வாசுகி பாஸ்கர்
நடந்து முடிந்த தேர்தல் நேரத்தில், “பாசிச பாஜக வந்துடும்” என்று சொல்லிக்கொண்டே பல பேர் பாசிஸ்டுகளாக மாறியிருந்தார்கள். இதை தேர்தல் நேரத்திலேயே எழுதியிருக்கலாம், ஒரு பாதகமுமில்லை. ஆனால் தங்களின் முகநூல் பதிவுகள் மூலம் தான் மக்கள் திரண்டுபோய் வாக்களிப்பதாக நம்பிக்கொண்டிருந்த பலர் ஏற்படுத்திய கருத்துருவாக்கத்திற்கு நானும் மதிப்பளித்து, இதை தேர்தல் முடிவடைந்ததும் எழுதுவது என்று திட்டமிட்டுக்கொண்டேன்.
அம்பேத்கரை அம்பேத்கரின் எழுத்துக்கள் வாயிலாகவே புரிந்துக்கொள்ள நாம் முயன்றோமானால், ஜனநாயகம் / அதிகாரம், இவையிரண்டையுமே அவர் எப்படி அணுகியிருக்கிறார் என்பதனை புரிந்துகொள்ள முடியும்.
தேர்தல் உட்பட நமது அரசியலமைப்பு சட்டத்தின் இயங்கியலை பகுப்பாய்ந்தால், அதிகாரத்தை பல பிரிவுகளாக பிளவுபடுத்தி இயங்கச் செய்திருப்பதை நாம் கவனிக்கலாம். ஒரு ஜனநாயக நாட்டில் அதிகாரமென்பது அப்படித்தான் இயங்க முடியும். நடைமுறையில் அவை பின்பற்றப்படுவதில்லை என்றாலும், அதன் நியதி அதிகாரத்தை பரவலாக்கச்செய்வதுதான்.
இந்திய தேர்தல் முறை என்பது ஒவ்வொரு தனி வேட்பாளருக்குத் தானே ஒழிய, ஒரு சின்னத்திற்கோ கட்சிக்கோ நடத்தப்படுவது அல்ல. இந்தியாவின் ஆகச்சிறந்த ஜனநாயகவாதியான அம்பேத்கர் இந்த தேர்தல் முறையைப் பற்றி குறிப்பிடும்போது “எருது சின்னத்திற்கு வாக்களிக்கச் சொன்னால் எருது சின்னம் மட்டும்தான் கருத்தில் கொள்ளப்படுகிறதேயொழிய, அந்த எருது சின்னத்திற்கு பின்னால் இருக்கும் வேட்பாளரை பற்றி யாரும் கவலை கொள்வதில்லை” என்கிறார், இந்த போக்கை எதிர்க்கிறார்.
மார்க்சின் வளர்ப்புகளாக வலம் வருகிறவர்கள், அம்பேத்கரின் தோன்றல்களாக தங்களை பிரகடனப் படுத்திக்கொள்பவர்கள், பெரியாரின் சுயமரியாதை வழிவந்ததாக சொல்லிக்கொள்கிறவர்கள் நிச்சயம் அம்பேத்கரின் மேற்சொன்ன வரிகளுக்கு மதிப்பளிப்பவர்களாக இருந்திருக்க வேண்டும்; அதனடிப்படையில் அவர்கள் முன்னிறுத்துகிற வேட்பாளர் தேர்வு இருந்திருக்க வேண்டும். இம்மாதிரியான ஜனநாயக பண்பை கடைப்பிடிப்பதை முன்னிறுத்திதான் அவர்கள் பாசிஸ்டுகளிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள முடியும்.
இல்லையேல் பாசிசத்திற்கு எதிரான ஜனநாயக சக்தியாக தங்களை தாங்களே சொல்லிக்கொண்டு “தாங்கள் மட்டுமே மீட்க வந்த மீட்பர்கள்” என்று சொல்வதில் எந்த அர்த்தமுமில்லை.
நடந்த முடிந்த தேர்தலில் எதை சாதித்துக் கொண்டார்களென்றால், அசாதாரணமான ஒரு சூழலை சுட்டிக்காட்டி அண்ணல் சொன்னதைப்போல தங்களின் எருது சின்னத்திற்கு பலத்தை சேர்த்துக்கொண்டார்கள் அவ்வளவே. அந்த எருது சின்னத்தை காட்டி கல்விக்கொள்ளையனை நிறுத்தினாலும், வாரிசுகளை நிறுத்தினாலும், சாதித் தலைவனை நிறுத்தினாலும், நீங்கள் வாக்களித்தே ஆக வேண்டுமென்கிற நிர்பந்தத்திற்கு வாக்காளர்களை தள்ளியிருக்கிறார்கள்.
ஒருபடி மேலே போய், தேர்தல் மட்டுமே சமூக அரசியலின் நிறைவுக்காட்சி என்பதை போல, பாசிசத்திற்கு எதிராக பேசுகிற யாரொருவரையும் “யாருக்கு வாக்களிக்க வேண்டும்?” என்கிற கேள்வியை முன் வைத்து, அதற்கு பதிலளித்தால் தான் அவர் நம்பகத்தன்மையான சமூகநீதி போராளி என அவரது சமூகம் குறித்த மதிப்பீடுகள் வரையறுக்கப்பட்டது. இதுவொரு ஆதிக்க மனோபாவம், அதிகாரத் திமிறினால் உற்பத்தியாகிற கருத்துக்கள்.
அதிகாரமென்பது இங்கே கட்சியாக இருக்கிறது, அந்த அதிகாரத்தை, அங்கீகாரத்தை பயன்படுத்தி கணிசமான சீட்டுக்களை கூட்டணி தலைமையிடம் இருந்து அவர்களால் பெற முடிகிறது, அவர்கள் பெற்று விட்டதுனாலவே அவர்கள் சார்ந்த ஏதோவொரு கட்சியின் ஏதோவொரு வேட்பாளருக்கு வாக்களிப்பது அறமாக பார்க்கப்பட்டது, 2016 ல் நடந்ததைப் போல மூன்றாவது அணி ஒன்று உருவாகி முற்போக்கு பேசும் கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தால் நான் என்ன செய்திருக்க வேண்டும்? அப்போதைய அறமாக எது இருக்கும்? அது போல இனி நடக்கவே நடக்காது என்றோ அல்லது நடந்ததில்லை என்று நம்மால் மறுக்க முடியுமா? அறம் என்பதும் தர்மம் என்பதும் கட்சிகள் வகுக்கின்றனவையாகத்தான் இருக்க முடியும் என்று நான் ஒருபோதும் நம்புபவனல்ல.
ஒரு தொகுதியில் பத்து வருடமாக உழைத்து களப்பணியாற்றிய சுயேட்சையாகவோ, அல்லது இக்கூட்டணியில் இடம் பெற முடியாத சிறிய கட்சியாகவோ, அல்லது கடைசி நேரத்தில் துரத்தியடிக்கப்பட்ட வேறொரு கட்சியாகவோ இருந்தால், நான் அவர்களுக்கு வாக்களிக்க கூடாதா? மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பாமக இடம் பெறுவதற்கான சூழலிருந்ததையும், அந்த பேச்சு வார்த்தையும் யாவரும் அறிந்ததே. ஒருவேளை பாமக இடம் பெற்றிருந்தால் அந்தச் சூழல் எப்படியிருந்திருக்கும்? நாம் யார் பக்கம் வாக்களிப்பது? ஆக கூட்டணி பேரத்தின் அடிப்படையில் Probability யால் இங்கே முற்போக்கு என்று ஒன்று இருந்திருக்கிறது.
இந்த பைனரி அரசியலை உலகத்தில் எந்த ஜனநாயகவாதியும் ஏற்றுக்கொள்ள மாட்டான். அதிகாரம் / பிரதிநித்துவம் / அரசியல் என்பது பல மட்டங்களில், பல தனிநபர்களால், பல இயக்கங்களால், பல கட்சிகளால் பகிர்ந்தளிக்கப்பட்டு இருக்க வேண்டியவை. மாற்றம் என்பது திரட்சியானது, குறிப்பிட்டவரால் சாத்தியப்படக்கூடியவை அல்ல, அதில் தேர்தல் அரசியல் ஒரு துணுக்கு, அதில் ஈடுபடுவோர் ஈடுபடுங்கள், வியூகங்கள் வகுத்து முடிவெடுங்கள், பிரச்சாரம் செய்யுங்கள், ஒரு பாதகமுமில்லை. ஆனால் “நாங்கள் மட்டுமே சமூகத்தை மாற்ற வந்த தேவ தூதர்கள், எங்களை ஆதரிப்பது மட்டுமே முற்போக்கு” என்று ஆணவம் பேசாதீர்கள்.
இந்தத் தேர்தல் முறை சிறிய கட்சிகளுக்கு எதிரானதாக இருக்கிறது, சின்னம் ஒதுக்குவதில் அரசியல் இருக்கிறது, அம்பேத்கர் சொல்வதைப்போல எருமையானாலும், கழுதையானாலும், நாயானாலும் அவர்களை வெற்றி பெற வைக்க சின்னம் முக்கிய பங்கு வகிக்கிறது, ஏற்கனவே establish ஆன கட்சிகளை தவிர தமிழகத்தில் தேசிய கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி கூட இரண்டாம் நிலைக்கு வருவதற்கான சாத்தியங்களில்லை. அதிமுகவை அடிமை கட்சி என்பார்கள், ஆனால் அந்த அடிமை அதிமுக அழிந்து கம்யூனிஸ்டு கட்சிகள் இரண்டாம் நிலைக்கு வருவதை விரும்ப மாட்டார்கள்.
மத்தியில் காங்கிரசுக்கு பிஜேபி வேண்டும், பிஜேபிக்கு காங்கிரஸ் வேண்டும், மாநிலத்தில் திமுகவுக்கு அதிமுக வேண்டும் அதிமுகவுக்கு திமுக வேண்டும். வசதியானதொரு அரசியல் செய்ய இந்த கட்டமைப்பு இவர்களுக்கு அவசியம். இந்த கட்டமைப்பில் இருக்கும் யாரும் தேர்தல் சீர்திருத்தம் குறித்து அழுத்தம் கொடுக்கவோ, போராட்டம் செய்யவோ போவதில்லை. இந்த குரலே வெகு சிலரால் எழுப்பப்படுகிறவையாக தான் இருக்கும், அவர்கள் எந்த நேரத்திலும் உங்களை இந்தக் கேள்வி கேட்பார்கள், அவர்களை தேர்தலை காரணம்காட்டி character assassination செய்வதும் பாசிசம் தான், அரசியலில் “எந்த நேரத்தில் எதை பேச வேண்டும்” என்கிற விதியே இருக்கக்கூடாது. ஆனால் அந்த விதியை நானும் என்னையறியாமல் ஏற்று தான் காலம் கடந்து பதிவு செய்துக் கொண்டிருக்கிறேன்.
ஆளுங்கட்சியின் பணப்பட்டுவாடாவை பற்றி மட்டும் தான் நாம் பேசுகிறோம், ஆனால், இந்த தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் புழங்கிய பணம் மட்டுமே நாலாயிரம் கோடி வரை இருக்கலாம் என்கிறார்கள். இவையல்லாமல் சாதித்தலைவனுக்கு தலை வணங்க வேண்டியிருக்கிறது, கொலைகாரனுக்கு வணக்கம் வைக்க வேண்டியிருக்கிறது, வருடம் முழுக்க பேசும் முற்போக்கிலிருந்து விலகி நின்று முற்றிலும் வேறான நிலைபாட்டை எடுக்க வேண்டியிருக்கிறது, இத்தனை பிழைகளையும் பொறுத்து “இது தான் யதார்த்தம்” என்று நீங்கள் இருக்கலாம், ஆனால் நீங்கள் சொல்லிக்கொடுத்த அரசியலுக்கு எதிராக நீங்களே திரும்பும் போது அதை கேள்விகேட்பது தான் அந்த தத்துவத்தின் வெற்றி.
தேர்தல் என்பது குறிப்பிட்ட கட்சிகளின் வெற்றி / தோல்வியை மட்டுமே தீர்மானிக்கக்கூடியதல்ல. உங்களை நம்பி தேர்தலை சந்தித்தவருக்கு உங்கள் வாக்குகள் ஊக்கத்தை கொடுக்கிறது, அவர்தம் உழைப்பு அங்கீகரிக்கப்படுகிறது, அவரை மேலும் உத்வேகப்படுத்துகிறது, பணத்திற்கும் அதிகாரத்திற்கும் அப்பாற்பட்டு சிந்திக்கும் மக்கள் இருக்கிறார்கள் என்று நம்பிக்கையூட்டுகிறது.
தனிநபர் திறனாய்வு அவசியம், இல்லையேல் தோழர் ஆதவன் தீட்சாயாவின் சிறுகதையை போல கழுதையை நிறுத்துவார்கள், நாயை நிறுத்துவார்கள், அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டிய அவசியம் நமக்கில்லை.
“எனக்கு வாக்களித்தால் தான் நீ ஜனநாயகவாதி என்று எந்த ஜனநாயகவாதியும் சொல்ல மாட்டான்”
வாசுகி பாஸ்கர், எழுத்தாளர்; விமர்சகர்.