‘இந்திய நாஜிகள்’: ஆர்.எஸ்.எஸ். பற்றி ஜெயகாந்தன் !

எழுத்தாளர் ஜெயகாந்தன், கல்பனா’ மாத இதழின் ஆசிரியராக இருந்தபோது,எனது பார்வையில் ஆர்.எஸ்.எஸ்.‘ என்ற தலைப்பில், அந்த சஞ்சிகையின் 1980 ஜனவரி இதழில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது.எவ்வளவு தீர்க்கமான பார்வையுடன் அவர் இருந்திருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். அவர் பிறந்த நாளை ( ஏப்ரல் 24) முன்னிட்டு வாசகர்களுக்காக தருகிறோம்.

…………………………………………………………………………………………

எழுத்தாளர் ஜெயகாந்தன்
எழுத்தாளர் ஜெயகாந்தன்

`ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம்’ என்ற இந்தப் பெயர் எனது இளமைப் பருவ காலத்தில் மிகப் பிரபலமாயிருந்தது.

1945, 46, 47-ஆம் ஆண்டுகளில் நான் பள்ளிச் சிறுவனாக இருந்த காலத்தில் தஞ்சையிலும், கடலூரிலும், விழுப்புரத்திலும் வாழ்ந்தபோது அங்கெல்லாம் இந்த இயக்கம் என்னை விடாமல் தொடர்ந்து வருவது போல் தோற்றம் காட்டி, பெருகிவரும் காளமேகம் போல் விரிந்து பரந்து தமிழ் இளைஞர்களைக் கவர்ந்துகொள்ள முயன்றது. ஓரளவு நாடெங்கிலும் நம்மீது இது கவிந்து பற்றியது என்றும் சொல்லலாம்.

என் வயதொத்த ஆரம்பப் பள்ளிச் சிறுவர்கள் முதல், கல்லூரி மாணவர்கள் வரை, ஏன் – பல வயதான ஆசிரியர்கள்கூட அதனால் அக்காலத்தில் வசீகரிக்கப்பட்டிருந்தனர்.

மாலை நேரத்தில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய சிறுவர்களை அவர்களத்து பெற்றோர்களே “தம்பி சங்கத்துக்குப் போகலியா நீ! சீக்கிரம் போய்விட்டு வா’’ என்று ஊக்கப்படுத்தி அனுப்புகிற அளவுக்கு இந்தச் சங்கத்தின் நடவடிக்கைகள் பெரியோர்களையும், பெற்றோர்களையும் தன்பால் ஈர்த்திருந்ததை நான் அறிவேன்.

இந்தச் சங்கம் நமது இளைஞர்களுக்கு மதப் பற்றும், தெய்வ பக்தியும் ஊட்டி, தேக ஆரோக்கியத்துக்கான பயிற்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தி, இளைஞர்கள் மத்தியில் கட்டுப்பாடும் ஒழுக்கமும் உருவாக்கி, சமூகப் பணிபுரிவதாகவும் அக்காலத்தில் பெரிதும் நம்பப்பட்டது.

பார்த்துக் கொண்டிருந்தேன்…

எனது பாலிய கால நண்பர்களும், எனது சகோதரர்களுக்கு இணையான என் சுற்றத்து இளைஞர்களும் `சங்கம், சங்கம்‘ என்று ஜபித்துக் கொண்டு இதில் சங்கமமானதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்தப் பருவத்தில் எனக்கிருந்த விசேஷ மனோநிலையின் காரணமாய் நான் பொதுவாக குழந்தைகளின் இயல்பிலிருந்து மாறுபட்டவனாக இருந்தேன். பொதுவாக நான் வீதியாட்டங்களிலும் விளையாட்டுக்களிலும் ஈடுபடாத `சீரியஸ் டைப்’ குழந்தையாகக் கன்னத்தில் ஊன்றிய கையுடன் இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் எனக்கு விடுத்த அழைப்பை நான் ஏற்றுக் கொள்ளத் தயங்கினேன். ஆயினும் ஓர் வேடிக்கைபோல் அவர்களது நடவடிக்கைகள் என்னையும் ஈர்த்ததால் அவர்களிடமிருந்து நான் சற்று விலகி நின்று, ஆனால் அவர்களை உன்னிப்பாகக் கவனித்தேன்.

அவர்களில் முஸ்லிம் சிறுவர்களோ, தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த சிறுவர்களோ, கிறிஸ்துவர்களோ ஒருவர்கூட இருக்கவில்லை. எனது பாலியப் பருவத்தில் நான் சிலகாலம் ஒரு முஸ்லிம் பள்ளியில் படிக்க நேர்ந்தது. எனது நண்பர்களில் சிலர் முஸ்லிம்கள்; சிலர் கிறிஸ்துவர்கள்; சிலர் பிராமணச் சிறுவர்கள்; சிலர் பிராமணரல்லாத மத்தியதர வர்க்கத்துப் பையன்கள். எனது பிராமண நண்பர்களும், பிராமணரல்லாத மத்தியதர வர்க்கத்துச் சிறுவர்களும்தான், – அனேகமாக அவர்களனைவருமே இந்த ஆர்.எஸ்.எஸ்.-ல் பங்கு பெற்றிருந்தனர்.

எல்லா ஊர்களிலும் ஒரு மைதானத்தில் இவர்கள் கூடிப் பலவித விளையாட்டுக்களில் ஈடுபட்டிருப்பார்கள். மல்யுத்தம், வாள்வீச்சு போன்ற தீர விளையாட்டுக்களைப் பயிற்றுவிப்பார்கள். ஒருமுறை கேடயமும் வாளும் ஏந்தி இரண்டு வீரர்கள் அங்கே போர் பயின்றனர். அந்த வீர விளையாட்டை அனைவரும் புகழ்ந்தனர். எனக்கு ஏனோ அதைக் காணும்போதும், மற்றவர்கள் அந்த வாட்போரைப் புகழ்ந்தபோதும் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது.

காட்டுமிராண்டிகளே போல்…

ஏனெனில் அக்காலத்தில்தான் டாங்கிகளும், நீர்மூழ்கிக் கப்பல்களும், நவீன யந்திரத் துப்பாக்கிகளும் குண்டு மழை பொழிந்து உலகைக் குலுக்கிய இரண்டாவது மகாயுத்தம் நடந்து முடிந்திருந்தது. பாவம் இந்தப் பிராமணப் பிள்ளைகள் இந்தக் காலத்தில் வாளும் கேடயமும் தூக்கிக் கொண்டு, பண்டைக்கால காட்டுமிராண்டிகள்போல் ஆடுகிறார்களே என்று எனக்கு வேடிக்கையாக இருந்ததில் அதிசயம் என்ன!

இவர்கள் தங்களுக்கு அரசியல் நாட்டமில்லை என்று சொல்லிக் கொண்டார்கள்; ஆனால் விளையாட்டு நேரம் தவிர மற்ற நேரங்களில் அடிக்கடி உட்கார்ந்து அரசியல் விமர்சனங்களே செய்து கொண்டிருந்தார்கள். அந்த அரசியல் விமர்சன விவாதங்களில் மட்டும் நான் ஆர்வமாகக் கலந்துகொண்டேன்.

நான் ஒரு ஹிந்து' என்று ஒருவகை, அருவறுக்கத்தக்க ஆவேசத்துடன் இவர்கள் கூறிக் கொண்டார்கள். அமைதியும் சாந்தமும் அகிம்சையும் வடிவமாகக் கொண்டு நம்மிடையே வாழ்ந்து கொண்டிருந்த மகாத்மா காந்ந்திஜியின் மூலம் இந்தஹிந்து’ என்ற வார்த்தைக்கு உயரிய பொருள் கொண்டு – நானும் ஒரு ஹிந்துவே என்று உணர்ந்தவன் நான். ஆயினும் இந்த ஆர்எஸ்எஸ்காரர்கள் நான் ஹிந்து… ஹிந்து‘ என்று நெஞ்சில் அடித்துக் கொண்டு நின்றபோது -நான் ஹிந்து இல்லை… ஹிந்து இல்லை‘ என்று கத்திக் கொண்டு ஓட வேண்டும்போல் எனக்குத் தோன்றியது.

இரண்டாம் உலக மகாயுத்த நிகழ்ச்சிகள் அக்காலத்தில் என்னுள் உலகத்தைப் பற்றிய விரிவான பார்வையை உருவாக்கி விட்டிருந்தன போலும்!

நான ஹிட்லரைப் பற்றியும், நாஜிசத்தைப் பற்றியும் அறிந்திருந்தேன். அந்த யுத்தத்தைப் பற்றியும், ஹிட்லரைப் பற்றியும் எனது ஆர்.எஸ்.எஸ். நண்பர்கள் வேறுபட்ட விபரீதமான கருத்துக்களை வைத்திருந்ததையும் அவர்களோடு பேசி, விவாதித்து அறிந்தேன்.

ஆனால் ஹிட்லர் தோற்றொழிந்தான். அவனது ஸ்வஸ்திக் கொடிகள் செஞ்சேனையின் பாதங்களில் வீழ்ந்து பணிந்து வீறு அழிந்தன! அவை பறந்த இடங்களிலேயே அவற்றின் சுவடற்றுப் போயிற்று. ஆரிய இனவெறியின் ஆதிபத்தியம் என்கிற கோஷமே சமாதிக்குள் நிரந்தரம் கொண்டது. உலகையே அழித்து அடிமை கொள்ளும் அந்த மாபெரும் அச்சுறுத்தலை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து பாசிசத்தின் மீது உலகமே வெற்றி கொண்டு விழாக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில் நம்மூர் மைதானத்தில் அதே ஸ்வஸ்திகா சின்னத்துடன் ஒரு காவி முக்கோணக் கொடியை ஏற்றி நெஞ்சில் கை வைத்து சல்யூட் அடித்து நின்றனர்… எனது ஆர்.எஸ்.எஸ். நண்பர்கள்!

`என்ன அநியாயம் அல்லது அறிவீனம்!‘ என்றுதான் நான் அப்போது அலட்சியமாக எண்ணினேன். இது என்ன ஆபத்து என்று எனக்குத் தோன்றவே இல்லை. எனக்குத் தோன்றாததில் அதிசயம் ஒன்றும் இல்லை. யாருக்குமே தோன்றவில்லை அக்காலத்தில் – அது ஒரு புதிய ஆபத்தின் அறைகூவல் என்று!

நான் எனது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் குடைந்து குடைந்து கேள்விகள் கேட்டேன். அவர்களனைவரும் ஒன்று – தேசியவாதிகள்; அல்லது – கம்யூனிஸ்டுகள். அவர்கள் தந்த தகவல்களின் உதவியோடு ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் கொள்கைகளையும் வாதங்களையும் சீர்தூக்கிச் சிந்தித்ததில் இவர்கள் முற்றமுழுக்க பாசிசத்தையே ஹிந்து வர்ணம் பூசித் தரித்துக் கொண்டவர்கள் என்று கண்டேன். அப்போதுகூட அது ஒரு வேஷம் அணிந்துகொண்டு பூச்சாண்டி காட்டும் சிறுபிள்ளைத் தனம் என்றே நினைத்தேன்.

அப்போது நான் விழுப்புரத்தில் ரயில்வே தொழிலாளிகளின் பிள்ளைகளோடு இருந்தேன். ரயில்வே காலனி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மாலை நேரங்களில் கூடிக் கவாத்து பழகுவார்கள். அவர்களில் பெரும்பகுதியினர் ரயில்வே காலனிக்கு வெளியிலிருந்து வருவார்கள். காக்கிக் கால்சட்டையும், வெள்ளை மேல்சட்டையும் அணிந்திருப்பர். ஒரு சிலர் தலையில் கறுப்புக் குல்லாயும் தரித்திருந்தனர். விளையாடும் மைதானத்தின் நடுவே தங்களுடைய காவிக் கொடியை நட்டு வைத்து வணங்குவார்கள்.

நானும் சில ரயில்வே தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகளும் நாள்தோறும் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் அவர்களோடு சேர்வதில் எனக்கிருந்த கடுமையான ஆட்சேபம் மற்ற நண்பர்களை அவர்கள்பால் செல்லாமல் தடுத்துக்கொண்டிருந்தது. ஆயினும் நாட்கள் செல்லச் செல்ல அவர்களில் சிலர் சற்றுத் தயக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். விளையாட்டில் கலந்துகொள்ளவும் ஆரம்பித்தனர்.

அப்போதுதான் எனக்குத் தோன்றியது:

இவர்களிடம் இவர்களுக்குத் தெரியாத அரசியல் பற்றியும் உலக விவகாரங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருப்பதால் பயனொன்றும் ஏற்படாது. அவற்றைப் பேச வேண்டிய இடமும், பேச வேண்டிய நபர்களும் வேறு. நாம் சிறுவர்கள். சிறுவர்களான நமக்கு விளையாட்டும், தேகப் பயிற்சியும், கட்டுப்பாடும் மிக மிக அவசியமே! அதை மற்ற தேசியக் கட்சிகளிடமும் கம்யூனிஸ்டு கட்சியிடமும் பெற முடியாத சிறுவர்கள் ஒரு சில நல்ல நோக்கங்களுடனே இந்த ஆர்.எஸ்.எஸ் விளையாட்டு அரங்கத்தில். புகுந்துவிடுகிறார்கள். பிறகு மெள்ள மெள்ள அவர்களுக்கு மிக இணக்கமான முறையில் எண்ணற்ற விஷக் கருத்துக்கள் புகுத்தப்படுகின்றன்ன. இறுதியில் இவர்கள் கடைந்தெடுத்தஹிந்து வெறி’யர்களாக உருவாக்கப்படுகிறார்கள். அதாவது அவரவர் தரத்துக்கேற்ப இந்த வெறி பிரயோகிக்கப்படுகிறது. இதுவே இவர்களின் செயல்திட்டம்; இயக்க நடைமுறை!

இதிலிருந்து நமது நண்பர்களைக் காப்பாற்ற வேண்டுமானால் நாமும் விளையாட்டரங்கம் ஒன்று அமைக்க வேண்டும். கவாத்துப் பழக வேண்டும். மல்யுத்தம், சிலம்பம், விளையாட்டுக்கள் ஆகியவற்றில் சற்றும் விருப்பமில்லாத ஒரு `பிரகிருதி‘ நான். எனினும் இதில் விருப்பமுள்ளவர்களை ஒன்றிணைக்க நாமும் முயற்சி எடுத்தல் வேண்டும்!’ என்று தீர்மானித்தேன்.

எனது எண்ணத்தை எனது நண்பர்களிடம் பல நாட்கள் பேசியதன் விளைவாக விழுப்புரம் ரயில்வே காலனியில் ஆர்.எஸ்.எஸ்.. விளையாட்டு அரங்கத்துக்குப் பக்கத்திலேயே ரயில்வே காலனி பாலர் சங்கம்’ என்றொரு சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் ஆர்கனைசரான நான் அதில்கேப்டன்!’

எங்கள் பாலர் சங்க முயற்சிகள் நல்ல பலன் அளிக்க ஆரம்பித்தன. ஐம்பதிலிருந்து எழுபது வரை அதன் அங்கத்தினர்கள் பெருகியிருந்தனர். ரயில்வே காலனி மைதானத்தில் ஒரு பக்கம் காவிக் கொடியும், இன்னொரு பக்கம் செங்கொடியும் பறந்தன. தோளில் சாத்திய செங்கொடியுடன் ரயில்வே காலனி குழந்தைகளை அணிவகுத்துக் கொண்டுவந்து – மைதானத்தின் நடுவே செங்கொடியை நட்டுவிட்டு, ஓர் ஓரமாய் ஒதுங்கிக் கன்னத்தில் ஊன்றிய கையுடன் நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தியாவுக்கு சுதந்திரம் வருகிற வரை விளையாடுவதில்லை என்று எனக்கு ஒரு சிறுபிள்ளை வைராக்கியம் உள்ளூர இருந்ததே!

சுதந்திரத்துக்குப் பின்னால்…

இந்தியா சுதந்திரம் பெற்றது! மிக விபரீதமான ஒரு சூழ்நிலையில் நாம் சுதந்திர துவஜத்தைப் பறக்க விட்டோம். நாடு துண்டாடப்பட்டது! நம்மில் பலருக்கு அதில் சம்மதமில்லை. ஒன்றுபட்ட அடிமை இந்தியாவா? துண்டாகிப் பிளவுண்ட சுதந்திர இந்தியாவா? விடுதலை பெற்ற நாடுகளாக இருந்தால் நாம் மறுபடியும் ஒன்றுபட்டு விட முடியாதா என்ற நம்பிக்கை போலும்! பாகிஸ்தானைப் பிரித்தே ஆக வேண்டும் என்ற மூர்க்கமான நிலைமையில் இந்தியா தனது சுதந்திரத்தைப் பிரகடனம் செய்தது.

`நாடு பிரிவது என்றால் என் பிணத்தின் மேல்தான் அந்தப் பிரிவினை நடக்கும்‘ என்று உறுதியாகச் சொல்லி விட்டார் மகாத்மா காந்தி. இந்திய தேசிய அரங்கில் விவாதங்களும் சமாதானங்களும், வேண்டுகோள்களும் ஒரே குழப்படியாயிருந்தன. இவற்றிலிருந்து விலகுவதற்குப் பிரிவினையை ஒத்துக்கொள்ளுவதைத் தவிர அதை விரும்பாதவர்களுக்கு வேறு வழியில்லாது போயிற்று. நாட்டுப் பிரிவினையும் நாட்டுச் சுதந்திரமும் ஒரே போதில் நமக்கு நேர்ந்தது.

எனினும் இந்தியா இருநூறாண்டு அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்றது.
இந்தச் சுதந்திர தின மகிழ்ச்சியில் பங்குகொள்ள முடியாமல் மகாத்மா காந்த்தி மனம் நொந்து கிடந்தார்.

அதே நேரத்தில் புனாவில் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.

திலகரும் கோகலேயும் ஒரு காலத்தில் சுதந்திர முழக்கமிட்ட அந்தப் பழம்பெரும் பாரம்பரியம் மிகுந்த நகரமே சுதந்திரக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த நேரத்தில் ஒரு மைதானத்தில் அந்தக் காவிக் கொடி ஸ்வஸ்திகா சின்னத்துடன் பறக்கவிடப்பட்டு, ஐநூறு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியைப் புறக்கணித்து ஒதுக்கிவிட்டு இந்திய நாஜிகளின் கொடியை ஏற்றி வணங்கினர். ஆம்; இந்தக் கொடியும் ஹிட்லரின் மூன்றாவது ரீச்சினுடைய கொடியும் சிறு வித்தியாசத்துடன் ஒரே கோஷத்தைத்தான் பொறித்துக் கொண்டிருந்தன.

ஸ்வஸ்திகா ஆரியர்களின் சின்னமாம்! புனாவில் கூடியிருந்த இந்த இளைஞர்களும் தாங்கள் மகத்தான ஆரியர்களின் வழித் தோன்றல்கள் என்றே நம்பியிருந்தனர். இதில் கலந்துகொண்ட சிலர், தனிமனிதர்களைக் கொல்லும் தவநெறியை மேற்கொண்டவர்களாகவும் இருந்தனர்.
ஹிந்து சாம்ராஜ்யம்‘
சிந்து நதியின் தலைப் பகுதியிலிருந்து கிழக்கே பர்மா வரையிலும், திபெத்திலிருந்து குமரி முனை வரையிலும் விரிந்து பரந்த ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபிப்பதையே தங்களது
உன்னத லட்சியமாக‘க் கொண்டவர்கள் இவர்கள்.

இந்திய மக்களின் நவீன கால அடிமைத்தனத்துக்கெல்லாம் ஆணி வேரான மத வேற்றுமையைக் களைந்து `ஹிந்து – முஸ்லிம் ஏக்ஹோ!’ என்று சகோதரத்துவத்தையும் சகிப்புத்தன்மையையும் நம்மிடையே கட்டிக் காத்து நின்ற மகாத்மா காந்தியை இவர்கள் தங்கள் முதல் எதிரியாகக் கருதினர். அவர்கள் கருத்துப்படி காந்திஜியும் அவரது இயக்கமும்தான் ஹிந்து ராஷ்டிரத்தின் ஆகப் பெரிய முதல் எதிரி! தாக்கி அழிக்க வேண்டிய இலக்கு!

காந்திஜியின் அகிம்சை எனும் ஆத்ம வீரத்தை, ஆண்மையற்ற கோழைத்தனம் என்று இவர்கள் அறுதியிட்டுக் கணித்தனர். ஹிந்துக்களின் பலத்தையும் வீரத்தையும் காந்திஜியின் அகிம்சை தத்துவம் மாசுபடுத்திவிட்டது என்று இவர்கள் குற்றம் சாட்டினர்!

ஆம்! இந்தியாவில் நம்மோடு இரண்டறக் கலந்துவிட்ட எல்லா மதத்தினரும் சகோதரர்களே! இவர்கள் மத்தியில் சமத்துவமும் சகோதரத்துவமும் ஏற்படுவதே இந்தியாவின் லட்சியம் என்று மகாத்மா நமக்குக் கற்பித்து நிலை நாட்டிய கொள்கைக்கு இவர்கள் கனவு கண்ட, காண்கிற, அந்த ஹிந்து ராஷ்ட்டிரத்தில் இடம் கிடையாதே…!

ஆரியர்களின் வாரிசுகளும், அகண்ட ஹிந்துஸ்தானத்தின் அதிபர்களுமான இவர்கள் இந்திய உபகண்டத்துக்கே தாங்கள்தான் உரிமையானவர்கள் என்று ஜெர்மன் நாஜிகள் போன்றே நம்பினார்கள்! இந்தியாவைத் தாக்கி அடிமை கொண்ட முகலாயர்களின் தற்கால வாரிசுகளாகவே கருதி இந்தியாவிலுள்ள நமது முஸ்லிம் சகோதரர்களை இவர்கள் நெஞ்சின் அடியாழத்திலிருந்து வெறுத்தார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக அந்த அகண்ட ஹிந்து ராஷ்டிரத்தைத் துண்டாடுவதற்கு இறுதியில் காந்தியும் ஒப்புக் கொண்டார் என்று விஷந்தோய்ந்த குற்றச்சாட்டை அவர்கள் கூர்மை ஆக்கினர். இறுதிவரை பிரிவினையை ஏற்காத தேசத் தந்தையை இவர்கள் அபாண்டமாகச் சந்தேகித்துப் பழித்துக் கூறி, அதை மன்னிக்க முடியாத மாபெரும் துரோகமாகக் கருதினார்கள்.

கோட்ஸேயின் குருநாதன்

இந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் ஒருவனாகவே 1947 ஆகஸ்ட் 15-ம் நாள் நின்றிருந்தான் நாதுராம் விநாயக கோட்ஸே! முப்பத்தேழு வயதுடைய ஒரு பத்திரிகைக்காரன், ஹிந்து ராஷ்டிரம் என்ற பத்திரிகையின் ஆசிரியன். தனிப்பட்ட முறையில் ஓர் ஊனமுற்ற ஆத்மா இவன்.

கோட்ஸேயின் தந்தை ஒரு தபால்காரர்; சநாதன பிராமணர்; மஹாராஷ்டிர பிராமணர்களுக்கே உரிய உயர் ஜாதி மனோபாவம் உடையவர். கோட்ஸே மெட்ரிகுலேஷன் பாஸ் பண்ண முடியாதவன் என்றாலும் மராத்தியிலும், சம்ஸ்கிருதத்திலும் பாண்டியத்யம் உடையவன். சிறு வயதிலேயே மாந்திரீக சக்தி நிறைந்த குழந்தையாக மதிக்கப்பட்டவன். அவன் வாழ்க்கை நடத்துவதற்குப் பலவித முயற்சிகள் மேற்கொண்டு எல்லாவற்றிலும் தோல்வி கண்டவன்.

இவன் ஆர்.எஸ்.எஸ்.ல் சேர்ந்தான். அதன் அதிதீவிரக் கொள்கைகளுக்கு இவனது வெறியுள்ளம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது. தீவிர ஹிந்து மறுமலர்ச்சியின் தோற்றத்தைக் காண்பதைவிட, அதன் எதிரிகளை ஒழிக்கிற துர்த் தேவதையாகத் தன்னை அவன் பாவித்துக் கொண்டான். அவன் வாழ்க்கையில் தேர்ந்தெடுத்த இந்தப் பாத்திரத்தில் தோல்வி அடைய மாட்டான் என்றே நம்பினான்! இவன் ஒரு சாமியார்த்தனம் கொண்ட நபர்; பெண்களை வெறுக்கிறவன், கண்டாலே கூசி ஒதுங்கும் சுபாவம் உடையவன். அவனது தாயைத் தவிர வேறு பெண்களை அவன் மதிப்பதோ, நேசிப்பதோ இல்லை. இவனது குருவாகவும், வழிகாட்டியாகவும், சூத்திரதாரியாகவும் திகழ்ந்தவர் வீர சவர்க்கார்.
புனாவில் வாழ்ந்த ஹிந்து வெறியர்கள் – சிவாஜி, பேஷ்வாக்கள் வரிசையில் வைத்து வீர சவர்க்காரைப் பூஜித்தனர்.

சவர்க்கார் ஹிட்லரைப் போலவே, தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் நிகழ்த்தி இளைஞர்களின் நெஞ்சை அள்ளும் நாவன்மை படைத்தவர். காந்தி, நேரு போன்றே இங்கிலாந்தில் சட்டப் படிப்பை முடித்தவர். அவர் காங்கிரஸில், காந்திஜியின் சாந்நியத்தின் முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல் விலகியதற்குக் காரணம் – சவர்க்காரிடம் உள்ளார்ந்து குடிகொண்டிருந்த தனி மனிதக் கொலைவெறியே ஆகும். அரசியல் கொலையை ஒரு கலையாகப் பயின்றவர் அவர்.

இந்திய நாஜிகள்…

1910-ல் பிரிட்டிஷ் அதிகாரியைக் கொலை செய்ய உத்தரவிட்டு உதவி செய்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார் சவர்க்கார். விசாரணைக்குக் கொண்டு வரும்போது கப்பலிலிருந்து தப்பினார் அவர். பிரான்சுக்குள் பதுங்கியிருந்தபோது பிடிபட்டு வெளியேற்றப்பட்டார். பின் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று அந்தமானில் தீவாந்திர சிட்சை பெற்றார். இரண்டாவது மகாயுத்தம் வெற்றிகரமாக முடிந்த காரணத்தால் கிடைத்த சலுகையினால் பின்னர் விடுதலையானார் வீர சவர்க்கார். அதேபோல பஞ்சாபிலிருந்த ஒரு கவர்னரையும் பம்பாயிலிருந்த ஒரு கவர்னரையும் கொலை செய்ய முயன்ற திட்டத்தில் தோல்வியும் கண்டார் சவர்க்கார்.

அந்தமான் வாழ்க்கைக்குப் பிறகு கொலையாளிகளுடன் தமக்குள்ள உறவை மிகவும் ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொண்டார் சவர்க்கார். இவரோடு மிகவும் அத்யந்த தொடர்பும் அளப்பரிய குருபக்தியும் கொண்டிருந்த அந்த மாறுகண்ணன் நாதுராம் விநாயக கோட்ஸேயின் தலைமையில்தான் சுதந்திர தினத்தன்று புனாவில் இந்திய நாஜிகளின் புதிய தாக்குதலுக்கு முஸ்தீபு செய்யப்பட்டது.

தேசம் சுதந்திரம் பெற்ற நாளன்று வெளியான கோட்ஸேயின் பத்திரிகையில் தலையங்கப் பகுதியில் வெற்றிடம் விட்டுச் சுற்றிலும் கறுப்புக் கட்டித் துக்கம் கொண்டாடப்பட்டது!

அந்தக் கொடியேற்று விழாவில் கோட்ஸே பேசினான்:

“நமது தேசம் துண்டிக்கப்பட்டது ஒரு பேராபத்தான நிகழ்ச்சியாகும். பல கோடி ஹிந்துக்களை துன்பத்திற்கு இழுத்துச் செல்லும் நாள் இது. இந்தக் கொடுமைக்கு காங்கிஸைவிட காந்தியின் செயலே காரணமாகும்.‘’

நாதுராம் கோட்ஸேயின் தலைமையில் நின்ற ஆர்.எஸ்.எஸ். வீரர்கள் அன்று எடுத்துக் கொண்ட பிரதிக்ஞை இதோ:

“நான் பிறந்து வளர்ந்த தாய் நாட்டுக்காக எனது உயிரைத் தரச் சித்தமாக இருக்கிறேன்‘’ என்பதே இந்திய நாஜிகளின் பிரதிக்ஞை!

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு இங்கு மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்காகவும், தொழில் வளர்ச்சிக்காகவும், தேசப் பொருளாதாரத்தைப் பெருக்கி, சுரண்டலற்ற ஒரு சமுதாயத்தை நிர்மாணிக்கப் பெரும் தியாகங்களை நாம் மேற்கொள்ள சித்தமாக இருந்த நேரத்தில், பகைமையும் வெறுப்பும் ஆரிய இனவெறியும் கொண்டு ஓர் ஹிந்து ராஷ்டிரத்தை ஸ்தாபிக்க இவர்கள் விரதம் மேற்கொண்டு எதிர்ப்புரட்சிக்காரர்களாக உருவாயினர்.

இன்று, பிரிந்துபோன பாகிஸ்தானில் எப்படி ஒரு மதத்தின் பேரால் ஆதிக்க வெறியர்களும் ராணுவ சர்வாதிகாரிகளும் ஆட்சி நடத்துகின்றனரோ அதே போன்று ஹிந்து மதத்தின் பேரால், இங்கே வாளேந்தி மற்ற மதத்தினரைப் பூண்டோடு அழிக்கவும் சர்வாதிகார ஆட்சியை நிறுவவும் இவர்கள் அன்றே போர் சன்னத்தர்களாயினர்.

வேதத்தையும் கீதையையும் ஆரிய நாகரிகத்தின் பெருமையையும் வெறும் வெளிப்பூச்சாக, அலங்காரக் கவசமாக அணிந்து இவர்கள் தேசமெங்கும் மதவெறிக் கலகங்களையே விசிறிவிட்டனர்.

ரத்த ஆறு…

நவகாளியிலும் பஞ்சாபிலும் கல்கத்தாவிலும் டெல்லியிலும் சங்கிலித் தொடர் போன்ற வகுப்புக் கலவரங்களினால் ஹிந்து- முஸ்லிம் சகோதரர்களின் ரத்த ஆறு பெருக்கெடுத்தோடச் செய்தனர். வீடிழந்த, மானமிழந்த அகதிகளின் கூட்டம் அலை அலையாய் நாடெங்கும் தோன்றச் செய்தனர்.

மகாத்மா காந்தி கல்கத்தாவில் 1947 செப்டம்பர் முதல் தேதி இந்த வகுப்புக் கலவரங்களைக் கண்டனம் செய்து சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார்.
அவரது மந்திர சக்தியால் கல்கத்தா நகரில் மூன்று தினங்களில் அமைதி நிலவியது. அப்போது ராஜாஜி வங்காள கவர்னராக இருந்தார். காந்திஜியின் உண்ணாவிரதத்தால் என்ன பயன் ஏற்படப் போகிறது என்று எண்ணிய ராஜாஜி “பாபுஜி தாங்கள் குண்டர்களை எதிர்த்து உண்ணாநோன்பு இருப்பதால் என்ன பயன் ஏற்படப்போகிறது?‘’ என்று வினவினார்.

“அந்தக் குண்டர்களுக்கும் கொலைகாரர்களுக்கும் பின்னாலிருந்து தூண்டிவிடுகிறவர்களின் மனமாற்றத்துக்காக நான் உயிரைவிடவும் தயாராக இருக்கிறேன்‘’ என்று சாகும்வரை உண்ணாவிரதத்தை தமது எழுபத்தியெட்டாவது வயதில் காந்திஜி தொடங்கியது கண்டு தேசமே பதை பதைத்தது.

மூன்று தினங்களுக்குப் பிறகு கல்கத்தா நகரத்தில் வாழ்ந்த ஹிந்துக்களும், முஸ்லிம்களும், பிற மதத்தினரும் காந்திஜியிடம் வந்து தாங்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும், எந்த மாற்று மதத்தினருக்கும் இன்னொரு மதத்தினரால் துன்பம் நேராமல் பாதுகாப்பதாகவும் உறுதி தந்தனர். மக்கள் ஒன்றுபட்டு அமைதிகாத்த அதே நேரத்தில் நினைத்தால் நெஞ்சு விம்முகிற நிகழ்ச்சியும் நடந்தது.
இருபது கொலைகாரர்கள் தங்கள் கொலைக் கருவிகளுடன் மகாத்மாவின் முன்னால் வந்து நின்று தங்களை மன்னிக்கும்படியும் காந்திஜி தமது உண்ணாவிரதத்தைக் கைவிடும்படியும், தலை தாழ்ந்து வேண்டியபடி கண்ணீருகுத்து நின்றனர்.

காந்திஜி அந்த ஹிந்து வெறியர்களைத் துன்பப்படுகிற முஸ்லிம் மக்களுக்குத் தொண்டு செய்து அவர்களின் மன்னிப்பைப் பெறுமாறு புத்திமதி கூறி அனுப்பினார். இந்த நிகழ்ச்சி இந்தியர்களின் உள்ளத்தில் மகாத்மாவைப் பற்றியும் அவரது தலைமையில் ஒன்றுபடுகிற மகத்துவத்தைப் பற்றியும் புது நம்பிக்கை ஊட்டியது!

படுகொலைகள்

கல்கத்தாவில் தோல்விகண்ட ஆர்.எஸ்.எஸ். மதவெறி, டில்லியில் அன்றே பேயாட்டம் தொடங்கியது. இந்த டெல்லிக் கலவரங்களை முன்னின்று நடத்தியவர்கள் அகாலி சீக்கியரும் ஆர்.எஸ்..எஸ். குண்டர்களுமே ஆவர். டெல்லி ரெயில்வே ஸ்டேஷனில் செப்டம்பர் மாதம் 3-ம் தேதி முற்பகல் நேரத்தில் கூலி வேலைக்கு காத்திருந்த 12 முஸ்லிம் போர்ட்டர்கள் அங்கேயே படுகொலை செய்யப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து டெல்லியின் கேந்திரமான பகுதி கனாட் சர்க்கஸில் உள்ள முஸ்லிம் கடைகள் சூறையாடப்பட்டு அங்கிருந்த முஸ்லிம் வியாபாரிகள் பலர் கொல்லப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது டில்லி போலீஸ் செயலற்று நின்றது. உள்துறை மந்திரியாக சர்தார் வல்லபாய் படேல் இருந்தார். போலீஸ்காரர்கள் வாளாவிருந்த அந்த நேரத்தில் கனாட் சர்க்கஸில் அந்த பயங்கர கலவரத்தின் நடுவே கதர்க்குல்லா அணிந்த ஒரு மனிதர் தமது கைத்தடியைச் சுழற்றிக் கொண்டு அந்தக் கலகக்காரர்களின் மேல் பாய்ந்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீஸ்காரர்களைச் செயல்படத் தூண்டிக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். அவரே இளைய பாரதத்தின் பிரதமராக பதவி ஏற்றிருந்த ஜவஹர்லால் நேரு.

இந்த அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். அரசாங்க யந்திரத்தையே ஊடுருவி நின்றது…
பழைய டில்லி, – ஆயிரக்கணக்கான முஸ்லிம் கடைகள் சூறையாடப்பட்டும், முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டும் ரத்தக் களமாகக் காட்சி தந்தது. நேருவின் வீட்டுத் தோட்டத்தில் அபயம் பெற்று ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புக்காக ஓடிவந்து தங்கியிருந்தார்கள்.
முஸ்லிம்களுக்கு, அவர்கள் பெண்களாயினும் குழந்தைகளாயினும் வயோதிகர்களாயினும் அடைக்கலம் தருகிறவர்களின் வீடுகள் தீயிட்டுப் பொசுக்கப்படும் என்று ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் அறிவிப்புச் செய்திருந்தனர்.

பல ஹிந்துப் பணக்காரர்களின் வீடுகளில் வேலைக்காரர்களாகப் பணிபுரிந்த ஏழை முஸ்லிம்களை அவர்களது எஜமானர்கள் வீட்டை விட்டுப் பயத்தால் வெளியேற்றிவிட்டனர். உடனே நடுத்தெருவில் அவர்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம் பெண்களைப் பாதுகாக்க முயன்றதற்காக அந்த ஆர்.எஸ்.எஸ். படையினர் பிரதமர் நேருவின் வீட்டுக்கு முன்னாலேயே, பர்தா அணிந்திருந்த ஒரு முஸ்லிம் பெண்ணை இழுந்து வந்து பெட்ரோல் ஊற்றித் தீயிட்டுக் கொளுத்திக் காட்டினர். டில்லி நகரப் போலீஸாரில் பாதிப் பேர் முஸ்லிம்களாக இருந்தபடியால் அவர்கள் அஞ்சி ஓடிவிட்டனர். டில்லி நகரின் போலீஸ் எண்ணிக்கையே 900 ஆகக் குறைந்து போயிற்று.

கருணை முகில்…

மகாத்மா காந்தி கல்கத்தாவிலிருந்து டில்லிக்கு ஓடினார்…
ஒரு பக்கம் மதவெறி என்ற ஆர்.எஸ்.எஸ். நெருப்பும், இன்னொரு பக்கம் அதன் நடுவே நடந்து அன்பு மழை பொழிந்து அதை அணைத்து அடக்கிய காந்தி எனும் கருணை முகிலும் நாட்டில் போட்டியிட்டுச் சமராடின… காந்தியின் வலிமை எத்தகையது; அவர் எவ்வளவு மகத்தானவர் என்றெல்லாம் அக்காலத்தில் நான் நேரிடப் பெற்ற அனுபவத்தால் அறிந்தேன். இன்றுள்ள நிலையில், அந்த அனுபவமில்லாதிருப்பின் எனக்கே அவற்றை நம்புவது சிரமமாயிருக்கும். அன்று அது நாம் கண்ட பிரத்யட்சம். மதவெறியை காந்திஜி வியக்கத்தகுந்த முறையில் ஆத்ம பலத்தால் வென்று அடக்கிக் காட்டினார்.

“நான் உயிருடன் இருக்கும் வரை நாடு பிரியாது என்றாரே காந்தி; இன்று நாடு பிரிந்த பிறகு காந்தி உயிருடன் இருக்கிறாரே!‘’ என்று புனாவில் ஹிந்து ராஷ்டிரம் பத்திரிகை ஆபீசில் குமுறிக் கொண்டிருந்தான் கோட்ஸே!

`காந்திஜியைக் கொல்வது ஒன்றே வழி’ என்று அந்தத் தோற்றுப்போன மதவெறிக் கும்பல் கூடித் திட்டம் போட்டது. அவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்.ஐச் சேர்ந்தவர்களே ஆவர்.
அவர்கள் 1. நாராயண ஆப்தே (34 வயது), 2. வீர சவர்க்கார் (65 வயது), 3. நாதுராம் கோட்ஸே (37 வயது), 4. விஷ்ணு கர்க்காரே (34 வயது), 5. திகம்பர பாட்கே (37 வயது), 6. சங்கர் கிஸ்தயா, 7.கோபால் கோட்ஸே (29 வயது, வினாயக கோட்ஸேயின் தம்பி), 8. மதன்லால் பேஹவா (20 வயது) ஆகிய எட்டு பேர் சேர்ந்து திட்டமிட்டு, அகண்ட ஹிந்து ராஷ்டிர அமைப்புக்குக் குறுக்கே நிற்கிற காந்திஜியைக் கொலை செய்வது என்று தீர்மானித்தனர்.

உலகமே அதிர்ந்து நிலைகுலையத் தக்க அந்தக் கொடுமையை நிகழ்த்திக் காட்டினர். பாபுஜி என்று நாம் அனைவரும் அன்போடு துதித்த நமது தந்தையின் மிருதுவான, தெய்விகம் குடியிருந்த இதயத்தை கோட்ஸேயின் கைத்துப்பாக்கியிலிருந்து சீறிய மூன்று ரவைகள் துளைத்து வழிந்த குருதியில் ஆர்.எஸ்.எஸ். என்று எழுத்துக்கள் வரையப்பட்டிருந்ததை உலகமே கண்டது.

ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது!

சுதந்திர இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில் அழிக்க முடியாத கறையாக அந்தக் கொலை இன்று வரை திகழ்கிறது!

எந்த ஒரு தனி மனிதனின் கொலையையும் விசாரிப்பது போலவே காந்திஜி கொலைக்கு விசாரணை நடத்தப்பட்டது. கோட்ஸேயும், ஆப்தேயும் இரண்டாண்டு முடிவதற்குள்ளாகவே 1949 நவம்பர் மாதம் 15-ம் தேதி தூக்கிலிடப்பட்டார்கள். காமன்வெல்த் பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்ள நேருஜி வெளிநாடு சென்றிருந்த சமயம் பார்த்து ஆர்.எஸ்.எஸ். மீதிருந்த தடையை சர்தார் படேல் நீக்கினார். வீர சவர்க்கார் விடுதலை செய்யப்பட்டார். 1966-ல் தமது 83 வயது வரை வாழ்ந்துதான் செத்தார். இன்னும் சிலர் சிலகாலம் சிறைவாசத்துக்குப் பின் விடுதலை செய்யப்பட்டனர். காந்தியைக் கொன்ற கோட்ஸேயின் தம்பியும் அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவனுமான கோபால் கோட்ஸே வரப் போகிற தேர்தலில் போட்டியிடப் போவதாகச் செய்திகள் வருகின்றன… இவ்வளவு காலத்துக்குப் பிறகு!

மீண்டும் பசப்பல்!

இவ்வளவு காலத்துக்கு இடையில் தடை விதிக்கப்பட்டு, பல கட்சிகளிலும் இயக்கங்களிலும் ஊடுருவிச் செயல்பட்டும் இந்த ஆர்.எஸ்.எஸ். மக்களின் மறதியின் மீது நம்பிக்கை வைத்து நாடெங்கிலும் கிளம்பி இருக்கிறது! இதன்மீது எமர்ஜென்சியின்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டது. ஜனதா ஆட்சியில் தடை நீக்கம் பெற்று, ஜனதா கட்சியில் ஊடுருவி நின்றது.

இப்போது மீண்டும் ஹிந்து ராஷ்டிரத்தைப் பசப்பி, அரசியல் அரங்கில் சுயநலமிகளும் ஊழல் பேர்வழிகளும் பெருத்துவிட்டார்கள் என்ற ஓலத்தோடு, இளைஞர்களின் விரக்தி மனோநிலையை மூலதனமாக்கி `ஞான உபதேசம்’ புரிந்து உலாவ ஆரம்பித்திருக்கிறது.

அவர்கள் தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்றும், கோட்ஸே ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன் அல்லவென்றும், மாற்று மதத்தினரைத் தாங்கள் நேசிப்பதாகவும், ஆயிரம் பொய்களைப் பேசி அழகாக முடிச்சவிழ்க்க முயல்கிற காரியங்கள் நிறையவே நடக்கத் தொடங்கியிருக்கின்றன! …’’

One thought on “‘இந்திய நாஜிகள்’: ஆர்.எஸ்.எஸ். பற்றி ஜெயகாந்தன் !

  1. கே.வி.ராஜ்குமார், தலைவர் - சிஸ்ஃபா.தநா. சொல்கிறார்:

    பாசிசத்தை அழித்தொழிக்க வேண்டும்! வெல்க பாரதம்!! தீர்க்கதரிசி ஜெயகாந்தன் வாழ்க!!! கே.வி.ராஜ்குமார், போளூர், திருவண்ணாமலை,

    Liked by 1 person

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.