ஜெயகாந்தன்
“…இவர்கள் (ஆர்எஸ்எஸ்) பேசுகிற அறிவார்ந்த பண்பாட்டுப் (புரட்டுப்) பேச்சுக்களுக்குத் தமிழர்கள் ஒருபோதும் செவிசாய்க்க மாட்டார்கள். ஆனாலும் இந்திய அரசியலில் இவர்களுக்குப் பின்பலமாக இருந்து ஊக்கி விடுபவர்களையும், இவர்களது அன்னிய சர்வதேசத் தொடர்புகளையும், கருத்துக்களையும் பார்க்கிறபோது மறுபடியும் ஒரு சவாலைச் சந்திக்க நமது மக்கள் காந்திஜியின் மார்க்கத்தில் ஒற்றுமையைக் கட்டிக் காக்க வேண்டியதன் அவசியத்தை நான் உணர்கிறேன்.
இவர்களை எதிர்த்தும், இவர்களது மதநெடி வீசுகிற கருத்துக்களைக் காறித் துப்பியும், வெறும் ஹிந்து வீரம் பேசி மதத் துவேஷம் வளர்க்கின்ற மாய்மாலத்தையும், ஆரியப் பெருமையையும் தமிழர்கள் ஆப்பறைந்து தகர்த்திருக்கிறார்கள். இனியும் தகர்ப்பார்கள்.
இவர்களது இயக்கத்துக்கு எதிரான, எதிர்மறை அவசியமாகவே திராவிடர் இனப்பற்றும், தமிழர் படைகளும், தமிழகத்தில் பெருகி வளர்ந்தன! இந்த வெறியர்களுக்கும் கொலைகாரர்களுக்கும்தான் கடவுள் பக்தி என்றால், அது காரணமாகவே இவர்களுக்கு எதிராக நாத்திகக் கொள்கையும் நம் இளைஞர்களிடையே பரவிற்று.
ஆயினும் இந்த ஆர்.எஸ்.எஸ்.க்குத் தகுந்த பதில் தர வேண்டுமாயின் அவர்கள் இயங்குவதைப்போல நமது தொழிலாளி வீட்டுப் பிள்ளைகளும் விவேகாநந்தர், காந்திஜி, பாரதி, ராமலிங்க அடிகளார் போன்றோரின் சமரச சத்திய ஞான போதனைகளைப் பயிற்றுவிக்கிற இளைஞர் இயக்கங்களை ஊர்கள் தோறும் தோற்றுவிக்க வேண்டும்.
ஒரு ஹிந்து என்றால் சோஷலிஸ்ட் என்று அர்த்தம். இன்று இந்தியா அமைக்கப் போராடுவது – ஹிந்து ராஷ்டிரம் அல்ல, சோஷலிச பாரதமே என்று உணர்த்த வேண்டும்!
சிவப்பு உடையணிந்த சிங்கங்கள் அணி அணியாய் நின்று ஊர்கள் தோறும் கவாத்துப் பழக வேண்டும். கரலாக்கட்டை சுழற்ற வேண்டும். கம்பெடுப்பார்க்குக் கம்பெடுத்துக் காட்ட தசையில் முறுக்கேற்றி நமது இளைஞர் பட்டாளத்தைத் திரட்டிக் காட்ட வேண்டும். சோஷலிச சமுதாய லட்சியங்களை அவர்கள் கொள்கைகளாக நிற்கச் செய்தல் வேண்டும்.
நமது `ஹிந்து ராஷ்டிர’த்தின் உயர்வுக்குக் காரணம் இங்கு பிற மதத்தினரும் பிற கொள்கைகளும் தழைத்ததே ஆகும். ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்துவ, பௌத்த இன்னும் பல சமயங்களைச் சார்ந்தும் சாராமலும் இந்தியாவை இயக்கி வாழ்கிற கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை மேம்படுவதற்குத் தனியுடமை தவிர்த்த சோஷலிச சமூகமே வேண்டும் என்ற விவேகாநந்தரின் பெரு நெறியை நாம் கைக் கொள்ளுதல் வேண்டும்.
தமிழகமே உஷார்! இவர்களைச் சந்திக்கத் தயார் நிலையில் நில்! ஆர்.எஸ்.எஸ். பற்றிய எனது பார்வை வெறும் விருப்பு வெறுப்புகளின் பாற்பட்டவை அல்ல; ஆதாரபூர்வமான தஸ்தாவேஜுகளையும் நம் காலச் சரித்திர நிகழ்ச்சிகளைக் கவனித்து வந்த அனுபவத்தாலும் உருவான எச்சரிக்கை ஆகும்.
இதனைச் சித்தாந்த ரீதியில் எழுத்திலும் மேடையிலும் சந்தித்துச் சமர்புரிந்து நம்மால் வென்றுவிடுவது முடியும். ஆயினும் அது மட்டும் போதாது; ஆர்.எஸ்.எஸ்.ன் செயற்பாடு அந்த நாகரிகத்தின் எல்லைகளை மீறிவிடும். வெல்ல முடியாத காந்தியைக் கொல்ல முடியும் என்று நமக்குக் காட்டிக் கொக்கரித்தவர்கள் இவர்கள்!
ஆகவே தசை வலிமையும் , வாளெடுப்போர்க்கு வாளால் பதில் சொல்லும் வலிமையும் கொண்ட இளைஞர்களைத் திரட்டி இது எமது படை என்று தேசிய, சோஷலிச – லட்சியம் கொண்ட இயக்கத்தினர் செயல்படத் தொடங்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!’’
(எழுத்தாளர் ஜெயகாந்தன் கல்பனா’ மாத இதழின் ஆசிரியராக இருந்தபோது,
எனது பார்வையில் ஆர்.எஸ்.எஸ்.‘ என்ற தலைப்பில், ஏறக்குறைய 39 ஆண்டுகளுக்கு முன்பு, அந்த சஞ்சிகையின் 1980 ஜனவரி இதழில் எழுதிய கட்டுரையின் 2-வது பகுதி இது.)