பீட்டர் துரைராஜ்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க இருக்கிறது. நம் சமூகத்தில் கருத்துருவாக்கத்திலும், அணிச் சேர்க்கையிலும் சாதி ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இந்த நிலையில் மதுரை வழக்கறிஞர் தி.லஜபதி ராய் ‘நாடார் வரலாறு கறுப்பா…? காவியா…?’ என்ற நூலை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.
நூல் வெளியீட்டு விழாவை மதுரை, உலக தமிழ்ச்சங்க அரங்கில் நடத்த முன் அனுமதி பெற்றிருந்தார்கள்.இறுதி நேரத்தில் அரங்க அனுமதி ரத்து செய்யப்பட்டுவிட்டது. நீதிமன்ற தலையீட்டிற்குப் பின்பு அதே இடத்தில், அதே நாளில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கிறது. கருத்துரிமைக்கு எதிரான சூழல் நிலவி வரும் இந்தக் காலகட்டத்தில் இந்தச் சம்பவம் இயற்கையாகவே முக்கியத்துவம் பெறுகிறது. உண்மைதான்; இந்த நூல் சங்கடமான கேள்விகளை ‘தமிழிசைகளை’ நோக்கி எழுப்புகிறது. நீங்கள் நடந்து வந்த பாதை எது? நீங்கள் பிடிக்க வேண்டிய கொடி எது என்று கேட்கிறார் நூலாசிரியர்.
தி. லஜபதி ராய் புதிதாக எந்த சம்பவங்களையும் சொல்லவில்லை. சிறு நூல்தான். கடந்த நூற்றாண்டில், தென் தமிழகத்தில் நாடார்கள் (அப்போது கிராமணி, சாணார் என்று அழைக்கப்பட்ட) நடத்திய பல்வேறு போராட்டங்களை சொல்லுகிறது. வர்க்கப் புரிதலோடு பார்க்கிறது. உனக்கு நண்பர்களாக யார் யார் இருந்தார்கள் என்று சொல்லுகிறது. யாரோடு தீ பயணிக்க வேண்டும் என்று கோடிட்டு காட்டுகிறது. எண்பதுகளில் நடந்த மண்டைக்காடு கலவரம், சிபிஎஸ்இ- க்கு எதிராக நடந்த வழக்கு விவரம் வரை இந்த நூலில் குறிப்புகள் வருகின்றன. செறிவான நூல் இது.
முதல் அத்தியாயத்தில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நாடார் ஆளுமைகளை இந்த நூல் சொல்லுகிறது. அதன்பின்பு அந்த சாதி குறித்து வந்த ஆய்வுகளை சொல்லுகிறது. அதனைத் தொடர்ந்து கமுதி மீனாட்சி அம்மன் கோவில் ஆலைய நுழைவுப் போராட்டம் (1897), சிவகாசி வன்கொடுமை(1899), வைக்கம் போராட்டம் (1925), சுசீந்திரம் கோவில் நுழைவு போராட்டம் (1933), தோள் சீலைப் போராட்டம் (1812 -1859), அய்யா வைகுண்டர் பங்களிப்பு, வடக்கன்குளம் தேவாலயத்தில் வெள்ளாளர் – நாடார் சாதியினரைப் பிரிக்கும் சுவர் இடிப்பு (1910), (மண்டைக்காடு ) வேணுகோபால் ஆணையம் போன்ற சம்பவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
இது பல கதைகளை மீண்டும் சொல்லுகிறது இந்நூல். சாணார் என்ற பெயரை நாடார் என்று மாற்ற நடந்த இயக்கம், கன்னியாகுமரி மாவட்டத்தில் 55 சத இசுலாமியர்களும், கிறிஸ்தவவர்களும் இருக்கும் வரலாற்றுத் தேவை, நாடார்களின் உயிரைக் காப்பாற்றிய இசுலாமிய, கிறித்தவ மக்கள், சாதிப் போராட்டத்தில் வேளாள, கம்மாளர், மறவர் இன மக்களுக்கு எதிராக, நாடார் மக்களின் பக்கம் நின்று தடுப்புச் சுவரை உடைத்த சேசு சபையினர், அதனால் இந்து மதத்திலும் நிகழ்ந்த மாற்றங்கள் என பலவற்றை சொல்லியபடியே நூலை நகர்த்துகிறார் லஜபதிராய்.
தோள் சீலை அணிய வேண்டுமெனில் கிறித்தவ மதத்திற்கு மாற வேண்டும்; அங்கு போனால் இலவசமாக நிலவுடமைக்காரர்களுக்கு அடிமை உழைப்புத் தர வேண்டியதில்லை. அதன் விளைவாக வருவதுதான் சிவகாசி வன்கொடுமைகள்.
இதன் தொடர்பாகத்தான் சுய மரியாதை இயக்கங்கள் வளர்கின்றன. சௌந்திர பாண்டியன் போன்ற சிறந்த ஆளுமை முகிழ்கிறது. இவர் மனித குல மேம்பாட்டிற்கு ஆற்றிய பணிகள் கவனிக்கத் தக்கன; இன்றும் பொருத்தம் உடையன. (தாழ்த்தப்பட்ட வர்களுக்கு இடமில்லை என்றால் கல்வி மானியம் ரத்து). மூன்று முதல் ஐந்து சதம் வரை இருக்கும் நாடார்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தங்களுக்கான விகிதாச்சாரத்தைவிடவும் அதிகம் அடைந்துள்ளனர்.
“வரலாற்றை மீள்பதிவு செய்வது மட்டுமே இந்த நூலின் நோக்கம்” என்று சரியாகவே சொல்லுகிறார் ஆசிரியர். கமுதி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் நுழைவு மறுக்கப்பட்ட அதே காலகட்டத்தில்தான் திரு.பாஸ்கர சேதுபதி ( கோவிலின் பரம்பரை அறங்காவலர்) இந்து மதத்தின் அருமைப் பெருமைகளை அயல்நாடுகளில் வியந்துரைக்க விவேகானந்தரின் சிகாகோ பயணத்திற்குப்(1893) பொருளுதவி செய்தார்”. மன்னரை எதிர்த்து வைகுண்டர் நடத்திய தீரம் நிறைந்த போராட்டம்; அது இன்றைக்கும் அம்மா வழி ? அய்யா வழி என தொடர்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டம் இன்று முடிந்து விட்டதா ? “2019 ம் ஆண்டிலும் கன்னியாகுமரி மாவட்டம் தேவசம் போர்டுக்கு கட்டுப்பட்ட கோவில்களில் மேலாண்மை அதிகாரம் உயர் சாதியினர் கட்டுப்பாட்டில் மட்டுமே இருப்பதும் நாடார்கள் காவலர்களாக பணியாற்றுவதும் உண்மை” என்கிறார் லஜபதிராய்.
தீண்டத்தகாத சாதியினர் என்று சொல்லி நாடார்களை கோவில்களிலோ, தெருக்களிலோ, நுழையவிடாமல் தடுத்த அதே உயர்சாதியினர்தான் தங்களால் உரிமை மறுக்கப்பட்ட மிச்சமிருக்கும் எளிய மக்களை இந்துக்கள் என்று முத்திரை குத்தி இந்து மதத்தின் காலாட்படையினராக மாற்ற முயற்சி செய்கிறார்கள் என்கிறார் நூலாசிரியர்.
வெறுமனே சாதிப்பிரச்சினை என்றும் இந்த நூலை ஒதுக்க முடியாது. ஏனெனில் பெரும் நிலவுடமையாளர்களான சில நாடார் குடும்பங்கள் (பொன்.ராதா கிருஷ்ணன்கள்) ஆலய நுழைவு போராட்டத்தின் போது உரிமைக்காக போராடிய மக்களுக்கு எதிராக இருந்தனர் என்பதும், தோள் சீலை அணிய அனுமதிக்க கூடாது என்று திருவிதாங்கூர் மகாராஜாவிற்கு விண்ணப்பம் அளித்தனர் என்பதும் வரலாறு. எனவே பொன்.’ராதாகிருஷ்ணன்கள்’. ஆர்எஸ்எஸ் அமைப்பின் வெற்றிகரமான காலாட் படையினராக இருக்கலாம்! மற்றவர்கள் ? மண்டைக்காடு கலவரத்தில் மீனவர்களும், நாடார்களும் உயிரை இழந்திருக்கிறார்கள். ஆனால் பலனை அறுவடை செய்தது?
லஜபதி ராய் போற்றதலுக்கு உரியவர். இந்த நூல் மிகப் பெரிய சலனத்தை , விவாதத்தை எல்லா மட்டங்களிலும் ஏற்படுத்தும்.
வெளியீடு: லஜபதிராய், மனை எண் 39, ஐஸ்வர்யம் நகர், புதுத் தாமரைப் பட்டி, மதுரை- 625 107/ரூ100/140 பக்கம்/2019.
நூலை ஆன்லைனில் வாங்க…
https://www.vinavu.com/product/nadar-varalaru-karuppa-kaaviya/
பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர்.