நவீன அரங்கியலை உள்வாங்கிய நவீன அரசியல்வாதி ராகுல்!

அ. ராமசாமி

அ.ராமசாமி

அரங்க அமைப்புக் கலையை அறிந்தவர்கள் இந்த மேடை அமைப்பை முன்முற்ற அரங்கம் (Front Project Stage ) என்று சொல்வார்கள். அழகிப் போட்டிகள், ஆடை கள், அலங்காரப் பொருட்களின் அறிமுகம் போன்றவற்றை அறிமுகப்படுத்தும் நோக்கத்திற்குப் பயன்படும் தன்மை இந்த அரங்க அமைப்புக்கு உண்டு. இயல்பான உரையாடல் வழியாகப் பார்வையாளர்களோடு நெருங்கிவிட விரும்பும் இந்த அமைப்பைப் பிரேசிலின் நவீன அரசியல் நாடகக்காரன் அகஸ்டோ போவெல் 1980 களின் தொடக்கத்தில் முன்வைத்தான். அவனைத் தமிழ் நாடகக்காரர்கள் கண்ணுக்குப் புலப்படாத அரங்கியல்காரனாக (Invisible Theater) அறிவார்கள். புலப்படா அரங்கிற்கும் முன்னால் அவன் இயங்கிய அரங்கத்திற்குப் பெயர் முன் முற்றமேடை (Forum Theatre)

இதுவரை நமக்கு அறிமுகமான படச்சட்டகச் செவ்வக மேடையில் (Proscenium Stage) சிறப்பான ஒளியமைப்புகள் மூலம் பேச்சாளர்களின் மீது கவனக் குவிப்பைச் செய்ய முடியும். என்றாலும் அதில் பார்வையாளர்கள் நெருக்கமாக உணரும் சாத்தியங்கள் குறைவு. செவ்வக மேடையில் பேசும் நபர் அசையும் நபராக இருக்கவிரும்பினால் கூடத் தட்டையாக ஒரு நேர்கோட்டில் தான் நகர முடியும். இடவலமாகவும் வல இடமாகவும் பார்வையாளர்களுக்கு உடலைப் பாதியளவு காட்டியபடி நகரும்போது மேலிருந்தோ பக்க வாட்டிலிருந்தோ வரும் ஒளியின் குவிதல்வழி பார்வையாளர்களின் கவனத்தை அவர் மீது நிரப்பி விடலாம். அந்த முயற்சிகளைக் கூட இந்திய அரசியல்வாதிகள் தங்கள் மேடைப்பேச்சுகளில் அதிகம் முயற்சி செய்ததில்லை.

தமிழக அரசியல் மேடையில் எம்.ஜி.ராமச்சந்திரன் சில முயற்சிகள் செய்திருக்கிறார். நிலையான ஒலிபெருக்கியை விட்டு விலகி மேடையின் முன்னால் வந்து குறிப்பான பார்வையாளரை நோக்கிக் கேள்விகளை எழுப்பிப் பதிலைப் பெற்று உரையாடும் ஒருசில காட்சிகளை அவரது மேடைப்பேச்சில் நானே பார்த்திருக்கிறேன்.இந்திய அளவில் ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ்காந்தி இதே போல முயன்றிருக்கிறார்.அந்த முயற்சியில் சில ஆபத்துகள் உண்டு.

எதிர்க்கதாபாத்திரத்தோடு பேசும்போது கண்ணைப் பார்த்துப் பேசவேண்டும் (Eye contact) ) என்பது நடிப்புக்கலையில் முக்கியமான பாடம்/ பயிற்சி. கண்களைத் தொடர்தல் ஒரு சுவாரசியமான விளையாட்டு. நாடகப் பயிலரங்குகளில் எப்போதும் முயல்வதுண்டு.

கண்களைப் பார்த்துப் பேசுவதன் மூலம் நெருங்கி வரவேண்டும் என்ற நோக்கம் நிறைவேறும்.இந்த முன் முற்றமேடை அதற்கான நல்லதொரு வடிவம். இந்த முறையை எல்லா இடங்களிலும் செயல்படுத்தி விட முடியாது.

ஒழுங்குபடுத்தப்பட்ட -ஸ்டெல்லா மேரிஸ் போன்ற கல்லூரிகளில் அரசியல் புரிதல் கொண்ட மாணவப் பார்வையாளர்களோடு நடத்தும் உரையாடலில் வெற்றிகரமாக முயற்சி செய்யலாம். அதைச் செய்ததால் இன்று நடந்த தேர்வில் ராகுல் காந்தி 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெறும் மிகத்தரமான (Out standing ) அரசியல்வாதியாக ஆகிவிட்டார். அவருக்குத் தேர்வு வைத்த மாணவிகளின் வினாக்களும் தேர்ச்சியான நிபுணர்களின் வினாத்தாளைப் போல இருந்தன.

நடந்தது கொண்டாட்டமான கலைநிகழ்ச்சியா?
அரிஸ்டாடியலிய இன்பியல் நாடகமா?
இந்திய குடிமைத்தேர்வில் ஆட்சிப்பணிக்குத் தேர்வில் நேர்காணல் செய்யப்படும் ஒருவருக்கு நடக்கும் நேர்காணல் தேர்வா? எனப் பலவிதமான அனுமானங்களை உருவாக்கித் தந்த நிகழ்வாக இருந்தது.

இந்திய அரசியல் நவீனத்தன்மைக்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. அதற்கான தகுதியோடு ஒரு நவீனத்தலைவர் உருவாகியிருக்கிறார் . அந்த முக்கால் மணி நேர நிகழ்ச்சியை ஒன்றிரண்டு தடவை பார்த்தேன்; கேட்டேன்; மகிழ்ச்சியாக இருக்கிறது.

அ. ராமசாமி, பேராசிரியர்; எழுத்தாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.