்கள் அளித்த முடிவுகளுக்கு மாறாக அமைந்தபோதெல்லாம் அது பற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பங்குச் சந்தை ஏற்றமும் முதலீடும்!
விளம்பரங்களால் கிடைக்கும் இலாபம் மட்டுமேயல்லாமல் மற்றொரு இடைக்கால பெரும் இலாபத்தையும் இந்த வாக்குக் கணிப்புகள் உருவாக்கியுள்ளன. எடுத்துக்காட்டாக, நேற்று இந்த வாக்குக் கணிப்பு முடிவுகள் மீண்டும் மோடியின் தலைமையில்தான் ஆட்சி அமையும் என்று கூறிய பிறகு, இன்று இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தை இன்று காலை வர்த்தகத்தை தொடங்கிய ஒரு நிமிடத்த்திலேயே அதன் குறியீடு 900 புள்ளிகள் உயர்ந்துள்ளது. தேச பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டியும் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது!
இதன் வணிக முக்கியத்துவம் என்ன தெரியுமா? இன்று காலை முதல் சில மணி நேரங்களில் இந்தியப் பங்குச் சந்தைகளில் 3 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது!
கடந்த இரண்டு வருடங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்துவந்த இந்தியப் பங்குச் சந்தையின் குறியீடுகள் பெருமளவிற்கு குறைந்திருந்தன. மும்பை பங்குச் சந்தை 39,000 புள்ளிகளுக்கு மேல் இருந்த நிலை மாறி 37,000 புள்ளிகளுக்கு இறங்கியிருந்து. மக்களவைத் தேர்தலின் 4வது கட்டத் தேர்தல் முடிந்தபோது தேர்தல் முடிவுகள் இப்போதுள்ள ஆட்சிக்கு எதிராக வரும் என்று செய்திகள் வந்தபோது பங்குச் சந்தை வர்த்தகத்தில் இறக்கம் ஏற்பட்டது, குறியீடுகள் குறைந்தன. இந்த நிலையில்தான் நேற்று வந்த வாக்குக் கணிப்பு முடிவுகள் மீண்டும் மோடி ஆட்சிதான் வரும் என்று கூறியதன் விளைவாக காலை வர்த்தகத்திலேயே சற்றேறக்குறைய ஆயிரம் புள்ளிகள் உயர்ந்துள்ளது. பல இலட்சம் கோடிகளுக்கு பங்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.
இப்படி சில நிமிடங்களில் பங்கு வர்த்தகக் குறியீடுகள் உயர்ந்துள்ளதன் பின்னணியை கூர்ந்து நோக்கி வருவதாக பங்குச் சந்தை வர்த்தக கண்காணிப்பு அமைப்பான செபி கூறியுள்ளது. ஆக மீண்டும் மோடி ஆட்சிதான் என்ற நம்பிக்கையை உருவாக்கியதன் பின்னணியில் இந்த அளவிற்கு வர்த்தகம் பெருகியுள்ளது. 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் முடிவுகள் மாறினால்…? அதன் விளைவாக பங்கு வர்த்தகத்தில் இன்றைக்கு ஏற்பட்ட உயர்வு அன்று சரிவாக மாறும். அதனால் இன்று முதலீடு செய்தவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். அப்படியானால் யாருக்கு இதனால் இலாபம்? கண்காணிப்பு அமைப்பான செபி என்ன சொல்லப் போகிறது என்று பார்ப்போம்.
இப்படிப்பட்ட வாக்குக் கணிப்பு முடிவின் மற்றொரு கோணம் என்ன என்பதைத்தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கையாக கூறியுள்ளார். மோடி ஆட்சிதான் மீண்டும் அமையும் என்று சொல்வதன் மூலம் வாக்கு எண்ணிக்கையின் போது முடிவுகளை மாற்றும் சதிகள் அரங்கேற்றப்படலாம் என்று எதிர்க்கட்சிகளை மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். இதில் பொதிந்துள்ள உண்மையை உணர வேண்டும்.
வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள பொத்தான்கள் எதை அழுத்தினாலும் வாக்கு தாமரைக்கு விழுந்த பல நிகழ்வுகள் செய்திகளாக வந்துள்ளன. அதேபோல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் – தேவைக்கும் அதிகமாக அங்கும் இங்கும் கொண்டு வரப்பட்டதும் செய்திகளாக வந்துள்ளதைக் கண்டோம். இந்தக் கூடுதல் இயந்திரங்களின் வருகை எதற்காக என்கிற கேள்வி தேர்தல் நிகழ்வுகளை உற்று நோக்கும் எவருக்கும் பல கேள்விகளை எழுப்புகின்றன.
வாக்குப் பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்து தீர்ப்பை மாற்றி எழுதிட முடியும் என்பது கடந்த தேர்தல்கள் வரை பல இடங்களில் நடந்துள்ளதை ஒரு பத்திரிகையாளனாக அறிந்தவன் நான். இதையே பரவலாக செய்ய முடியும் என்றால் நாட்டின் தலையெழுத்து மாற்றப்படுமே? என்கிற கவலையும் எனக்குண்டு. இயந்திரங்கள் எப்போதும் இயந்திரங்களே… அதனை இயக்குபவரே விளைவுகளை உருவாக்குகிறார் என்பதை நன்கு அறிந்துள்ளோம். எனவே தேர்தல் ஆணையத்தில் இருந்து தேர்தலை நடத்தும் அலுவலர்கள் வரை நம்பகத்தன்மை என்பது கேள்விக் குறியாகவுள்ள இன்றைய நிலையில் இப்படிப்பட்ட வாக்குக் கணிப்பு முடிவுகள் அப்படிப்பட்ட தேர்தல் முடிவுகளை நியாயப்படுத்த உதவும் அல்லவா?
“தேர்தல் கருத்துக் கணிப்புகள் மற்றும் வாக்குக் கணிப்பு முடிவுகளை ஒட்டியே தேர்தல் முடிவுகளும் அமைந்துள்ளன” என்று ஒற்றை வாக்கியத்தில் எல்லாவிதமான தகிடுதித்தங்களையும் நியாயப்படுத்திட முடியுமன்றோ? அதுவும் ஆளும் கட்சியினரின் அனைத்து நடவடிக்கைகளையும் நியாயமானவை என்று வாதிடுவதற்கான அறிவார்ந்த பெருமக்கள் அருகிப் பெருகியுள்ள நமது நாட்டில் எதையும் நியாயப்படுத்த முடியும் அல்லவா? எனவேதான் மம்தா பானர்ஜியின் எச்சரிக்கை அர்த்தமுடையதாகிறது.
தங்களுக்கான அரசை தாங்களே வாக்களித்து தீர்மானிக்கும் உரிமைதான் சுதந்திரம் பெற்றதன் மூலம் இந்நாட்டு மக்கள் பெற்றுள்ள மாபெரும் உரிமையாகும்.
அவர்கள் வாக்களித்து அதன் முடிவு ஒரு தொங்கு மக்களவை ஏற்பட்டாலும், மக்கள் அளித்த முடிவுகளை ஒட்டியே அடுத்த ஆட்சி அமைவது நடக்க வேண்டும். மக்கள் அளித்த தீர்ப்பை இயந்திரங்களைப் பயன்படுத்தி மாற்றியமைப்பது போன்று எவ்விதமான தகிடுதித்தங்கள் நடந்தாலும் அது இந்நாட்டு மக்களுக்கு உரிய ஜனநாயக உரிமையை நேரடியாக பறிக்கும் அடாத செயலாகும். அதனை ஏற்கவும் முடியாது, அதை செய்யும் அரசியல் கட்சிகள் இந்நாட்டு அரசியலில் நீடிக்கவும் கூடாது என்பதில் ஜனநாயக விரும்பிகள் உறுதியாக நிற்க வேண்டும்.
23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் மக்களின் தீர்ப்பும் எதுவாக இருப்பினும் அதனை நேர்மையாக ஏற்பதே கட்சிகள் அனைத்தும் ஏற்க வேண்டிய ஜனநாயகப் பொறுப்பாகும். எனவே திசைதிருப்பல்களுக்கு மதிப்பளிக்காமல் மக்கள் தீர்ப்புக்காக காத்திருப்போம்.
கா. ஐயநாதன், அரசியல் விமர்சகர்.